April 23, 2013

ஒரு கப் காப்பி–இந்திரா பார்த்தசாரதி

ராஜப்பாவின் அம்மா இறந்தபிறகு அவனும் அவன் தம்பியும் தனிக்குடித்தனம் ஆகிறார்கள். ஓரே வீட்டில் இரண்டு குடித்தனம் நடக்கிறது. அவன் தம்பிக்கு எல்.ஐ.சியில் வேலை. படிக்காத அவனால் என்ன செய்யமுடியும்? இத்தனை காலம் சும்மாவே காலம் தள்ளியாயிற்று. ஏதோ கல்யாணம் கருமாதி என்று இப்போது புரோகிதத் தொழில் நடத்தவேண்டிய சூழ்நிலை. இந்நிலையில் அவனுக்கு அன்று காப்பி குடிக்கத் தோன்றுகிறது. அதற்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறான். ஆனால் அதற்கான வழிதான் தெரியாதிருக்கிறது. காபி குடித்தே ஆகவேண்டும் என்ற தவிப்பு அவனை அலைக்கழிக்கும் நிலையில், தன் பால்ய சிநேகிதன் அனந்துவை கடைவீதியில் பார்க்கிறான். டெல்லியில் பணியாற்றும் அவன் ராஜப்பாவின் கோலத்தைக்கண்டு வேதவித்து என்று புகழந்து தள்ளுகிறான். அவனுக்கோ இதனால் காப்பி குடிக்கும் வாய்ப்பு நழுவிவிடுமோ என்று பயம் வருகிறது. கடைசியில், அவன் காப்பி குடித்தானா இல்லையா என்பதுதான் கதை!

நம் மனம் எளிதில் பழக்கத்துக்கு அடிமைப்பட்டுவிடும் ஒரு வஸ்து. நம் வாழ்க்கையே பழக்கத்தின் அடிப்படையிலேயே நடக்கிறது. பழக்கம் நாளடைவில் இயல்பாகிறது. ஒன்று நம் இயல்பான பின்னர் அதிலிருந்து நாம் விடுபடுவது முடியாததாகிறது. குடிப்பழக்கம் மனிதனைப் பாடாய் படுத்துவதை நாம் அறிவோம். அதேபோல ஒரு கப் காபி குடிக்கமுடியாமல் ராஜப்பா தவிப்பதிலிருந்து, பழக்கத்தின் பிடியிலிருந்து நாம் தப்பிக்கமுடியாத அவலத்தை, வாழ்க்கையின் வறுமை நிலையோடு இணைத்து அங்கதம் வெளிப்பட அழகான கதையாகத் தருகிறார் இ.பா.

பிறரது வெளித்தோற்றம், அவர்களைப் பற்றிய பல்வேறு கற்பனைகளை நம் மனம் நமக்குத் தருகிறது. இப்படியாக ஒவ்வொருவரும் மற்றவரைப் பற்றிய தவறான பிம்பத்தை நம் மனத்திரையில் பதிந்துவைக்கிறோம். ராஜப்பாவைப் பார்த்ததும் அவன் நண்பன் அனந்துவின் மனதில், ராஜப்பாவைப் பற்றி எழும் சிந்தனைகள் இத்தகையவையே. இப்படி அடுத்தவர்களைப் பற்றிய நம் கற்பனைகளும் ஒருவகையில் பழக்கம்தான். அந்தப் பழக்கம் யாரைப் பார்த்தாலும் அப்படியான கற்பனையை நம் மனதில் தானாகவே ஏற்படுத்தி, அவர்களோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப்பார்த்து விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறது.

பழக்கம் நிர்பந்திக்கும் போது மனிதன் சுயக்கட்டுப்பாட்டை இழக்கிறான். தன் மான அவமான உணர்வுகளை அதன் பொருட்டு உதாசீனப்படுத்தவும் அவன் தயராகிறான். அவன் இயலாமை தான் விரும்பியதை அடைந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை அவனுக்கு ஏற்படுத்துகிறது. தன்னைப் பற்றிய அனந்துவின் உயர்வான அபிப்ராயத்தைத் தக்கவைத்துக் கொள்வதைவிட காப்பி சாப்பிடுவதுதான் ராஜப்பாவிற்கு முக்கியமாகப் படுகிறது. அவனது அபிப்ராயத்தின் படியே தான் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, காப்பி குடிக்காமல் திரும்பினான் ராஜப்பா என்றும் இந்தக் கதையை எழுதலாம். அது வேறுவகையான உணர்வுகளுக்கு நம்மை இட்டுச்சென்றிருக்கும். ஆனால் பழக்கம் நம்மை ஆக்ரமித்திருக்கும் அவலத்தைக் காட்டாது போயிருக்கும். இ.பாவின் நோக்கம் மனித வாழக்கையில் பழக்கத்தின் தாக்கத்தைப் பற்றி சொல்வதேயாகும்.

பழக்கம் நம்மை முடவனாக்கிவிடுகிறது. நாமெல்லோருமே பழக்கத்தின் முடவர்கள். அதை குறிப்பாக உணர்த்துவதற்காகத்தான் கதையின் ஆரம்பத்தில் அப்படியொரு கனவுக் காட்சியை வைத்திருக்கிறார் இ.பா. நாம் ஒன்றை சார்ந்திருக்கும் தன்மை முடத்தன்மை என்றுதான் சொல்லவேண்டும். ஊன்றுகோலைச் சார்ந்திருப்பவன் எவ்வாறு முடவனாகிறானோ அவ்வாறே ஒன்றின் பழக்கத்தைச் சார்ந்து நிற்பவனும் முடவனாகிறான்.

நாம் நம் பழக்கத்தைப் பற்றியும், அது எவ்வளவு தூரம் நம்மை ஆட்டிப் படைக்கிறது என்பதைக் குறித்தும் இந்தக் கதை நம்மை யோசிக்கவைக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...