March 10, 2013

நகுலனின் நினைவுப் பாதை: பாதையில் நெருடும் முள்

நகுலனின் நினைவுப் பாதையைப் படிக்கும் போது அதிக சிரமம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு கட்டுரையை வாசிக்கும் உணர்வோடு நாவலை வாசித்து முடித்தேன். நாவலை நாட்குறிப்பாக தோற்றம் தர அத்தியாய எண்களுக்கு மாற்றாக தேதி தரப்பட்டிருக்கிறதே அல்லாமல், இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லை. நகுலனின் நாட்குறிப்பில் வரும் நவீனன் தனது ஐந்தாவது நாவலை எழுத ஆரம்பிக்கிறான் என்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. தனது பூர்வீகக் கதையை தன் பாட்டனாரிலிருந்து சொல்கிறான் நவீனன். அதனூடே அவனது எழுத்தாள நண்பர்கள் பலருடன், நாவல் கவிதை பற்றிய விவாதம் நடத்துகிறான். சுந்தர ராமசாமி, க.நா.சு., பிரமிள், பஷீர், மௌனி  போன்ற பல்வேறு எழுத்தாளர்கள் சொன்னவை அல்லது எழுதியவை நாவலினூடே அவ்வப்போது பேசப்படுகிறது. நவீனன் தன்னைச் சுற்றி எப்போதும் ஏராளமான புத்தகங்களை வைத்திருக்கிறான். புத்தகங்கள் வாங்கிக் குவிப்பதும் படிப்பதும், படிக்காமல் இருக்கும் புத்தகங்களை நினைத்து வருந்துவதும் அவன் வாடிக்கை. நாவல் கவிதை எழுதுவதும், காமம் மனிதனை அலைக்கழிப்பதையும், பிறன் மனைவியாகிவிட்ட தன் முன்னால் காதலி சுசிலா பற்றி பேசுவதும் அவனுடன் எப்போதும் அவன் கூடவே வரும் விசயங்கள்.

நாவல் முழுவதும் வார்த்தை விளையாட்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. நாவலில் புனைவுத் திறன் என்பது சிறிதும் இல்லை. வாசகனின் மனதில் கற்பனையைத் தோற்றுவிக்காத தட்டையான படைப்பு. அன்றைய காலகட்டத்தில் அதன் கட்டமைவின் காரணமாகவே அதற்கு இலக்கிய அந்தஸ்து வழங்கப்பட்டதோ?. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் எழுத்தாளனைப் பற்றிய நாவல்தான் ஆனால் அது எவ்வளவு கற்பனைச் செறிவுடனும், புனைவின் நேர்த்தியுடனும் அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது நினைவுப் பாதை, நம் பாதையில் நெருடும் முள்ளாகவே தெரிகிறது.

நவீனனின் பாட்டனார் விஸ்வநாத ஐயர் திவானாக இருந்தவர். நல்ல படிப்பாளி. அவரின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவர் நவீனனின் தந்தை அப்பாவு. படிப்பறிவு இல்லாதவர். ஐயரின் சொத்துக்கள் அவர் கைக்கு வந்த பிறகு காணாமல் போகிறது. நவீனன் பல்வேறு பணிகளுக்குப் பிறகு தற்போது கல்லூரி ஒன்றில் விரிவரையாளனாகப் பணியாற்றுகிறான்.  அவனது நண்பன் கேசவமாதவன் ஒரு  எழுத்தாளர். இருவரும் நாவல் ஒன்றை எழுதும் முயற்சியில் இருக்கிறார்கள். சச்சிதானந்தம் பிள்ளை நவீனனுக்கு குரு போன்றவர். பல்வேறு தத்துவங்களை உதிர்ப்பவர். தனது எல்லா பிரச்சினைகளுக்கும் விடை அவரிடம் இருக்கிறது என்று நவீனன் நம்புகிறான். பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுக்கும் பணிபுரியும் சிவன் நவீனன் நண்பர்களில் ஒருவன். இருவரும் கவிதை, நாவல் குறித்து விவாதிக்கிறார்கள். வாழ்க்கை குறித்தும் விவாதிக்கிறார்கள். சிவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிறகு சரியாகிறது. சிவனும் கவிதை எழுதுகிறான்.

அடுத்ததாக நண்பன் நடராஜனைப் பற்றி நாவல் சொல்கிறது. அவனும் ஒரு எழுத்தாளன். நவீனனும் சிவனும் அடிக்கடி நடராஜனை அவன் வீட்டுக்குச் சென்று பார்க்கிறார்கள். பேசுகிறார்கள். நடராஜன் நாவல் எழுதுவது பற்றி ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறான். மூவரும் கதை பற்றியும், அது பிரசுரமாவது பற்றியும், வேறு எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பது பற்றியும் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். எப்போது பார்த்தாலும் அதே பேச்சு. மூவருக்கும் அதில் உள்ள கருத்துவேறுபாடு பற்றியும் பேசுகிறார்கள். கடைசியில் நடராஜன் எழுதிய நாவல் வெளியாகிறது.

இத்தனையையும் 150 பக்கங்களுக்கு எழுதிவிட்டு, என்னை, நண்பர்களைப் பற்றி எழுதியாகிவிட்டது. இனிதான் முக்கியமானதை, காலத்துக்கும் நிற்பதை எழுதவேண்டும் என சுசிலாவைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான் நவீனன். சுசிலாவை முதன்முதலாகப் பார்த்தது, அவளுடன் தான் எழுதிய கதையைப் பற்றி பேசியது, அவள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்டது, அவள் கணவனுக்கு மாற்றலாகவே அவள் வேறு ஊருக்குச் சென்றுவிட்டது எல்லாம் சொல்கிறான். பிறகு கொல்லிப்பாவை என்ற தலைப்பில் சுசிலாவைப் பற்றி பக்கம் பக்கமாக கவிதை எழுதுவது வருகிறது.

நவீனனுக்கு 75 வயது ஆகிறது. “ஜிங்ளி ஜிங்ளி” என்று பிதற்றியபடி ஏதேதோ கவிதை எழுதியபடி இருக்கிறான். அவன் நணபர்கள் அவனுக்கு இப்படியாகிவிட்டதே என்று வருந்துகிறார்கள். மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான். குணமடைந்து அவன் போகலாம் என்று மருத்துவர் சொல்ல, தான் இன்னும் ஒரு வாரம் தங்கிவிட்டுச் செல்வதாகக் கூறுகிறான். அங்கே வரும் நாயர் என்ற பைத்தியத்திடம் தான் எழுதிய நாவல் அனுபவங்களைச் சொல்கிறான்.

ஒவ்வொரு நாவலை எழுதி முடித்ததும் மனநல மருத்துவமனையிலிருந்து திரும்பியதான உணர்வு ஏற்படுவதாக நவீனன் நினைக்கிறான் என்ற கடைசி வாக்கியத்துடன் நாவல் நிறைவடைகிறது.

நாவலை படித்து முடித்ததும் மனம் முழுக்க வறட்சி நிரம்பிவிட்டதாக ஒரு உணர்வு. அதைச் சரிசெய்ய வேறு ஒரு நல்ல நாவலை கட்டாயம், உடனடியாக, படிக்க வேண்டியது அவசியம்.

Related Posts Plugin for WordPress, Blogger...