June 19, 2013

குதிரை –சுஜாதா

நம் அனுபவத்தில் இதுவரை நிகழாத ஒன்று நிகழும்போது ஏற்படும் சிக்கல்களை தனக்கேயான நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் சுஜாதாவின் குதிரை என்ற கதை. மனிதர்களை நாய் கடிப்பதும் அதற்கு வைத்தியம் பார்ப்பதும் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பார்த்தும் பழகியதுமான ஒரு நிகழ்வு. ஆனால் அதுவே ஒரு குதிரை கடித்தால்?

கிச்சாமி என்னும் கிருஷ்ணசாமியை ஒரு நாள் குதிரை ஒன்று கடித்துவிடுகிறது. அவன் மனைவி முதல் டாக்டர் வரை அதை விநோதமாகப் பார்க்கிறார்கள். டாக்டருக்கு நாய்க்கடிக்கு வைத்தியம் செய்வது தெரியும். குதிரைக் கடிக்கு என்ன செய்வது? எந்த மெடிகல் டிக்ஸனரியிலும் அதற்கு விளக்கம் இல்லை. அதற்காக வைத்தியம் செய்யாமல் விடமுடியமா? டாக்டரும் தனக்குத் தெரிந்த வைத்தியத்தைச் செய்கிறார்.

கிச்சாமியைப் பற்றி சொல்லும்போது சுஜாதா தனக்கேயான நடையில் இவ்வாறு சொல்கிறார்:

தொழில், தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படித்து, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு. மனைவி, குழந்தை, மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான்.

ஆனால் குதிரை கடித்தபிறகு அவன் குதிரை கிச்சாமி என்று பிரபலமாகிறான். ஒரு மனிதன் பிரபலமாக பெரிய காரணங்களோ, சாதனைகளோ தேவையில்லை. சில சமயம் அற்ப காரணங்கள் கூட அதற்குப் போதுமானது என்பதை இந்தக் கதையின் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார் சுஜாதா.

Related Posts Plugin for WordPress, Blogger...