February 11, 2013

பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி: இழப்பின் துக்கம்

தன் முதன் நாவலான புலிநகக் கொன்றைக்கு பிறகு கிருஷ்ணன் எழுதிய இரண்டாவது நாவல் இது. வழக்கம்போல் இதுவும் ஆங்கிலத்திலிருந்து தமிழாகியிருக்கிறது. ட்ரான்ஸ் மிஷன் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் சந்திரன் தன் நிறுவனத்தில் நடந்த ஊழல் ஒன்றை கண்டுபிடிக்கிறான். ஒப்பந்தம் மூலம் பணியாற்றும் டவர் ஃபேப்ரிகேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் இதற்குக் காரணமாக இருக்கிறது.  அதே சமயம் அவனது நிறுவனத்தில் பணிபுரியும் கோஷ் என்று இன்ஜினியர் அஸ்ஸாம் போராட்டக் காரர்களால் கடத்தப்படுகிறான். ஊழலை வெட்ட வெளிச்சமாக்கும் முயற்சிக்கு இடையே, கோஷை விடுவிக்கும் பணியிலும் சந்திரன் இறங்குகிறான். இரண்டிலும் அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அதன் பின்னின்று செயல்படும் அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணங்களையும் பற்றிய நாவலே கலங்கிய நதி.

இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தனக்கு நேர்ந்த அனுபவங்களை சந்திரன் நாவலாக எழுதுகிறான். அவன் எழுத எழுத அத்தியாயங்களை அவன் மனைவி சுகன்யா, தன் நண்பர்கள் சுபீர்,  ஹர்பர்ட் இருவருக்கும் மின்னஞ்சலில் அனுப்புகிறாள். அவர்களும் அதைப்பற்றிய தங்கள் எதிர் வினைகளை எழுதுகிறார்கள். இவர்கள் எல்லோருமே நாவலில் வருகிறார்கள். நாவல் நிஜத்துக்கும் கதைக்கும் இடையே மாறி மாறி பயணிக்கிறது. இது நாவலைக் கட்டமைத்ததற்கான வெறும் உத்தியாக அன்றி, அதற்கான அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக வாசகன் உள்ளே நுழைவதற்கான தடையாகவே இருக்கிறது. நேரடியான நாவலாகவே எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. வழக்கம்போல் காந்தி, மார்க்ஸ் பற்றிய கருத்துக்களை இந்நாவலிலும் கொண்டுவருகிறார் கிருஷ்ணன்.

கடத்தல்காரர்களின் உலகம், ஊழல் புரிபவர்களின் உலகம் இரண்டையும் ஒருசேரக் காட்டுவதின் மூலம் இரண்டிலும் இருக்கும் பின்னனி சிக்கல்கள். இரண்டுக்குமே பிரதான குறியாக இருக்கும் பணம் என்ற வஸ்து. பணியில் நேர்மையாக இருப்பதால் வரும் பிரச்சினைகள். முதலாளித்துவத்தின் கரங்கள் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் அவலம். அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே எப்போதும் நிரப்ப முடியாத இடைவெளியும் மோதலும் இருந்தே வருவது. போன்ற பல்வேறு விசயங்களை நாவல் தொட்டுச்செல்கிறது. இருந்தும், எல்லாமே நாம் பல்வேறு திரைப்படங்களில் பார்த்தவற்றையும், செய்திகளில் அன்றாடம் படித்தவற்றின் நீட்சியாகவே நாவல் தெரிகிறது.

அடுத்து என்ன என்ற ஒற்றை கேள்வியைத் தொற்றிக்கொண்டு நாவல் செல்கிறது. சில சமயங்களில் பக்கத்துப் பச்சைப் புல்வெளிகளின் ஓரமும் நமக்குக் காட்சியளிக்கிறது. ஏனோ அவைகள் நாவலுடன் ஒட்டாமலும், குறிப்பிடும்படி பெரியதோர் மனப் பரவசத்தைத் தராமலும் இருக்கிறது. காட்சிகளின் சித்தரிப்பு நமக்குள் பெரியதோர் கற்பனையைக் கொண்டு சேர்க்காததும் அதற்குக் காரணமாக இருக்கலாம். நாவல் காட்டும் தரிசனத்தை “இழப்பின் துக்கம்“ என்று வேண்டுமானால் சொல்லலாம்.  மற்றபடி நாவல் பெரும் பாதிப்பு எதையும் நம்முள் ஏற்படுத்தவில்லை. நாவலை முழு மூச்சாக ஒரே வாசிப்பில் படித்துவிடலாம். நம்மை எங்கேயும் யோசிக்கவோ, சிந்திக்கவோ, நம்மை நாம் ஆசுவாசப் படுத்தவோ தேவை இல்லாமலிருக்கிறது. வாழ்க்கை பற்றிய பெரும் தரிசனம் எதையும் நாவல் நமக்குத் தரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

எல்லாவற்றையும் மீறி நாவலை நல்லபடியாக வாசகனிடத்து கொண்டுசேர்க்க வேண்டும் என்ற அக்கறை நாவலாசிரியருக்கு இருப்பது புலப்படுகிறது. ஆனால் அவரது அக்கறை ஏனோ வெற்றி பெறவில்லை. சுருங்கச் சொன்னால், புலிநகக் கொன்றை நம்முள் ஏற்படுத்திய பரவசத்தையும் பாதிப்பையும் கலங்கிய நதி ஏற்படுத்தத் தவறிவிட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...