June 20, 2013

சன்னல் –சுந்தர ராமசாமி

மனித மனம் சதா பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு வஸ்து. அது ஓரிடத்தில் நிலையாக நிற்பதென்பது சாத்தியப்படாத ஒன்று. இந்த உலகம் பூராவும் ஒரு நொடியில் சுற்றித்திரும்ப அதனால் மட்டுமே முடியும். அதன் சஞ்சாரமே நம் வாழ்க்கை. அது உருவாக்கும் கற்பனைகளிலேயே நாம் வாழ்கிறோம். நம்மை ஒரு அறையில் அடைத்து வைக்கும்போது என்ன நேர்கிறது? நம் கற்பனைகள் வரண்டுபோகின்றன. எனவே மனம் மேற்கொண்டு கற்பனையை வளர்க்க இயலாததாக உள்ளது. மனித உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் உணவு தேவை. அது பெரும்பாலும் நம் கண்களின் வழியாகவே தன் உணவை எடுத்துக்கொள்கிறது. அது முடியாமல் போகும்போது மனதுக்கு தீனி கிடைக்காமல் போகிறது. அது நம் உடல் நிலையை மேலும் பாதிக்கிறது.

வீட்டிற்கு சன்னல் என்பது வெறும் உடலின் சுவாசத்துக்கும், காற்றோட்டத்துக்கு மட்டும் அவசியமானது அல்ல. மனம் சுவாசிக்கவும் சன்னல் அவசியம். அது கிட்டாத போது நாம் மூச்சுத்திணறுவது தவிர்க்க முடியாததாகிறது. அதுவும் தனிமை தரும் துன்பத்திலிருந்து தப்பிக்க மனம் கொள்ளும் இத்தகைய பிரயாணம் அவசியமாகிறது.

அந்த தனிமையின் ஏக்கத்தை அற்புதமாகப் படம் பிடிக்கும் கதை சுந்தர ராமசாமியின் சன்னல். தனிமையைப் போல் மனிதனுக்கு பைத்தியம் பிடிக்க வைப்பது வேறொன்றுமில்லை. தனிமையோடு நோயும் சேர்ந்துகொண்டால் கேட்கவே வேண்டியதில்லை. நிலைமை மிக மோசமானதாக இருக்கும். எனவே தனிமையைப் போக்க மனம் பல பிரயத்தனங்கள் செய்கிறது. கிடைக்கும் சூழ்நிலையில் தன் தனிமையை உணராமலிருக்க அது கற்றுக்கொள்கிறது. அது சன்னலாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவதொன்றாக இருக்கலாம். ஏதோ ஒன்றின் வழியாக அது தன் பயணத்தை மேற்கொள்வது முக்கியமானது. அப்படி அது பயணிக்கும் போதுதான் உடல் ஆரோக்கியம் பெறுவது சாத்தியமாகிறது.

கண்கள் காணும் காட்சிகளை, மனம் தன் தனிமையை நீக்கும் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்வதை, நுட்பமான சித்தரிப்புகள் மூலம் நம் மனதில் அழகாக பதித்திருக்கிறார் சுந்தர ராமசாமி. வாழைத்தோட்டம், மின்சாரக் கம்பிகள், காக்காய்கள், நிலா, ரோஜாக்கள், தும்பிகள், நட்சத்திரங்கள், மேகங்கள் என கண்ணில் படும் அனைத்தும் வெகு அழகான, நுணுக்கமான விவரிப்புகளுடன் கதை முழுதும் விரவிக்கிடக்கிறது. உதாரணத்திற்குப் பின்வரும் ரோஜாக்கள் பற்றிய வர்ணனையைப் பாருங்கள்:

roja கதையின் ஒவ்வொரு வாக்கியத்தையும் இழைத்து இழைத்து செதுக்கியிருக்கிறார். அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் அவ்வப்போதே பிரசுரமாயிருக்கின்றன. ஆனால் இந்தக் கதை மட்டும் நான்கைந்து ஆண்டுகளாக கையெழுத்துப் பிரதியாக இருந்ததாக அவர் சொல்கிறார்.


Related Posts Plugin for WordPress, Blogger...