April 1, 2013

அந்நியன் -ஆல்பெர் காம்யு

இந்நாவலில் தலைப்பில் கவரப்பட்டவனாக பல வருடங்கள் இந்நாவலைத் தேடி அலைந்திருக்கிறேன். ஆனால் அது  இப்போதுதான் கிடைத்தது. க்ரியாவின் நான்காவது பதிப்பாக தற்போது வெளியாகியிருக்கிறது. புத்தகத்தைப் பற்றி ஏதேதோ கற்பனையில் இருந்தேன். ஆனால் 150 பக்கங்கள் கொண்ட சிறிய நாவலாக அது இருக்கவே, அந்நாவலைப் பற்றிய என் பெரிய கற்பனைகள் வெகுவாகச் சுருங்கிவிட்டன.

அல்ஜேயில் வசிக்கும் மெர்சோ, நிறுவனமொன்றில் பணியாற்றுகிறான். ஒரு நாள், அவன் தாய் மரணமடைந்துவிட்டதாக, அவள் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்திலிருந்து செய்தி வருகிறது. இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு எண்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மாரங்கோ செல்கிறான். இல்லத்தின் காவலாளி அவனது தாயாரின் முகத்தைப் பார்க்கவேண்டுமா என்று கேட்க அவன் மறுத்துவிடுகிறான். அவன் தாயாருடன் நட்பாக இருந்த பலர் அன்றிரவு நீத்தார் கண்விழிப்பில் கலந்துகொள்கிறார்கள். அடுத்த நாள், பெரே என்ற பாதிரியார் அவன் தாயின் ஈமச்சடங்கை நடத்திவைக்கிறார். கடுமையான வெயிலும், ஈமச்சடங்கின் சலிப்பும் அவனை வெகுவாக வாட்டுகிறது.

தன் மனதில் இயல்பாய் தோன்றிய பலவற்றை காம்யு நாவலில் சொல்லிச் செல்கிறார். விடுப்பு கேட்கும்போது முதலாளி அரை மனதாகச் சம்மதிப்பது, தன் தாயின் முகத்தைப் பார்க்க விரும்பாதிருப்பது, தயாரின் மறைவுக்காக எல்லோரும் அவன் மீது செயற்கையாக அனுதாபம் காட்டுவது, ஈமச்சடங்கை சோர்வு தரும் காரியமாக நினைப்பது போன்ற பலவற்றை இயல்பாய் சித்தரித்திருப்பது காம்யுவின் சிறப்பு. அத்தியாயத்தின் இறுதியில் வரும், “எல்லாம் முடிந்ததும், தன் அறைக்குத் திரும்பி நிம்மதியாத் தூங்கப்போகிறோம் என்ற நினைப்பே அவனுக்கு நிம்மதியையும் அமைதியையும் தருகிறது” என்ற வரிகளின் மூலம், மனிதர்கள் பலரும் தன் இயல்பை மறைத்து, வெளிவேஷம் போடுவதில் கெட்டிக்காரர்கள் என்பதைத் தெளிவாக நாம் அறியச்செய்கிறார் காம்யு.

அடுத்த சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறை. அந்த நாட்களை மெர்சோ சிரமப்பட்டு கழிப்பதை காம்யு காட்டுவதன் மூலம், தனிமையின் தவிப்பைக் காட்டுகிறார். அவனது அலுவலகத்தில் முன்னர் பணியாற்றிய மாரி கார்தோனாவுடன் சனிக்கிழமையை ஒரு வழியாக ஓட்டுகிறான். அடுத்த நாளான ஞாயிறு செல்வது அவனுக்கு பிரம்ம பிரயத்தனமாக இருப்பதை, அவன்  தன் தனிமையைப் போக்க முயற்சிக்கும் பல்வேறு செயல்களின் வாயிலாக நுட்பமாகக் காட்டியுள்ளார் காம்யு.

மெர்சோ வசிக்கும் குடியிருப்பில் முதியவர் சலாமானோ தன் நாயுடன் வசித்து வருகிறார். முதியவர் சதா தன் நாயுடன்தான் வெளியே செல்வார். அந்நாயோ நோய்வாய்ப் பட்டு பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ஒரு நாள் அந்த நாய் காணாமல் போய்விடுகிறது. அது இருக்கும் போது சதா அதனுடன் வசையும் திட்டுமாகக் காலம் கழித்த முதியவர் இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் விழிக்கிறார். தான் இருக்கும் சூழ்நிலையில் பழகிவிட்ட மனிதன், அது மாற்றமடையும் போது, எவ்வாறு தடுமாறுகிறான் என்பதை அந்த முதியவர் மூலமாக நாம் விளங்கிக்கொள்ளுமாறு செய்துள்ளார் காம்யு.

மற்றொரு குடியிருப்பில் ரேமோன் என்பவன் வசிக்கிறான். ரேமோனோ தன் மனைவியுடனான உறவில் கசந்துபோய் அவளை விரட்டி அடித்தவன். அவனுக்கும் அவள் மனைவியின் சகோதரனுக்கும் இதனால் கைகலப்பு நடந்துவிடுகிறது. அவற்றை ரேமோன் மெர்சோவுக்குச் சொல்லி அவன் ஆலோசனையைக் கேட்கிறான். பிறகு அவனையும் மாரியையும் தன் நண்பன் ஒருவனின் கடலோரக் குடிலில் தங்க வருமாறு அழைக்கிறான். மெர்சேவும் மாரியுடன் அங்கு செல்கிறான். ரேமோனின் மனைவின் சகோதரன் அனுப்பும் அரேபியர்கள் இரண்டு பேர் அங்கே அவர்களைத் தொடர்ந்து வருகிறார்கள். அங்கே நடக்கும் கைகலப்பில் மெர்சோ ஒருவனைச் சுடும்படி ஆகிறது. அவன் கைது செய்யப்படுகிறான்.

அடுத்து வரும் இரண்டாம் பாகத்தில் மெர்சோவின் சிறை அனுபவங்கள் வருகிறது. ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் சிறை போகப்போக அவனுக்குப் பழகிவிடுகிறது. சௌகரியமாக இருப்பதாகவும் உணர்கிறான். பழக்கம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று அறிகிறான். கொலைக் குற்றம் பற்றிய விசாரணையும் விரிவாக விவரிக்கப்படுகிறது. அவன் தாயார் இறந்த ஈமச்சடங்கில்  அவன் நடந்துகொண்ட விதத்திலிருந்து நடக்கும் விசாரணை மெர்சோவுக்கு சோர்வும், வெறுப்பும் தருவதாக உள்ளது. நீதிமன்ற விசாரணையிலிருந்து தான் அந்நியமாகி விட்டதாகவும், தனக்கு சம்பந்தமே இல்லாமல் விசாரணை அவரவர் மனப்போக்கில் நடப்பதாகவும் உணர்கிறான். இறுதியில் குற்றம் திட்டமிட்டு நடந்ததாக் கூறி,  அவனுக்கு மரண தண்டனை தீர்ப்பாகிறது. நீதி மன்ற விசாரணையும், மெர்சோவின் மனவோட்டங்களும் சில சமயங்களில் காப்காவின் விசாரணை நாவலை நினைவுபடுத்துகிறது.

அவன் மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க மறுக்கிறான். வாழ்க்கை இப்போது முடிவதற்கும் இன்னும் காலம் தாழ்த்தி முடிவதற்கும் பெரிய வித்தியாசம் என்ன? எல்லாம் ஏற்றுக்கொண்டு வாழ்வதைவிட வேறென்ன செய்யமுடியும்? என்ற முடிவுக்கு வந்தவனாக ஆகிறான்.

கதை சொல்லியான மெர்சோவின் மூலம் கதையை நாம் படிக்கும்போது, காம்யுவின் மொழியும் நடையும் உரைநடைத் தன்மை மிகுந்ததாக காணப்படுகிறது. அவை போதுமான அளவில் நம் மனதில் கற்பனையை விரியச்செய்கின்றன என்றாலும் அதனோடு முழுக்க ஒன்ற முடியாமல் இருக்கிறது. நாவலுடன் ஒரு அந்நியத் தன்மையை நாம் உணர முடிகிறது. ஒரு சிலரின செயல் அல்லது ஒரு சிலரின் அருகாமை நமக்குப் பதட்டத்தையும், பொறுமையின்மையையும் ஏற்படுத்தும். நாவலின் நாயகன் மெர்சோவிடம் காணப்படும் அந்தத் தன்மை நாவல் முழுக்க விரிந்திருக்கிறது.

குற்றம் நடந்தது தற்செயல் என்றாலும் அதனோடு குற்றம் சாட்ப்பட்டவன் வாழ்க்கையின் பலவற்றையும் பிணைத்து, விசாரணை என்ற பெயரில் நடப்பதை விரிவாகப் படம் பிடிக்கிறார் காம்யு. குற்றம் மட்டுமே பிரதானமாக்கப்பட்டு குற்றவாளி அந்நியமாக்கப்படுகிறான் என்பதை இந்த அந்நியன் நமக்குக் காட்டுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...