April 25, 2013

தி.ஜாவின் துணையும், இ.பாவின் வழித்துணையும்

தி.ஜாவின் துணை கதை சொல்வது:

பென்சன் வாங்கும் லேடிக் கிழவரின் குடும்பம் ஐந்து தலைமுறையை தாண்டி வாழ்ந்து வருகிறது. இந்த வயதிலும் அவர் வலுவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். ஆனால் அவரின் பேரனுக்கு பேரன் உடல் வலிமை இவர்களைவிட மோசமாகவே இருக்கிறது. ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருக்கும் வாலிபன் ஒருவன், மஸ்டர் நாளான அன்று லேடிக் கிழவரையும் அவர் மகனையும் பென்சன் அலுவலகத்திற்கு அழைத்துப்போகிறான். ஆனால் வரும் வழியில் வண்டி குடைசாய்ந்துவிட வாலிபன் அடிபடுகிறான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டு போட்டு அழைத்துவருகிறார்கள் கிழவர்கள் இருவரும். துணையாய் சென்றவன் இவர்கள் துணையோடு வீடு திரும்புகிறான் என்பதுதான் கதை.

தி.ஜாவின் இந்தக் கதை, அந்தக்கால மனிதர்களின் உடல் வலிமையோடு ஒப்பிடும்போது தற்கால தலைமுறையினரின் உடல் பலவீனமாக இருக்கிறது என்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. இப்படியே போனால், அடுத்தடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்ற கேள்வியை நம் மனதில் எழச்செய்து, மொத்த மானிடமும் எதிர்கொள்ளும் பெரும்பிரச்சினையாக இது வருங்காலத்தில் இருக்கும் என்பதைப் பற்றிய தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இது வெறும் உடல் வலுவை மட்டும் சார்ந்ததல்ல. நம் இயற்கை வளங்களும், அவற்றை நாம் பாதுகாக்கத் தவறிவருவதும், செயற்கையான ரசாயனத்தின் மூலம் நம் தொன்மையான விவசாயத்தை பாழடித்து வருவதுமான பல விசயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன.  நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களுக்கும் நம் உடலின் ஐம்புலன்களுக்கும் தொடர்பு உண்டு. எனவே நாம் இந்த ஐம்பூதங்களில் ஏற்படுத்திவரும் அழிவு பூமியை அழிப்பதோடு, நம் உடலில் இருக்கும் ஐந்து புலன்களையும் சிதைத்து, நம்மை வலுவற்றவர்களாக ஆக்கிவருகிறது. மனிதனின் உடல் மட்டுமல்ல இந்த பூமியின் மீதுள்ள எல்லாமும் சீரழிந்துவருகிறது என்பதை இதன் மூலமாக நம்மை உணரச் செய்துள்ளார் தி.ஜா.

இ.பாவின் வழித்துணை கதைக்கு வருவோம்.

சரபசாஸ்திரிகளின் மகன் ஹரிஹரன் ஐ.ஏ.எஸ். முடித்து உயர் பதவியில் இருக்கிறான். அவன் அலுவலகத்தில் நடராஜன் ஆபீஸ் குமஸ்தாவாக பணிபுரிகிறான். ஊரிலிருந்து நடராஜனை பார்க்கவரும் அவன் அப்பா இறந்துபோகிறார். அதற்காக சரபசாஸ்திரிகள் இறுதிக் காரியங்களைச் செய்துவைக்கிறார். இது  தெரிந்து ஹரிஹரன் தன் அப்பாவின் செயலால் தனக்கு அவமானம் என்று நினைக்கிறான். அவரிடம் சண்டைபிடிக்கிறான். நடராஜனின் அப்பாவின் தயவால்தான் தான் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பதை தன் மகன் மறந்துவிட்டான் என்றும், தான் நடராஜனின் அப்பாவுக்கு செய்த வைதிகக் காரியங்களை தன் மகன் அவமானமாக நினைக்கிறான் என்றும் சரபசாஸ்திரிகளுக்கு வருத்தம் ஏற்படுகிறது. மன வருத்தத்துடன் வெளியே நடக்கிறார். அப்போது வழியில் எதிர்படும் தன் ஊரைச்சேர்ந்த இரத்தினவேலுவை பார்க்கிறார். தான் செய்துவந்த நாவிதர் தொழிலைத் தன் மகன் கௌரவக்குறைச்சலாக நினைப்பதாகவும் அதனால் தனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என்றும் ஊருக்கே போவதாகவும் சொல்கிறான் அவன். அதைக்கேட்ட சாஸ்திரிகள் தனக்கும் சேர்த்து ஒரு டிக்கட் எடுக்கும்படியும், தன் பயணத்துணைக்கு வழித்துணையாயிற்று என்றும் சொல்கிறார்.

சரபசாஸ்திரிகள் இரத்தினவேலு இருவரின் மகன்களும் தன் தந்தை செய்யும் தொழிலை அகௌரவமாக நினைக்கக் காரணம் என்ன? இருவருமே மனதளவில் தங்கள் தந்தையின் தொழில் இது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கோழைகளாக இருக்கிறார்கள். பிறர் என்ன சொல்வார்களோ என்று, மற்றவர்களின் அபிப்ராயத்திற்கு அவர்கள் மனம் பயப்படுகிறது. இது அவர்கள் மனதின் வலுவில்லாமையையே காண்பிக்கிறது.

ஆக, தற்கால தலைமுறையின் இரண்டு பலவீனங்களைப் பற்றி இவ்விரண்டு கதைகளும் சித்தரிக்கின்றன. தி.ஜா. உடல் பலவீனத்தையும், இ.பா. மனதின் பலவீனத்தையும் காட்டுகிறார். இந்த இரண்டு பலவீனங்களும் இன்றைய மனித வாழ்க்கையைப் பெரிதும் கலங்கடித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.  மனிதன் முழுமையடையவும், எதிர்காலம் சிறப்பாக அமையவும் இந்த இரு பலவீனங்களும் களையப்படவேண்டும்.


Related Posts Plugin for WordPress, Blogger...