January 23, 2013

பூமணியின் அஞ்ஞாடி-காலப் பெட்டகம்

அஞ்ஞாடி நாவலைக் கையில் எடுத்ததும் “அம்மாடி” என்றிருந்தது. அதன் பக்கங்கள் மலைப்பைத் தந்தன. தினமும் எடுத்து அழகு பார்ப்பதோடு சரி. பல நாட்கள் படிக்காமலே நகர்ந்தன. கடலைக் கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தால் அப்படித்தான் என்று தோன்றவே, ஒரு நாள் துணிந்து இறங்கினேன். முதலில் அலைகளைச் சமாளித்து நிதானப்பட சற்று நேரமானது. பிறகு நீஞ்சுவது எளிதானது. நீந்த நீந்த சுகமாக இருந்தது. ஒரு காலகட்டத்தின் பிரம்மாண்டமான வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார் பூமணி. எப்படி அவரால் செய்ய முடிந்தது என்ற பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை. நாவலைக் கட்டமைத்ததில் என்னவொரு நேர்த்தி, அழகு, வசீகரம். இன்னும் என்னென்னவோ. வாயைக் கட்டிவிட்டாற்போல வார்த்தைகள் எழும்பவில்லை. நாவலின் நறுமணம் பல நாட்கள் நாசியில் இருந்தது. இன்னும் இருக்கிறது. பூமணியின் கதாபாத்திரங்கள் கனவிலும் நினைவிலும் முடிவில்லாது உலவிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த கிராமங்கள் நம் ஊராகிவிட்டன. அந்தக் கதாபாத்திரங்கள் நம் சொந்தமாகிவிட்டார்கள். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட உழைப்பு எவ்வளவு கடுமையானது என்று உணரும் தருணத்தில், அவரையும் அவர் நாவலையும் நாம் கொண்டாடக் கடமைப்பட்டவர்கள்.

ஆதி காலம் தொட்டே மதமும் சாதியும், ஒருவருக்கொருவர் தத்தம் பகையை பேணிக்காத்து, பழி தீர்த்துக்கொள்ளும் கருவியாகவே இருந்து வந்திருக்கிறது. அவற்றின் பெயரால் எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன என்பதை நினைக்கையில் உள்ளம் நடுங்குகிறது. ஒருபுறம் மதத்தை வளர்க்கும் நடவடிக்கைகளும், மறுபுறம் அதே மதத்தின் பெயரால் தங்களுக்குள் வெட்டிக்கொண்டு சாவதையும் என்னவென்று சொல்ல? அதைவிட வெட்கக்கேடான செயல் வேறு என்ன இருக்கமுடியும்? மதத்தின் மீதும் சாதியின் மீதும் அவ்வளவு பிடிமானமும் நேசமும் கொண்ட மனிதன், அவைகள் சொல்பவை என்ன என்பது குறித்து, காது  கேட்காதவனாக ஆகிவிடுவது ஏன் என்று புரியவில்லை. அவற்றிற்குச் செவிமடுக்கும் எளிய செயலைச் செய்தாலே, அடுத்தவன் மீது எவ்வாறு பகைமை பாராட்டமுடியும்? மனிதன் தான் விரும்பியவற்றை செய்ய அவற்றை ஒரு சாக்காக வைத்துக்கொள்கிறான் என்பதைவிட வேறு என்ன சொல்ல? இவற்றிலேதும் அக்கறை காட்டாத பல உயிர்களுக்கும் இதனால் இழப்பு ஏற்படுகிறதே அவற்றிற்கு யார் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? போன்ற உள்ளக் குமுறல்கள் நாவலைப் படிக்கும்போது நமக்குள் எழுகிறது.

சமணர்கள் கழுவேற்றப்பட்ட காலத்திலிருந்து இவைகள் தொடர்கதைகளாக இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவைகள் மனித குலம் இருக்கும் காலம்வரை இருந்துகொண்டுதான் இருக்கும். காலத்துக்கு தக்கபடி அவை வேறுவேறு உருவம் எடுத்துவிடுகின்றன. அவற்றை இல்லாமலாக்கும் சக்தி யாருக்கும் எதற்கும் இருப்பதாகத் தெரியவில்லை, என்ற ஆதங்கத்தை பூமணி நாவலில் வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

பாய்ந்து மூர்க்கமாகச் செல்லும் கடலை குடுவையில் அடக்கமுடியுமா? அது போல்தான் நாவல் சொல்லும் கதையைச் சுருங்கச்சொல்வதும். கதையின் ஆரம்ப் பக்கங்களில் ஆண்டி, மாரிக்கும் இடையேயான நட்பை சொல்லும்போது, பிள்ளைப் பருவத்து விளையாட்டுகளை, அவைகள்  மீண்டும் திரும்பக் கிடைக்காத அற்புதம் என்பதாலோ என்னவோ அதையே பன்னிப்பன்னி சொல்லி அழகு பார்க்கிறார் பூமணி. அவைகள் நம் பிள்ளைப் பருவத்தை நினைவுபடுத்துவதோடு, நம் குழந்தைகள் மீது அனுதாபத்தையும் எழச்செய்கின்றன. மாரியின் புனை கதைகள், நம் இன்றைய குழந்தைகள் இழந்துவிட்ட இழப்பைச் சுட்டுவதாக இருக்கின்றன. நாவல் முழுதும் பெரும்பாலும் உரையாடல்கள் மூலமாகவே கதையை சொல்லிச்செல்கிறார் பூமணி. நாவலை வாசிக்கும்போது நமக்கு ஏற்படும் சிக்கல், புற்றீசல் போல் கிளம்பிவரும் கதா பாத்திரங்கள். யாரைத் தொடர்வது யாரை விடுவது என்ற குழப்பம். நாம் கதாபாத்திரங்களைத் தெடர்ந்தே வாசித்துப் பழக்கப்பட்டவர்கள். எனவே, இம்மனத் தடை நீங்க ஒரே வழி நாம் கதாபாத்திரங்களை விட்டுவிட்டுக் காலத்தைப் பின்தொடர்வதுதான்.

வாசகனைக் குழப்பி, தன் சமார்த்தியத்தைக் காட்டுவதில், படைப்பாளிகள் தீவிரமாக இயங்கிவரும் காலமிது. அப்படி ஏதுமில்லாமல் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைச் சாதாரணமாகச் சொல்வதன் மூலம் பிரம்மாண்டத்தை எட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பூமணி. இது மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் என்பதைவிட, பல தலைமுறைகளின் வாயிலாக, காலத்தை நம்முன் வைக்கும் காலப் பெட்டகம் என்று சொல்லலாம். பூமணி என்ற கால இயந்திரம், நம்மைக் கடந்த காலத்தின் மூலை முடுக்கெல்லாம் சஞ்சாரம் செய்ய வைக்கிறது. காலத்தின் அடுக்குகள் மெல்ல மெல்லப் பரந்து விரிந்து எங்கும் வியாபித்து, நம்மைக் கட்டற்ற வெளியில் தூக்கி வீசுகிறது. அதன் வீச்சு தாங்காமல் நாம் மயங்கிக் கிடக்கிறோம். அந்த மயக்கம் ஒரு சுகம்.

அஞ்ஞாடி அச்சு அசலான வரலாற்று நூல். நாவல் உலகில் ஒரு மைல்கல்.

Related Posts Plugin for WordPress, Blogger...