April 10, 2013

க.நா.சுவின் சர்மாவின் உயில்: வாழ்க்கை vs இலட்சியம்

வாழ்க்கையில் இருவேறு இலட்சியங்கள் உடையவர்கள், கணவன் மனைவியாக குடும்பம் என்ற பந்தத்தில் இணையும்போது  ஏற்படும் சிக்கல்களையும். மோதல்களையும், பிரச்சினைகளையும் சொல்லும் நாவல் சர்மாவின் உயில். அப்படி இருவேறு துருவங்களான இருவரும் பிறருக்காக தத்தம் கொள்கைகளையும் இலட்சியங்களையும் இம்மியேனும் விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தினால் உறவுகளின் மோதல் வாழ்க்கையை எப்படிக் கசப்பாக அடிக்கிறது என்பதை விரிவாகவும், அனுபவபூர்வமாகவும் நாவலில் அணுகியிருக்கிறார் க.நா.சு. வாழ்க்கையின் நிதர்சனத்திற்கும் இலட்சியம் எனும் கற்பனைக்கும் இடையே நடக்கும் மோதலை சர்மாவின் உயில், நேர்த்தியாகவும் அழகாகவும் படம் பிடிக்கிறது. இந்நாவல் எழுதப்பட்டு 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் வாசிப்பின் ரசனை சற்றும் குறையாமல் இருப்பதானது, க.நா.சு. அவர்களின் ஆழ்ந்த, தெளிந்த எழுத்தாற்றலுக்குச் சான்றாக இருக்கிறது.

சிவராமனின் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் எழுத்தாளன் ஆவது. இதற்காக தான் பார்த்துவந்த வேலையையும் விட்டுவிடுகிறான். அவன் மனைவி ராஜம் சாதாரண குடும்பப் பெண். வழக்கமாக எல்லா பெண்களையும் போல ஆசாபாசங்கள் உள்ளவள். ஆனால் இலக்கியத்தின் மீது அவளுக்கு கடுகளவேனும் மதிப்பும் மரியாதையும் கிடையாது. அவன் அதன் பொருட்டு வேலையை விடுவது அவளுக்கு பெரும் குற்றமாகத் தெரிகிறது. அவளுக்கு மட்டுமல்ல சிவராமனின் அப்பாவும், மாமனாரும் கூட அப்படியே நினைக்கிறார்கள். தன் இலட்சியத்தின் பாதையை யாரும் அறிந்துகொள்ளவில்லை என்று அவன் வருந்துகிறான். இதன் காரணமாக அவனுக்கும் ராஜத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல் எழுந்தபடி இருக்கிறது. அவனையும் அவனது இலட்சியத்தின் வேட்கையையும் நன்கு உணர்ந்தது அவனது அத்தையின் இளம் விதவைப் பெண்ணான பவானிதான். மற்றொருவர் அவனது சித்தப்பா கிருஷ்ணசாமி சர்மா. சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஒடிப்போய் கல்கத்தாவில் தன் வாழ்க்ககையை ஆரம்பித்து, வியாபாரத்தின் நுணுக்கங்களைப் பயின்று செல்வந்தராக ஆவதோடு, வாழ்க்கையையும் நன்கு உணர்ந்து ஞானி என்று போற்றத்தக்க வகையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அவர். அவரின் மனைவியும், குழந்தையும் அவரைவிட்டு மறைந்துவிட, தன் தம்பி வெங்கிடுவோடு வசித்துவரும் அவர், தன் அண்ணன் பையனான சிவராமன் மீதும், தன் தங்கை பெண்ணான பவானியின் மீதும் அளவற்ற பாசமும் பிரியமும் வைத்திருக்கிறார். இதுவே சிவராமனின் குடும்பப் பின்னனி மற்றும் நாவலின் கதைப்பின்புலம்.

நாவல் சிதம்பரத்தில் புஷ்பப் பல்லக்கு நடப்பதில் ஆரம்பிக்கிறது. விடியற்காலை வரை அதற்காக தூக்கம் விழித்து சிவராமன், ராஜம், மாமனார் மற்றும் அவனது மாமியார் அனைவரும் காத்திருக்கிறார்கள். புஷ்பப் பல்லக்கை தரிசித்துவிட்டு சற்று எழுதாலம் என்று நினைக்கிறான் சிவராமன். ஆனால் அவன் மனைவியும் மாமியாரும் முனுமுனுக்கிறார்கள். அவனது இலட்சிய வேட்கைக்கு அவர்கள் குறுக்கே நிற்கிறார்கள் என்பதை குறிப்பாக நமக்குக் கதையின் ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுகிறார் க.நா.சு. அப்போது தன் சித்தப்பா சர்மா தன் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைக்கிறான் சிவராமன்.

அடுத்து நாவல் கல்கத்தாவில் இருக்கும் சர்மாவை அறிமுகம் செய்கிறது. அந்த இரவு வேளையில் தனியாக அமர்ந்து தன் வாழ்க்கை பற்றிய விசாரத்தில் இருக்கும் அவர் வீடு திரும்பி தன் தம்பியிடம் தான் இறந்துபோவேன் என்பது பற்றி சொல்கிறார். அவர் ஜோஸியம் பார்ப்பதில் கெட்டிக்காரர் என்பதால் அவர் சொன்னது பலிக்கும் என்று கலங்குகிறாள் வெங்கிடுவின் மனைவி மதுராம்பாள்.

நாவல் அங்கிருந்து சுவாமிமலையை நோக்கி நகர்கிறது. சிவராமனின் சொந்த ஊர். அங்கே அவனது சானுப் பாட்டி தூக்கம் வராமல் புரள்கிறாள். அவள் தன் குடும்பத்தைப் பற்றிய சில நினைவுகளில் திளைக்கும்போது, அவரது மகன் சர்மா அவளை அழைப்பது போல் விடாமல் மூன்று முறை கேட்கும் ஒலியின் பொருள் அறியாது மனம் கலங்குகிறாள்.

மீண்டும் நாவல் கல்கத்தாவை நோக்கிப் பயணிக்கிறது. சர்மா தன் மரணத்தைப் பற்றி தம்பியிடமும் அவன் மனைவியிடமும் பேசுகிறார். வெங்கிடுவின் குழந்தைகள் காரணம் புரியாமல் அழுகிறார்கள். மரணத்தருவாயில் ஒரு மனிதன் இவ்வளவு தெளிவாக, சிரத்தையாக, விஸ்தாரமாக யோசிக்க முடியுமா? அப்படி ஒருவர் பேசுகிறார் எனில் வாழ்க்கையில் எத்தகைய மேலான மனோநிலையில் அவர் இருந்திருக்கவேண்டும்? வாழ்க்கை பற்றிய சர்மாவின் பார்வை அவரை ஒரு ஞானியின் நிலையில் வைத்துப்பார்க்கத் தோன்றுகிறது. சர்மா, “என் உயில்…உயில்….” என்று சொல்லியபடி மரணமடைகிறார்.

நாவல் இப்போது சென்னையை நோக்கிச் செல்கிறது. அங்கே கல்லூரி ஒன்றில் படித்துவரும் பவானி மனம் குழம்பிய நிலையில், சாவு பற்றிய சிந்தனைகள் மனதில் கிளர்ந்து எழ தவித்தபடி இருக்கிறாள். தன் அப்பாவின் சாவு, தன் அக்காள் கணவரின் சாவு, தன் மாமா சர்மாவின் மனைவி மற்றும் குழந்தைகள் சாவு, தன் கணவன் சாவு என எல்லா மரணங்களையும் பற்றிய நினைவுகள் அவள் மனதில் வந்து போகிறது. சாவைப் பற்றி இவ்வளவு விஸ்தாரமாக பேசவேண்டிய அவசியம் என்ன? வாழ்க்கை என்று வந்தபின்பு சாவைப் பிரிக்க முடியாது என்பது நிதர்சனம். வாழ்க்கை தொடங்கிய நாளிலேயே மனிதனின் மரணமும் ஆரம்பித்து விடுகிறதுதானே? எனவே சாவைப்பற்றி பேசுவதும், வாழ்க்கையைப் பற்றி பேசுவதுதான் என்றாகிறது. தன் மாமா சர்மா அனுப்பிய கடிதம் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவளுக்கு சிவராமன் பெயரில் சர்மா உயில் ஒன்றை அனுப்பி வைக்கிறார். ஆனால் அதை சிவராமனுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்றும், இன்னும் ஒருவருட காலம் கழித்தே அந்த உயிலை பிரித்து வாசிக்கவேண்டும் என்றும் சர்மாவின் கடிதம் சொல்கிறது.

நாவலின் கதைக்களம் பல்வேறு இடங்களுக்கு மாறிமாறி பயணிப்பது இன்று வேண்டுமானால் நமக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அன்று க.நா.சு. அவ்வாறு எழுதியிருப்பது அவரது படிப்பின் விசாலத்தையும், வாழ்க்கையின் ஆழந்த அனுபவங்களையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. ராஜபாட்டை இருக்கும் இடத்தில் லாவகமாக வண்டியை ஓட்டுவதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் பாதையையும் ஏற்படுத்திக்கொண்டு பயணிக்கவும் வேண்டும் எனும்போது, க.நா.சுவின் எழுத்தாற்றலின் மேதைமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

தன் சித்தப்பாவின் மரணத்திற்கு கல்கத்தா சென்று திரும்பும் சிவராமன் தன் மனைவியுடன் சென்னைக்குக் குடித்தனம் வருகிறான். கையில் கொண்டு வந்த பணம் செலவாகிவிட, அவன் மனைவியுடன் தினமும் சண்டையும் சச்சரவும் அதிகரிக்கிறது. தன் தகப்பனாருக்கு கடிதம் எழுதிப் பணம் கேட்பது, தான் தன் இலட்சியத்தில் தோற்றுவிட்டதையே காட்டும் என்று நினைக்கிறான். இந்நிலையில் பவானி தான் எழுதிய கதை ஒன்றுடன் அவன் வீட்டிற்கு வருகிறாள்.  இலக்கியத்தின் மீது தன் கணவர் அளவு ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பவானியின் மீது ராஜத்திற்கு கோபம் வருகிறது. அவளுடன் தன்னை ஒப்பிட்டு, தன் கணவனுக்குத் தான் இணையில்லையோ என்ற எண்ணத்தினால் வருவது அந்தக் கோபம். தன் ஆசைகளையும் கனவுகளையும் கருதாது தன் விருப்பம்போல் செலவு செய்யும் ராஜத்தின் மீது சிவராமனுக்குக் கோபம். வாழ்க்கைக்கு உதவாத இலக்கியத்தைக் கட்டிக்கொண்டு அழும் தன் கணவன் மீது ராஜத்திற்குக் கோபம்.  இப்படி, மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்ச்சிகளை நேர்த்தியாகவும் அற்புதமாகவும் சித்திரித்திருக்கிறார் க.நா.சு.

சிவராமனுக்கும் பவானிக்கும் இடையேயான உரையாடல்கள் வாழ்க்கை குறித்த பல்வேறு சிந்தனைகளைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. நாவலின் ஆகச்சிறந்த பகுதி இதுவென்றும் சொல்லலாம். வாழ்க்கையின் ஊடான பயணத்தில் இலட்சியத்தைக் கைகொள்ளும் மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்களை மூன்று கதாபாத்திரங்களின் மூன்று கோணங்களிலிருந்து எடுத்துரைத்து நம் வாழ்க்கை மீதான பார்வையை விஸ்தரிக்கிறார் க.நா.சு. சிவராமனின் வாழ்க்கையின் போராட்டத்தை இலட்சியத்தோடு மோதவைத்து, அது வெறும் தனி மனிதனின் வாழ்க்கையின் போராட்டம் என்றில்லாது மொத்த மானிட வாழ்க்கைக்குமான போராட்டமாக நம்மை உணரச்செய்கிறார் க.நா.சு.

சானுப் பாட்டி திடீரென படுத்த படுக்கையாகிறாள். பந்துக்களும் மித்திரர்களும் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பட்டாபிராமையர் வீடு களை கட்டுகிறது. தான் இதுவரை அறிந்திராத பல சொந்தங்களை சிவராமன் அப்போதுதான் தெரிந்துகொள்கிறான். இரண்டு பெண்கள் இருக்கும் இடத்திலேயே பிரச்சினை வரும்போது பல பெண்கள் கூடும் இடத்தில் எவ்வாறு இருக்கும்? பெண்கள் பிரச்சினையை உண்டு பண்ண ஆண்கள் சாமாளிக்கிறார்கள். இப்போதெல்லாம் வேதாந்தம் கலந்து வெளிப்படும் தன் அப்பாவின் பேச்சுக்களையும், அங்கே நடக்கும் பல நிகழ்வுகளையும் அவதானித்தவனாக சிவராமன் இருக்கிறான். தான் இனி சென்னைக்கு போகப்போவதில்லை என்றும் முடிவெடுக்கிறான். வருவதும் போவதுமாக இருந்த பாட்டியின் நினைவு முழுமையாகத் தப்பிவிட, ஒரு வாரத்துக்குப் பின் இறந்து போகிறாள்.

வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. பவானி எழுதிய சில கதைகள் பிரசுரமாகின்றன. தன் பாட்டியின் மரணத்தின் மூலம் கிட்டிய அனுபவங்களை ”ஒரே குடும்பம்” என்று நாவலாக எழுத ஆரம்பிக்கிறான் சிவராமன். ராஜத்திற்கு தனக்கு குழந்தையில்லாத குறை மனதை வாட்டுகிறது. அந்த குறையின் நீட்சியாக, தன் கணவனுக்கு ஏற்றவள் பவானிதான் என்ற எண்ணமும் அவளுக்கு வலுக்கிறது. இந்நிலையில் ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் சர்மாவின் உயில் வெளிப்படுகிறது. உயிலில் தன் வாழ்க்கையின் அனுபவத்தை சொல்லும் அவர், ஆரம்பத்தில் பணத்தின் மீதிருந்த தன் கவனம் பிறகு கோயில் மீதும் அதன் பிறகு ஜோஸியத்தின் மீதும் திரும்பியதைச் சொல்கிறார். தன் கணிப்பின்படி சிவராமன் ஜாதகத்திற்கு இரு மனைவிகள் என்கிறார். எனவே அவனுக்கு பவானியைத் திருமணம் செய்விக்கவேண்டும் என்கிறார். அவ்வாறு செய்த நாளிலிருந்து தன் சொத்துக்கள் முழுதும் சிவராமனுக்கும் பவானிக்கும் சேரும் என்கிறார். ராஜம் அதற்குச் சம்மதிக்கிறாள். அதன் பிறகு சிவராமனின் நாவல் வெளியாகிறது. பேரும் புகழும் அவனை வந்தடைகின்றன.

இது அவரது முதல் நாவல் என்பதால், முதல் நாவலுக்கேயான பல அம்சங்கள் இந்நாவலில் இருப்பதை வாசிப்பினூடான அனுபவத்தில் நாம் உணர்கிறோம். நாவலின் கதை ஓட்டத்தினூடாக விவாதத்தன்மை மிகுந்திருப்பதை நாம் முக்கியமாக கவனிக்கலாம். இந்த விவாதம் நாவலின் எல்லா விசயங்களையும் வெளிப்படையாகக் காட்டுவது ஒருவகையில் நாவலின் வாசக இடைவெளிக்கு குந்தகம் விளைவித்தாலும், க.நா.சு. அவற்றை அற்புதமாகவும் நோ்த்தியாகவும் செய்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. தன் முதல் நாவலான இதை, தனக்குத் திருப்தி தந்த நாவலாகச் சொல்கிறார் அவர். நமக்கும் அவ்வாறே தோன்றுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...