April 16, 2013

புலிக் கலைஞன் -அசோகமித்திரன்

அசோகமித்திரன் சிறுகதைகள் நமக்குக் கொடுக்கும் வாசக அனுபவங்கள் அலாதியானவை. வேறு யார் கதைகளிலும் கிடைக்கப்பெறாதவை. எல்லோரின் கதைகளையும் போல் முடிவை நோக்கி நம்மை இழுத்துச்சென்று ஒரு கணம் பரவசத்தைத் தந்துவிட்டு மறைபவை அல்ல அவை. முடிவுக்கும் அப்பால் நம் மனதை விரியச்செய்பவை. அவர் கதையை முடிக்கும் இடத்திலிருந்தே அவர் சொல்ல வந்த உண்மையான கதை தொடங்குகிறது. அவர் கதைகளின் முடிவு என்பது வெறும் பாதையைக் காட்டும் செயல்தான். மேலே பயணி்ப்பதன் மூலமே நாம் சிகரத்தை அடைய முடியும்.

நம் வாழ்க்கை பொருளைப் பிரதானமாகக் கொண்டே இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே திருக்குறளில் பொருள் நடுவிலிருக்கிறது. நம் வாழ்வின் காலம் பொருளை ஒட்டியே அமைந்திருக்கிறது. காலத்தைச் செலவழிக்க பொருள் வேண்டும். பொருள் இல்லாமல் நாம் காலத்தைச் செலவழிக்க முடியாது. காலத்தையும் தூரத்தையும் பிரிக்க முடியாதது relativity தத்துவம் என்றால் காலத்தையும் பொருளையும் பிரிக்க முடியாதது reality தத்துவம். பொருள் இல்லாமல் காலம் இல்லை என்பதால், பொருள் இல்லாவிட்டால் நாமும் காலத்திலிருந்து மறைந்துவிடுவோம். காலத்திற்கு போதுமான பொருளை நாம் வழங்காவிட்டால், அதன் கோரப் பசிக்கு நாம் உணவாகிவிடுவோம். அப்படி காலம் விழுங்கிய ஒரு மனிதனின் கதையைச் சொல்வது அசோகமித்திரனின் புலிக் கலைஞன்.

காதர் என்ற புலிவேஷம் போடும் கலைஞன் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருகிறான். கதை இலாகாவில் ஒரு புள்ளியான சர்மா, புலிவேஷத்துடன் அவன் காட்டும் புலியாட்டத்தைக் கண்டு வியந்து போகிறார். இருந்தும் அவனுக்கு அப்போது வாய்ப்பு இல்லாததால் அவனது முகவரியை வாங்கிக் கொண்டு பிறகு அழைப்பதாகக் கூறுகிறார். அவனுக்காக வாய்ப்பு ஒன்றையும் உருவாக்கி, அவனைத் தேடும்போது அவன் கிடைப்பதில்லை என்பதே கதை.

அசோகமித்திரனின் பாத்திரத் தேர்வுகள் மிகவும் நுட்பமானவை. அவை அந்தக் கதையுடன் பொருந்திப் போகும் அழகு அற்புதத்திலும் அற்புதம். இந்தக் கதையில் காதரை புலி வேஷம் போடும் கலைஞனாக அசோகமித்திரன் காட்டியிருப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி. ஆனால் புலிவேஷம் போடும் கலைஞன் பசிக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கிறான். அடுத்தவர்களை பயமுறுத்தி, தனக்கு உணவாக்கிக்கொள்ளும் புலி இங்கே தன் அடுத்த நேர உணவுக்காக கையேந்தி நிற்கிறது. வாழ்க்கையின் irony இதன் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தப்படுகிறது.

காலத்தால் செய்த உதவியைச் சிலாகித்துப் பேசும் வள்ளுவர், காலத்தின் முக்கியத்துவத்தையே சொல்கிறார். காலத்தில் கிடைக்காத உதவி பயனற்றது. அதுவும் சினிமாத் துறையில் அதை எதிர்பார்ப்பது முடியாதது. நாம் வாழும் வாழ்க்கைக்கான வழி அதில் உடனடியாகக் கிடைத்து விடுவதில்லை. வழி கிடைக்கும்போது அவர்களி்ன் முகவரி மட்டுமே எஞ்சுகிறது.  அவர்களின் இருப்பு வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட முகவரியாய் இருந்து பின்னர் அதுவும் அழிந்து போகிறது. காலம் அவர்களைத் தொலைத்துவிடுகிறது.

காப்காவின் தீர்ப்பு சிறுகதையில் வரும் சில வரிகள் அந்த கதையின் போக்கைத் தீர்மானிக்கும். ஜார்ஜ் தன் தந்தையைப் படுக்கையில் கிடத்தி போர்த்திவிடுவான். அது தன்னைப் புதைத்து மூடும் செயலாகக் கருதி, அவன் மீது கோபம் கொண்டு அவனைத் திட்டி, கடைசியில்  நீரில் மூழ்கி சாகும்படி தீர்ப்பு வழங்குவார் அவன் தந்தை. அதேபோல் புலிக் கலைஞனில் வரும் இந்த வரிகள் கதையின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்கிறது:

“…..ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர், வயது, உயரம், விலாசம், எல்லாம் குறித்துவைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும். விலாசதாரர் வீடு மாற்றிப் போய்விட்டார் என்று. அப்புறம் எல்லாமே வெள்ளைதான்.”

வாழ்க்கையின் பிரமாண்டத்தையும் அதன் பின்னங்களையும் இவ்வரிகள் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கின்றன. இவ்வரிகளின் மூலம் வாழ்க்கை நமக்குக் காட்டும் நிலையாமைத் தத்துவம் அசாதாரணமானது. மனதில் ஏற்படும் வெறுமை நம்மை வெட்டவெளியில்  தூக்கி வீசுகிறது. கதையைப் படித்து முடித்ததும் இந்த வரிகளை நாம் நினைவுக்குக் கொண்டுவரும்போதே, நாம் அந்த உணர்வை அடையமுடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...