March 14, 2013

யு.ஆர்.அனந்தமூர்த்தியின் அவஸ்தை

ஐம்பது வயதை நெருங்கும் கிருஷ்ணப்பா அரசியல் கட்சி ஒன்றின் தலைவன். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் படுத்தபடி சாவோடு போராடியபடி இருக்கிறான். வங்கி ஒன்றில் பணிபுரியும் அவன் மனைவி சீதா அவனுக்கு வேண்டிய சிருஷ்யை செய்துகொண்டிருக்கிறாள். தினமும் அங்கே வரும் நாகேஷ், கிருஷ்ணப்பா சொல்லச்சொல்ல அவன் வாழ்க்கை வரலாற்றை எழுதிவருகிறான்.

தந்தையை இழந்துவிட்ட அவன் தாயாரின் அரவணைப்பில் மாடு மேய்க்கும் வேலையைச் செய்து வருகிறான். மஹேஸ்வரய்யா, தன் மனைவியின் நடத்தையினால் அதிருப்தி அடைந்து வீட்டை விட்டு வந்தவர். மாடுமேய்த்து வரும் அவனைக் கண்டதும் அவன் இங்கே இருக்கவேண்டியவனல்ல என்று, ஹாஸ்டலில் சேர்த்து படிக்கவைக்கிறார். ஒருமுறை பைத்தியத்தின் விளிம்பு நிலைக்குச் சென்றுவிட்ட அவனை மீட்டெடுக்கிறார். கிருஷ்ணப்பாவின் பார்வையில் மஹேஸ்வரய்யா ஒரு ஞானி. பி.ஏ. படிக்கும்போது சக மாணவியான கௌரியின் மீது அவனுக்கு ஈடுபாடு. கௌரியின் தாய் தன் கணவனைவிட்டுப் பிரிந்து வந்து பணக்காரனான நஞ்சப்பாவின் வைப்பாட்டியாக இருக்கிறாள். கௌரியையும் அவனையும் இணைத்து ஹாஸ்டல் சுவரில் ராமு தவறாக எழுதிவைக்கிறான். கிருஷ்ணப்பா தான் தொடர்ந்து படிக்கப்போவதில்லை என்று ஒரு நாள் முடிவு செய்கிறான். காரணமற்ற திகில் அவன் மீது கவிகிறது. வாழ்க்கையின் முன் விரியும் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் அந்த திகிலை தன்னுள் விதைத்துவிட்டதாக அறிகிறான். மலைக்குன்றின் குகையில் வசிக்கும் பைராகியைச் சந்திக்கிறான். தன் மனதில் எழுந்துவிட்ட அர்த்தமற்ற திகிலுக்கு விடை காணும் விதமாக பைராகியிடம் செல்கிறான். ஆனால் பைராகி கிருஷ்ணப்பாவிடம் ஏதும் பேசுவதில்லை.

தெலுங்கானாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்ட அண்ணாஜி போலீஸ்காரர்களால் கண்காணிக்கப்படும் ஒரு கம்யூனிஸ்ட். கிருஷ்ணப்பாவிற்கு அவனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவனது பல்வேறு கருத்துக்கள் கிருஷ்ணப்பாவுக்கு உடன்பாடில்லை என்றாலும் அவனிடம் பழகிவருகிறான். தேடப்பட்டு வரும் அவனை பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு சென்னவீரய்யா என்ற பணக்காரன் வீட்டில் தங்கவைக்கிறான். சென்னவீரய்யா ரோட்டரி சங்கத்தின் உறுப்பினன். ஆங்கிலம் சரளமாகப் பேசவராததால் தன் ரோட்டரி சங்கத்தின் பிரகாசமாக வாழ்க்கை தடைபடும் என்று கருதி அண்ணாஜியிடம் ஆங்கிலம் கற்கிறார். சென்னவீரய்யாவின் மனைவி உமாவுக்கும் அண்ணாஜிக்கும் இதனால் நெருக்கம் ஏற்படுகிறது.

படுக்கையில் கிடக்கும் கிருஷ்ணப்பா தன் கைகால்களை அசைத்து சற்றே திருப்தியடைகிறான். கால் பெருவிரலின் அசைவு தான் மீண்டும் எழுந்து நடமாடிவிட முடியும் என்று நம்பிக்கையை அவனுக்குக் கொடுக்கிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பி டெல்லியில் மிராண்டா கல்லூரியில் ஆங்கிலம் போதித்துக் கொண்டிருக்கும் கௌரியைப் பார்க்கவேண்டும் என அவன் மனம் விரும்புகிறது. அவளைக் கடைசியாக சந்திந்துப் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டதை நினைவு கூர்கிறான். இன்னும் திருமணம் செய்யாமல்தான் அவள் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குக் கடிதம் எழுத நினைத்து அது முடியாமல் இருப்பது குறித்து கிருஷ்ணப்பா கவலையடைகிறான்.

அண்ணாஜியும் உமாவும் நெருக்கமாக இருப்பதை கிருஷ்ணப்பா ஒரு நாள் பார்த்துவிடுகிறான். இருவரும் கேரளாவிற்கு ஓடிப்போக இருக்கும் நிலையில் போலீஸ் அண்ணாஜியைக் கைது செய்து வாரங்கல் கொண்டு போகிறது. கிருஷ்ணப்பாவும் மகேஸ்வரய்யாவும் அண்ணாஜியைப் பார்க்க வாரங்கல் செல்கிறார்கள். அங்கே சென்றபின் எண்கவுண்டர் என்ற பெயரில் அண்ணாஜி கொல்லப்பட்டதை அறிந்து கிருஷ்ணப்பா ஆவேசப்படுகிறான். இதனால் அவனையும் கைதுசெய்து தனிமைச் சிறையில் அடைத்து, அண்ணாஜி பற்றிய பலவற்றை கேட்டு, சித்ரவதை செய்கிறது போலீஸ். இந்தப் பக்கங்களில் வரும் விவரிப்புகள் அனந்தமூர்த்தியின் கற்பனை வளத்தையும் புனைவின் திறத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் மூலம் உள்துறை அமைச்சரைப் பிடித்து கிருஷ்ணப்பாவை வெளியே கொண்டுவருகிறார் மகேஸ்வரய்யா. தன் சொந்த கிராமத்துக்கு செல்லும் அவன், அங்கே விவசாய்களின் சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறான். ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் ஆகிறான்.

இதன் பிறகு நாவல் நிகழ் காலத்தில் பயணிக்கிறது. ஆளும் கட்சி உடையும் நிலையில் இருக்கிறது. வீரண்ணா கிருஷ்ணப்பாவை முதலமைச்சர் ஆக்கும் முயற்சியில் இறங்குகிறார். கௌரி அவனை வந்து பார்க்கிறாள். தன் விடுப்பு முடியும் வரை அவனுடன் தங்கியிருக்க உத்தேசிக்கிறாள். கிருஷ்ணப்பாவின் அம்மாவும் அவனுடன் வந்து தங்குகிறாள். அவன் மனைவி சீதா வீடு வாங்க ஆசைப்படுகிறாள். வீரண்ணா அதற்கு உதவுகிறார். அரசியலில் எல்லோரும் தன்னைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது கிருஷ்ணப்பாவிற்கு வேதனை தருகிறது. இதுகுறித்து பத்திரிக்கைகளிலும் அவனைப் பற்றி செய்திகள் வருகிறது. ஆளும் கட்சி உடைகிறது. இந்நிலையில் லலிதா என்று பெண் இரு இளைஞர்களால் மானபங்கம் செய்யப்படுகிறாள். அவர்களில் ஒருவன் முதலமைச்சர் மகன் என்றும் மற்றவன் வீரண்ணாவின் மகன் என்றும் சொல்லப்படுகிறது  இதனால் மனம் வருந்தும் கிருஷ்ணப்பா, கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து காலத்தை கவனிப்பதே இப்போது தனது ஆசை என்று கௌரியிடம் சொல்கிறான். அரசிலில் மக்களுக்கு நன்மை செய்யமுடியாது என்றுணர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்கிறான்.

வாழ்க்கையில், மனிதன் தான்  எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதர்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் எதிராக எவ்வாறு எதிர்வினை புரிகிறான் என்பதை நுட்பமாக ஆராய்கிறது நாவல். கிருஷ்ணப்பாவின் கடந்த காலம் மற்றும் நிகழ் கால வாழ்க்கைக்குமாக நாவல் மாறி மாறி பயணிக்கிறது. அவ்வப்போது காலத்தின் பிந்தி நடந்தது முன்னாலும், காலத்தால் முந்தி நடந்தது பின்னாலுமாக நாவலை  சொல்லிச்  செல்கிறார் அனந்தமூர்த்தி.  200 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல் என்றாலும் செறிவான அடர்த்தியான நாவல். உறவுகளின் இடையேயான தன்முனைப்பு வெளிப்படும் பல இடங்களை அனந்தமூர்த்தி அழகாகவும் நுட்பமாகவும் சித்தரித்திருக்கிறார். அவஸ்தை நமக்குப் புதியதோர் அனுபவத்தைக் கொடுக்கிறது. நஞ்சுண்டனின் மொழிபெயர்ப்பு சரளமாக அமைந்து வாசிப்பனுபவத்தைக் கூட்டுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...