May 15, 2013

ஒட்டகம் –அ.முத்துலிங்கம்

நம் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் சிறிய விசயங்கள், பல பெரிய விசயங்களில் தவறான முடிவை எடுக்க உந்துதலாக அமைந்துவிடுகின்றன. தினமும் நாம் எதிர்கொள்ளும் அந்த விசயங்கள் தரும் அனுபவங்களின் அளவுகடந்த வெறுப்பு நம் மனதில் ஏற்படுத்திவிட்ட வடுவின் விளைவாக, அப்போது அதிலிருந்து தாற்காலிகமாகத் தப்பித்தால் போதும் என்று தோன்றுவதால், நாம் அத்தகைய முடிவுகளை எடுத்துவிடுகிறோம். இத்தகைய சிக்கல், பல சமயம் அவன் வாழும் சமூகத்தில் எடுக்கப்படும் சில தவறான முடிவுகளால் ஏற்படுகிறது. அது அவனை பாதிப்படையச் செய்கிறது. இன்று மினசாரப் பற்றாக்குறை காரணமாக அணுஉலை வேண்டும் என்கிறோம். ஆனால் நாளை அதுவே வாழ்க்கையை சீர்குலைக்கும் நாசகார சக்தியாகலாம். எனவே ஒரு சமூகத்தை பாதிக்கும் முடிவுகளில் நாளை பற்றிய முடிவுகளை இன்று தீர்மானிப்பது நம் தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் நாம் தீர்க்க தரிசனத்துடன் நடந்துகொள்வது நல்லது. இல்லையேல் சமூகத்தின் முடிவுகள் தனிமனிதனை பாதிப்பதிலிருந்து காப்பாற்ற முடியாது.

இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது அ.முத்துலிங்கத்தின் ஒட்டகம் கதை. இந்தக் கதை சேமாலியா நாட்டில் நடக்கிறது. அங்கே நிலவும் கொடுமையான தண்ணிர் கஷ்டத்தில் தவிக்கும் மைமுன் என்ற இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மைமுன் தினமும் அதிகாலையில் எழுந்து பதினாறு மைல் தூரம் நடந்து தண்ணீர் கொண்டுவருகிறாள். அந்தக் காரியம் அவளை மிகவும் சோர்வடைய வைக்கிறது. ஐ.நா. சிறகம் அவர்கள் ஊருக்கு வந்து என்ன வசதி வேண்டும் என்று கேட்டபோது பெண்கள் ஆழ்துழாய் கிணறு வேண்டுமென்கிறார்கள். ஊர்த் தலைவரான அவள் தகப்பனார், “மசூதியைக் கட்டித்தா மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்” என்று சொல்கிறார். அவ்வளவு நிதியை ஒதுக்க முடியாத ஐ.நா. சிறகம் இதனால் பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுகிறது.

இந்நிலையில் தினமும் தண்ணீர் எடுக்கவரும் அவளை அலிசாலா விரும்புகிறான். அவளோ பக்கத்து ஊரைச்சேர்ந்த ஐம்பது வயது கிழவனை மணக்கச் சம்மதிக்கிறாள். திருமணமும் நடக்கிறது. ஊருக்கு போகும்போது அவள் அழுகிறாள். விருப்பப்பட்டுத்தானே திருமணம் செய்துகொண்டாய் இப்போது ஏன் அழுகிறாய் என்று அவள் தாயார் காரணம் தெரியாமல் கேட்கிறாள். அதற்கு அவள், “பக்கத்து ஊரில் தண்ணீர் குடம் குடமாக வருகிறதாம். பதினாறு மைல் நடக்கத்தேவையில்லையாம். அதனால் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று சொல்கிறாள்.

இந்தக் கதைக்கும் ஒட்டகம் என்ற தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? ஒட்டகம் பல நாள் தண்ணீர் அருந்தாமல் வாழக்கூடிய ஒரு பிராணி. தேவையான போது தண்ணீரை மொத்தமாகக் குடித்துக்கொள்ளும். அதே போல் மைமுன், தன் வாழ்க்கை முழுமைக்குமான தண்ணீரை இந்தத் திருமணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாள். தினமும் தேவைப்படும் தண்ணீரைப் பற்றிய கவலையைவிட இது எவ்வளவோ மேல் என்று அவளுக்குத் தோன்றிவிடுகிறது. மேலும் ஒட்டகம் முள்ளை விரும்பிச் சாப்பிடும். அதுபோல் அவளும் அந்தக் கிழவனுடடான திருமணத்தை, முள்ளாக இருந்தபோதிலும், விரும்பி ஏற்றுக்கொள்கிறாள்.


Related Posts Plugin for WordPress, Blogger...