March 19, 2013

ராஜா வந்திருக்கிறார் -கு.அழகிரிசாமி

கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் அற்புதமான கதை. எளிமையான கதையில் மிக உயர்ந்த உண்மையைச் சொல்கிறார் அழகிரிசாமி. கதைக்கு உள்ளேயும் வெளியேயுமான இரண்டு வட்டங்களிலும் நம் மனதை விகாசப்படுத்தும் கதை. கதைக்கான உள்வட்டத்தில், நம் மனம் கொள்ளும் நெகிழ்ச்சி பிரதானமாக இருக்கிறது. ஆனால் கதைக்கு வெளிவட்டத்தில், நம் மனம் அடையும் பரவசம் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. ஜெயமோகன் தன்னுடைய இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த எட்டு கதைகளின் வரிசையில் இக்கதையைக் குறிப்பிட்டிருக்கிறார்.

செல்லையா, தம்பையா, மங்கம்மாள் ஆகிய உடன்பிறந்த மூவரும், ஜமீன் விட்டு பையனான ராமசாமியும் ஒன்றாக பள்ளியில் படிக்கிறார்கள். அன்று பள்ளியில் செல்லையாவுக்கும் ராமசாமிக்கும் இடையே படப்போட்டி நடக்கிறது. தனது புத்தகத்திலிருந்து ஒரு படம் காண்பிக்க அடுத்தவன் அதற்கு எதிர்படத்தைக் காண்பிக்கவேண்டும் என்பதுதான் போட்டி. செல்லையாவின் புத்தகத்தில் படம் பாதியிலேயே முடிந்து அவன் தோற்றுவிடுகிறான். தம்பையாவும் மங்கம்மாவும் தன் அண்ணன் தோற்றுவிட்டதை நினைத்து  வருந்துகிறார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது படப்போட்டி வேறு ரூபம் எடுக்கிறது. எங்கள் வீட்டில் அது இருக்கே உங்கள் வீட்டில் இருக்கா என்பதாக போட்டி நடக்கிறது. அதில் ஒரு கட்டத்தில் பதில் சொல்லமுடியாமல் ராமசாமி திணறும்போது, அவரவர் வீடு வந்துவிட போட்டி முடிவுக்கு வருகிறது.
அடுத்த நாள் தீபாவளியானதால், தன் கணவன் வாங்கிவைத்த இரண்டு பனியன்கள், இரண்டு கால் சட்டைகள், ஒரு பாவாடை, ஒரு பச்சைச் சட்டை, ஒரு நான்கு முழ துண்டு ஆகியவற்றை தன் பிள்ளைகளிடம் காட்டுகிறாள் தாயம்மாள். எல்லோருக்கும் புதிதாக இருக்க தன் தாய்க்கு புதிதாக ஏதும் இல்லாததை குழந்தைகள் கவனிக்கிறார்கள். தன்னிடம்தான் ஏற்கனவே இரண்டு சீலை இருக்கே என்று சாமாளிக்கிறாள் தாயம்மாள்.

அன்று இரவு வீட்டுக்கு வெளியே எட்டு வயது சிறுவன், ராமசாமி வீட்டின் எச்சிலையிலிருந்து சோற்றை எடுத்து தின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். சொரி சிரங்கோடு இருக்கும் அவனைப் பார்த்து தம்பையாவும் செல்லையாவும் விரட்டுகிறார்கள். அந்த சிறுவன் அழ ஆரம்பிக்கிறான். தாயம்மாள் வந்து விசாரிக்க, அவன் பெயர் ராஜா என்றும், தாய் தந்தையை இழந்துவிட்ட அனாதையென்றும், கழுகுமலையில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்குப் போக நடந்து செல்வதாகவும் சொல்கிறான். அந்த இரவில் அவனை அனுப்ப மனமில்லாத தாயம்மாள் அவனை வீட்டிலேயே படுக்கச் சொல்கிறாள்.

ராமசாமியின் அக்காவை ஜமீன்தார் வீட்டு பையன் ஒருவனுக்கு மணமுடித்து கொடுத்திருக்கிறார்கள். அவன் தீபாவளியை முன்னிட்டு மாமனார் வீட்டிற்கு வந்திருக்கிறான். எனவே ராஜா வந்திருக்கிறார் என்று தடபுடல் ஏற்பாடுகள் நடக்கிறது. இரவு முழுதும் வெடிச்சத்தம் கேட்டபடியே இருக்கிறது.

மங்கம்மாள் தனக்கு மத்தாப்பு வேண்டும் என்று அடம் பிடித்து அழுகிறாள். அனாதையாக நிற்கும் ராஜா ஏதும் கேட்கிறானா? அவனுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்? அவன் சோறு வேண்டும் என்று கூட அழவில்லை நீயோ மத்தாப்பு கேட்டு அடம்பிடிக்கிறாய் என்று தாயம்மாள் அவளை சமாதானப்படுத்துகிறாள்.

விடிகிறது. எல்லோரும் குளித்து முடித்து புதுத்துணி உடுத்துகிறார்கள். கோவணத்தோடு நிற்கும் ராஜாவைப் பார்த்து மனம் கலங்குகிறாள் தாயம்மாள். தன் கணவனுக்காக இருக்கும் புதுத்துண்டை அவனுக்குக் கொடுக்கலாமா என்று யோசிக்கிறாள். தன் கணவன் மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும் நினைத்துப் பார்க்கிறாள். ஆனால் ராஜாவோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறான். தனக்கு கடவுள் வைத்த சோதனைதான் இது என்று நினைக்கிறாள் தாயம்மாள். அப்போது மங்கம்மாள், "பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!" என்கிறாள். இதைக் கேட்டதும் தாயம்மாவுக்கு அழுகை வெடிக்கிறது. அவள் அழுகையின் காரணம் தெரியாமல் விழிக்கிறாள் மங்கம்மாள். தாயம்மாள், அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன் பிள்ளையிடம் ராஜாவுக்குத் துண்டை கொடுக்கச் சொல்கிறாள்.

அதன் பிறகு மங்கம்மாள் வீதிக்கு ஓடுகிறாள். அப்போது எதிர்படும் ராமசாமி, "எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!" என்கிறான். ராமசாமி நேற்று பாதியில் விட்ட போட்டியைத் தொடர்கிறான் என்று நினைத்து அவனை மட்டம் தட்ட, "ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கான். வேணும்னா வந்து பாரு."  என்கிறாள்.

கதை இத்துடன் முடிகிறது. ஆனால் நம் மனப் பாய்ச்சல் தொடர்கிறது.

துண்டை ராஜாவுக்கு கொடுக்கும்படி மங்கம்மா சொன்னதும் தாயம்மாள் ஏன் அழவேண்டும்?மங்கம்மாவுக்கு சாதாரணமாகத் தோன்றியதை தான் இவ்வளவு தூரம் யோசிக்கும்படி ஆயிற்றே என்றுதான் தாயம்மாள் அழுகிறாள். குழந்தைகளின் கபடில்லாத மனத்தையும் தன் மனத்தையும் ஒப்பு நோக்கிதான் தாயம்மாள் அழுகிறாள். அது புரிந்துவிடும்போது நம் கண்கள் கலங்கவே செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில் நம் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று நம்மை நாமே சுயவிசாரணை செய்துகொள்வதும் தவிர்க்க முடியாததாகிறது. இது கதைக்குள் நாம் அடையும் நெகிழ்ச்சி.

உண்மையில் ராஜா என்பவன் யார்? எல்லா சுகபோகங்களும் நிரம்பியவன்தான் ராஜாவா? ஞானிகள் எல்லாம் துறந்துவிட்டு நிற்க, அவர்களிடம் இந்த ராஜாக்கள் கையைக்கட்டி நிற்கிறார்களே? ஆக, எந்த ஆசையும் இல்லாதவன்தான் ராஜா என்பதைத்தானே இது நமக்கு உணர்த்துகிறது. அப்படியாயின் மங்கம்மாள் அந்தச் சிறுவனை ராஜா என்று சொன்னது அவன் பெயரை மட்டும் வைத்துச் சொன்னாலும், படிக்கும் நமக்கு, எந்த ஆசையும் இல்லாமல் நிற்கும் அந்த சிறுவன்தான் உண்மையில் ராஜா என்பது வேறோர் அர்த்தத்தில் பிடிபடுகிறது. இது கதைக்கு வெளியே நம் மனம் கொள்ளும் பரவசம். இதுவே கு.அழகிரிசாமியின் இக்கதையை ஆகச்சிறந்த கதையாக ஆக்கியிருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...