January 20, 2013

காலச்சுவடு தலையங்கமும் சில நூல் விமர்சனங்களும்

காலச்சுவடு ஜனவரி 2013 இதழில், எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் நூலகங்கள் என்ற தலைப்பில் தலையங்கம் படித்தேன். நூல்நிலையங்களைக் குறித்த பழைய ஞாபகங்கள் மனதில் எழும்பின. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசாங்க நூல் நிலையங்களின் இலட்சணம் நாம் அறிந்ததே. வாசகனைப் பற்றிய அக்கறை இல்லாத நூல் நிலையங்கள் அவை.  அங்கே இருக்கும் அநேக புத்தகங்கள் வாசகனுக்குத் தேவைப்படாதவை. யாரோ ஒருவருக்கு ஆதாயமளிப்பதற்காக வாங்கப்பட்ட புத்தகங்களே குவிந்திருக்கும். மூச்சுத் திணறடிக்கும் குப்பைகள்தான் அதிகமும் இருக்கும். அந்த குப்பைகளில் நுழைந்து வேண்டிய நூல்களைத் தேடுவதென்பது அலுப்பும் ஆயாசமும் தருவதாகவே முடியும். நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் எல்லா நூலகங்களும் இப்படித்தானா என்றறிய, நண்பனுடன், பல நூலகங்களுக்கு சென்று பார்த்திருக்கிறேன். எல்லா நூலகங்களிலும் இப்படித்  தேவையில்லாத குப்பைகளையே அதிகமும் காண முடிந்தது. வாசிப்பை நேசிப்பாகக் கொண்ட சில நூலகர்கள், அதே குப்பைகளை சுத்தமாகவும், அழகாகவும், தேடுபவர்களுக்கு சோர்வு தராதவண்ணம் அடுக்கிவைத்திருந்தார்கள். அவ்வளவே வித்தியாசம். பாவம் அவர்கள் என்ன செய்யமுடியம். சட்டியில் இருப்பதைத்தானே அகப்பையில் கொடுக்க முடியம்? இன்றும், சில குறிப்பிட்ட நகரங்களில் இருக்கும் பெரிய நூலகங்களைத் தவிர எல்லாமே ஏகதேசமாக அப்படியேதான் இருக்கும் என்று நினைப்பதில் மாற்றம் வேண்டியிருக்காது என்றே தோன்றுகிறது.

காலச்சுவடில் சொல்லப்பட்ட விசயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்பதால் அதிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

தமிழக அரசின் நூலக ஆணை தொடர்பாகக் கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி, நூலக ஆணையின் முதன்மை நோக்கம் பதிப்பாளர்களை ஆதரிப்பது அல்ல. மாறாகத் தமிழகம் எங்கும் இருக்கும் எளிய வாசகரின் வாசிப்புக்கு நூல்களை வழங்குவதாகும். துரதிருஷ்ட வசமாக நூலக ஆணை தொடர்பான வாதங்களில் வாசகனின் இருப்பு முற்றாக மறக்கடிக்கப்பட்டு அது அரசுக்கும் பதிப்பாளருக்குமான கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது. நூல்களின் கொள்முதல் தமிழக வாசகனின் தேவை அறிந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வெகுஜன வாசிப்புக்குரிய நூல்களும் இலக்கிய நூல்களும் கல்வி நூல்களும் ஆய்வுக்குரிய நூல்களும் பற்பல கருத்துடைய இதழ்களும் நாளிதழ்களும் நூலகங்களில் இடம்பெறுவது அவசியம். நூலக ஆணைக்கான கோரிக்கையில் வாசகனின் தேவை புறமொதுக்கப்பட்டு, எல்லாப் பதிப்பாளர்களுக்கும் நூலக நிதியைப் பங்கு வைக்கும்படி வேண்டும் போலி ‘சோஷலிச’ கொள்கை முன்வைக்கப்படுகிறது. பதிப்பாளர்கள் பிரசுரிக்கும் நூல்களின் உள்ளடக்கச் செறிவு, பதிப்புத் தரம், தயாரிப்பு நேர்த்தி போன்ற வாசகனின் கரிசனத்திற்குரிய அம்சங்கள் முற்றாக மறுதலிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அரச நூலகங்களில் இருக்கும் பெரும்பான்மையான நூல்கள் வெகுஜன வாசிப்புக்கோ கல்விக்கோ ஆய்வுக்கோ பயன்படாத வெற்று நூல்களாக இருக்கின்றன. நூலக நிதியைச் சுரண்டிப் பிழைக்கும், வாசக உறவில் அக்கறையற்ற, ஒட்டுண்ணிப் பதிப்பாளர்களின் தயாரிப்புகளான ‘பொன்மனச் செம்மல்’, ‘கலைஞர் பிள்ளைத் தமிழ்’, ‘தலை சீவுவது எப்படி’ போன்ற வெற்று நூல்களின் கொள்முதலில் நூலக நிதி பல பத்தாண்டுகளாக வீணடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலிருக்கும் ஒவ்வொரு நூலக உறுப்பினருக்கும் நூல்களைப் பரிந்துரைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதன் புள்ளிவிபரங்களைக் கணக்கெடுத்து அரசியல் சார்பற்ற நூலகக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நூல்கள் தேர்வு அமைய வேண்டும். எதை எடுத்தாலும் ஆயிரம் பிரதிகள் என்ற பதிப்பாளருக்குச் சாதகமான, வாசகருக்குப் பயனற்ற, தமிழக மக்களின் வரிப்பணத்தில் சேகரிக்கப்படும் நூலகநிதியை வீணடிக்கும் கொள்கையை நீக்கிவிட்டு நூலின் தன்மை, வாசகர் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறைமை அமைய வேண்டும். தமிழகத்தில் மிகப் பரந்துபட்ட அளவில் நூலக நிதி வசூலிக்கப்படுகிறது. இவை பல ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த நிதி முறையாக நூலக மேம்பாடு, போதிய ஊதியத்துடன் நூலகர் நியமனம், நூல் கொள்முதல், புதிய நூலகங்களின் உருவாக்கம் எனப் பரந்துபட்ட நோக்கோடு செலவிடப்பட வேண்டும் - பதிப்பாளர் நலன் மட்டும் கருதி அல்ல. வாசிப்புப் பண்பாடு மேம்பட ஒரு நூலக இயக்கம் தொடங்குவதும் முக்கியமானது.

தமிழ் வாசகரை நம்பிச் செயல்பட விரும்பும் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்சினை நூல் விநியோகம். நூல் விநியோகிப்பாளர் என்ற பிரகிருதி தமிழில் இல்லை. பெரும் பதிப்பகங்களால் தமக்கான சொந்த விநியோகப் பிரிவை உருவாக்கிச் செயல்பட முடிகிறது. சிறு பதிப்பாளர்களுக்கும் புதிய பதிப்பாளர்களுக்கும் இது சாத்தியமல்லை. ஒரு கூட்டான நூல் விநியோக முறைமையை ஏற்படுத்தப் பதிப்பாளர் கூட்டமைப்பு முன்கை எடுக்க வேண்டும். அத்தோடு தமிழகத்தில் இன்று குறைந்தது 10 மையங்களில் வெற்றிகரமாகப் புத்தகச் சந்தை நடத்தும் சாத்தியம் உள்ளது. பதிப்பாளர் கூட்டமைப்பின் கீழ் தனிப் பிரிவாக ஒரு புத்தகச் சந்தை நிர்வாகத்தை முழுநேர ஊழியர்களுடன் உருவாக்கிச் செயல்படும் சாத்தியமும் அவசியமும் இன்று உள்ளன. புத்தகங்களுக்கான மொழிபெயர்ப்பு உரிமை வாங்குவதும் விற்பதும் இன்றைய பதிப்புலக நடைமுறை. பதிப்பாளர்களுக்குப் பல சாத்தியங்களைத் திறக்க வல்ல செயல்முறை. இதற்குப் பதிப்பாளர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொள்வது அவசியம். புதிய தொழில்நுட்பங்கள் தமிழ்ப் புத்தகங்களை உலக அளவில் விற்பனை செய்யும் வாய்ப்பைத் தருகின்றன. இவை பற்றிய தமிழ்ப் பதிப்பாளர்களின் அறிதல் மேம்பட வேண்டும். நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற தேசிய நிறுவனங்கள் புத்தகச் சந்தைகள் நடத்தவும் கருத்தரங்குகள், பதிப்பாளர் பயிற்சி முகாம்களை நடத்தவும் தயாராக உள்ளன. இந்தச் சாத்தியங்களைத் தமிழ்ப் பதிப்பாளர் கூட்டமைப்பு பயன்படுத்துவது அவசியம். கடந்த தில்லி உலகப் புத்தகச் சந்தையில் எல்லா மொழிப் பதிப்பாளர் கூட்டமைப்புகளுக்கும் இலவச அரங்கும் தங்கும் வசதியும் உள்ளூர்ப் போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டது. பல மொழிப் பதிப்பாளர் கூட்டமைப்புகள் இந்த அரிய வாய்ப்பை முழு ஆற்றலோடு பயன்படுத்தின. தமிழ்ப் பதிப்பாளர் கூட்டமைப்புக்கான அரங்கு காலியாகக் கிடந்தது.
அதே இதழில் பல புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என சிலவற்றின் தொடர்புடைய சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

தி.ஜானகிராமனின் மோகமுள்-சுகுமாரன்

பூமணியின் வெக்கை-தேவிபாரதி

செல்லப்பாவின் வாடிவாசல்-வீரா

மீரான் மைதீனின் ஓதி எறியப்படாத முட்டைகள்-களந்தை பீர்முகம்மது

Related Posts Plugin for WordPress, Blogger...