March 7, 2013

புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்

பனைவிளைக் கிராமத்தில்,  புத்தம் வீடு எனும் பெரிய வீட்டில் வசிக்கும் கண்ணப்பச்சிக்கும் கண்ணம்மைக்கும் இரண்டு மகன்கள். மூத்தவர் மகள் லிஸி. இளையவர் மகள் லில்லி. வீடுதான் அவ்வாறான பெயரே தவிர அதில் வாழும் மனிதர்கள் பழமை வாய்ந்தவர்கள். லிஸி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக கதையை விவரிக்கிறார் ஹெப்சிபா ஜேசுதாசன். தனது பத்தாவது வயதில் லிஸி பள்ளிக்குச் செல்கிறாள். மிஷன் வீட்டு மேரிதான் அதற்கு ஆவண செய்கிறாள். ஆனால் வயதுக்கு வந்தவுடன் வீட்டோடு முடக்கப்படுகிறாள். கூண்டுக் கிளியாகிறாள். குடும்பத்தின் தலைவர் கண்ணப்பனுக்கு தன் மகன்களின் நடத்தையும் போக்கும் அதிருப்தி தருவதாக இருக்கிறது. மூத்த மகன் சதா குடித்துவிட்டு பொறுப்பின்றி திரிகிறார். இளைய மகன் வியாபாரம் என்ற பெயரில் சொத்தை அழிக்கிறார் என்று தன் இரண்டு மகன்கள் மீதும்  அவருக்கு குறை. தனது மனைவி இறந்துபோனதும் கண்ணப்பச்சியின் உலகம் சுருங்கிவிடுகிறது. லில்லி வளர்ந்ததும் பள்ளிக்கூடம் போகிறாள். வயதுக்கு வந்த பின்னரும் அவள் பள்ளிக்குச் செல்வதை யாரும் ஆட்சேபணை செய்வதில்லை. காலம் மனிதர்களின் போக்கை மாற்றிவிடுகிறது.

புத்தம் வீட்டுக்காக பனையேறி தொழில் செய்யும் தங்கையன் தன் ஊருக்குச் சென்றுவிடுவதால், புதிதாக அன்பையன் அந்த பணியை ஏற்கிறான். வெளியூரிலிருந்து வந்த அவன் பனைவிளையில் நிலம் வாங்கி வீட்டையும் கட்டுகிறான்.

லிஸிக்கு திருமணம் செய்யும் பொருட்டு, கண்ணப்பச்சியை பூர்விகமான நிலம் ஒன்றை விற்கும்படி சொல்கிறார்கள் மகன்கள். அதில் அவருக்கு சம்மதமில்லையென்றாலும் வேறுவழியின்றி விற்க முடிவுசெய்கிறார். இளையவர் தன் மனைவியின் அண்ணனுக்கு அந்த நிலத்தை விற்கும் தருணத்தில் அன்பையனின் மூத்த மகன் தங்கராஜ் தலையிட்டு, அது குறைந்த விலைக்கு விற்கப்படுவதை சுட்டிக் காட்டுகிறான். ஒரு பனையேறி அவ்வாறு செய்வது லில்லியின் தந்தைக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. உடனடியாக முழுப் பணத்தையும் தராமல் கல்யாணத்தின் போது மீதியைத் தருவதாகச் சொல்லும் ஏற்பாடு லிஸியின் அப்பாவுக்கு பிடிக்காமல் போகிறது. இவ்வாறு அதை விற்க முடியாமல் போவது அண்ணன் தம்பிகளுக்கிடையே விரோதத்தை வளர்க்கிறது.

இந்நிலையில் தங்கராஜ் லிஸியை விரும்புகிறான். லிஸிக்கும் அவன் மீது ஈடுபாடு இருக்கிறது. தன் தலையீட்டால்தான் அவளின் திருமணம் தடைபட்டதாக வருந்துகிறான் அவன். அவளை திருமணம் செய்ய அந்த ஊர் உபதேசியாரிடம் பெண் கேட்கச் சொல்கிறான். அவர் மறுத்துவிடுகிறார். இது தெரிந்த அன்பையன் அவன் ஊரில் இருந்தால் பிரச்சினை வரும் என்று பையனை ஊருக்கே திருப்பி அனுப்புகிறான்.

கண்ணப்பச்சியின் உடல் நலம் கெடுகிறது. அப்போது அவரை கவனித்துக் கொள்ள வந்த வைத்தியர் அந்த வீட்டு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார். லில்லியின் அப்பா செய்யும் வியபாரம் நஷ்டமடைவதால், பிணையமாக வைத்த சொத்துக்களை அபகரிக்க நீதி மன்ற உத்தரவு வருகிறது. எனவே வைத்தியருக்கு திருமணம் செய்வதன் மூலம் கடன் அடைபடும் என்று, அவரின் வயது வித்தியாசத்தையும் பாராது அனைவரும் சம்மதிக்கிறார்கள். திருமணத்திற்காண பேச்சு நடக்கும்போதுதான் வைத்தியர் திருமணம் செய்து கொள்ள விரும்புவது லிஸியை அல்ல லில்லியைத்தான் என்பது தெரிகிறது. தான் எல்லா இடத்திலும் புறக்கணிக்கப் படுவது லிஸிக்கு வேதனையளிக்கிறது. எப்படியோ பிரச்சினையை முடித்து லில்லியை அவருக்கு மணமுடிக்கிறார்கள். இதனால் மூத்தவருக்கு இளையவரின் மீதான கோபம் அதிகமாகிறது.

இந்நிலையில் தங்கராஜ் மீண்டும் ஊருக்கு வருகிறான். அவன் உபதேசியாரிடம் லிஸியை பெண் கேட்கச் சொன்னதை இரு சகோதரர்களும் அறிந்து அவனிடம் சண்டையிடுகிறார்கள்.

திடீரென ஒரு நாள் இளையவர் தலை வெட்டப்பட்டு இறந்து கிடக்கிறார். போலீஸ் தங்கராஜையும் மூத்தவரையும் கைது செய்கிறது. எல்லாம் தன் பொருட்டே நடந்தன என்று லிஸி மனம் வருந்துகிறாள். மூத்தவர் விடுவிக்கப்பட்டு வெளியே வருகிறார். வந்து நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார். இறக்கும்போது தான்தான் தன் தம்பியைக் கொன்றதாகச் சொல்கிறார். வழக்கு நடந்து தங்கராஜ் விடுவிக்கப்படுகிறான்.

இறுதியில் தங்கராஜ் லிஸியை மணமுடிக்கிறான்.

எளிமையான காதல் கதையின் பின்னனியில் மனித மனத்தின் ஆசைகளையும் துவேஷங்களையும் ஏக்கங்களையும் சிறப்பாக சொல்லியிருக்கிறார் ஹெப்சிபா ஜேசுதாசன். கதையில் உலவும்  பாத்திரங்கள் அவர்களின் செயல்களால் நம் மனதின் நினைவில் நிற்கிறார்கள். அடிக்கடி காறி துப்புவதின் மூலம் கண்ணப்பச்சியும்,  குடிப்பதன் வாயிலாக மூத்த மகனும், வியபாரம் மூலமாக இளைய மகனும், கூண்டில் அடைபட்ட நிலையில் லிஸியும்  நம் மனதில் காட்சியாகிறார்கள். லிஸியின் மனவோட்டங்கள் விரிவாக விவரிப்பது நாவலுக்கு வலு சேர்க்கிறது. ஆனாலும் ஆங்காங்கே ஏராளமான கேள்விகளை நம்மை நோக்கி வீசுவதின் மூலமாக கதையை நகர்த்துவது நம்மை நாவலில் ஒன்ற விடாமல் செய்கிறது. பெண்கள் மீதான சமுதாயத்தின் கட்டுப்பாடுகளைக் குறித்த பதிவாக இந்நாவல் அமைந்திருக்கிறது. பெண்களின் சுதந்திரமும் ஆசையும் ஆண்களால் கேள்விக் குறியாவதைத் திறம்பட எழுதியுள்ளார். அத்தோடு நில்லாமல் ஒரு குடும்பத்தின் தலைமுறை வாழ்க்கை சீரழிந்து போவதை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார்.

1960-ல் வெளியான போது முக்கியமான நாவலாக புத்தம் வீடு கருதப்பட்டது. அதை இன்றும் இந்நாவல் தக்கவைத்துக் கொண்டிருப்பது அதன் சிறப்பு. ஒரு காலகட்டத்தின் பெண்களின் நிலையையும் அவர்களின் மன இயல்புகளையும் வெகு நோ்தியாக ஹெப்சிபா ஜேசுதாசன் பதிந்திருப்பதை நாவலினூடான வாசிப்பில் நாம் உணர முடிகிறது. ஆனாலும் லிஸியைத் தவிர மற்ற பாத்திரங்கள் அழுத்தமாக அமையவில்லை. லிஸியின் கதையைச் சொல்ல அவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றளவிலேயே அவர்களின் இருப்பை நாம் உணர்கிறோம். கதை ஒரு கட்டத்துக்கு மேல் வேகவேகமாக பயணித்து திடீரென முடிந்து போகிறது. எனவே நாவலில் காலத்தின் வெளி ஏனோ பரந்து விரிந்ததாக உணர இடமில்லாமல் போகிறது.  இருந்தும் இன்றைய காலத்தின் வாசிப்புக்கும் ஏற்றதாக இந்நாவல் இருப்பது அதன் மற்றொரு சிறப்பு. புத்தம் வீடு நாம் வாசிக்க வேண்டிய அருமையான நாவல்.

Related Posts Plugin for WordPress, Blogger...