April 19, 2013

பரதேசி வந்தான் -தி.ஜானகிராமன்

ஜானகிராமனின் பரதேசி வந்தான் முழுக்க முழுக்க ஆன்மீகமான கதை. பரதேசி சாபம் விட்டான் அது பலித்தது என்பதைவிட கதையில் நுட்பமான செய்திகள் பல உள்ளன. அவற்றை நாம் கவனிக்கும்போது இக்கதையின் வீச்சு நமக்கு விளங்கும். எனவே மூன்று விசயங்களைப் பற்றி நாம் சிந்திப்பது நலம்.
    1. நம் வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
    2. பாவ புண்ணியம்.
    3. அகங்காரம்.

இந்த உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்வதுண்டு. அதன் பொருள் என்ன? நாடகம் என்றால் அதற்கு திரைக்கதை கணடிப்பாக இருக்கும். நம் வாழ்க்கையின் திரைக்கதை இறைவனிடம் இருக்கிறது. அதில் அடுத்த காட்சி என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால் படைத்தவனுக்குத் தெரியும். தற்போதைய காட்சி மகிழ்ச்சி என்றால் அடுத்த காட்சி அழுகையாக இருக்கலாம்.  இப்போது இன்பமென்றால் அடுத்து துன்பமாக இருக்கலாம். ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையின்படி நம் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. சொல்லப்போனால் அதற்கேற்ப நாம் எதிர்வினை புரிவதால் இந்த உலகம் நாடக மேடையாகிறது. பரதேசி சொன்னான் அது பலித்தது என்பதில்லை. ஏற்கனவே எழுதப்பட்ட வசனத்தை அவன் பேசினான் என்பதே உண்மை. இதை  நாதத்தை உதாரணமாகக் காட்டி தி.ஜா. வெளிப்படையாக உடைத்துக் காட்டிவிடுகிறார். அதை வாசகனின் ஊகத்திற்கே விட்டிருந்தால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தான் சொல்ல நினைத்ததை படிப்பவர்கள் விளங்கிக்கொள்ளாமல் போய்விடக்கூடும் என்ற எண்ணத்தினால் தி.ஜா. இதைச் செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நம் செயல்கள் அதற்கு மாறாக இருக்கின்றன. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதுதான் மனிதனின் குணமாக இருக்கிறது. இல்லையேல் வக்கீல் அண்ணா கெட்டவர்களுக்கும் அயோக்கியர்களுக்கும் வாதாடுவானேன்? அப்படி வாதாடிக் கிடைத்த பணம் தன் வாழ்க்கையை செழுமைப்படுத்தும் என்று அவரை நினைக்கவைத்தது எது? நம்மிடையே நிலவும் பாவபுண்ணியம் குறித்த தவறான மதிப்பீடுகளால்தான் அவ்வாறு நேர்கிறது. உண்மையில் பாவபுண்ணியத்தின் பங்கு என்ன? பாவத்துக்கு தண்டணையும் புண்ணியத்துக்கு பலனும் உண்டு என்பது நம் சித்தாந்தம். ஆனால் பலர் பாவத்தின் தண்டணையை புண்ணித்தில் கழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள். அப்படி அல்ல. பாவத்துக்கான தண்டணை கட்டாயம் கிடைக்கும். அதே சமயம் புண்ணியத்துக்கான பலனும் கிடைத்தே தீரும். இரண்டையும் தனித்தனியாக நாம் அனுபவித்தே ஆகவேண்டும். அதைத்தான் அவர் அனுபவிக்கவும் செய்கிறார்.

கதையின் கடைசியில் வரும் அகங்காரம் என்ன என்பது பற்றி சிலவற்றை நாம் யோசிப்பது நலம். இது ஈகோ அல்ல. ஈகோ என்பது உடமை சம்பந்தமானது. நம்மிடம் பெரிய வீடு இருந்தால் நம் ஈகோ பெரிதாக இருக்கும். வீடு இல்லாவிடில் நம் ஈகோ சுருங்கிவிடும். ஆனால் வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மில் எந்த மாற்றமும் இல்லாத நிலைதான் அகங்காரம். அந்த அகங்காரம் என்பது சுயம். சுயத்துக்கு உடமை ஏதும் தேவையில்லை. அதனால்தான் பரதேசி அண்ணாவின் அகங்காரம் மெல்லியதாக உடைந்துவிடுவதாக இருப்பதாகக் குறிப்பிடுகிறான். நம் அகங்காரம் எவ்வளவுக்கு மெல்லியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் நம்மை பிறரிடம் நம் கோபத்தின் வாயிலாகவும் உடமையின் வாயிலாகவம் பறைசாற்றிக் கொள்வோம்.

தி.ஜாவின் இந்தக் கதையை இலக்கியப் பின்னனியைவிட ஆன்மீகப் பின்புலத்திலேயே அதிகமும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றகிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...