வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல்

வரும் 25.01.2013-ல் நடக்கவிருக்கும் புத்தகத் திருவிழாவில் வாங்கத்  திட்டமிட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியல்:
  1. கலங்கிய நதி-பி.ஏ.கிருஷ்ணன்
  2. அஞ்ஞாடி-பூமணி
  3. ரெயினீஸ் ஐயர் தெரு-வண்ணநிலவன்
  4. எட்டுத்திக்கும் மதயானை-நாஞ்சில் நாடன்
  5. கிருஷ்ணா கிருஷ்ணா-இந்திரா பார்த்தசாரதி
  6. சு.ரா.நினைவின் நதியில்-ஜெயமோகன்
  7. மானசரோவர்-அசோகமித்திரன்
  8. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்-வண்ணநிலவன்
  9. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
  10. கீழ் உலகக் குறிப்புகள்-பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி
  புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களைப் பார்த்ததும் பரவசமடைந்து பட்டியலில் இல்லாதவையும் வாங்கக்கூடும்.  பல புத்தகங்கள் நம்மைப் பார்த்ததும் வாங்கு வாங்கு என நச்சரிக்கவும் செய்யும். எப்படியும் முதல் நாள் வாங்கவேண்டாம் என நிச்சயித்த புத்தகங்கள் அன்று இரவு கனவில் வந்து இம்சிக்கும்போது அடுத்த நாள் அதை வாங்காமல் இருக்கமுடியாது.  எனவே ஒரு குறைந்தபட்ச பட்டியலுடன் சென்றால் குழம்பாமல் இருக்கலாம் என்ற நப்பாசைதான்.

  சில சமயம் நாம் பல காலம் கனவு கண்டுகொண்டிருந்த ஒரு புத்தகம் கிடைக்கும். ஆனால் அதன் அச்சும், காகிதங்களின் தரமும் சகிக்கமுடியாததாக இருக்கும். எனவே அதை வாங்குவதா வேண்டாமா என்று மனதிற்குள் பெரும் போராட்டம் நிகழும். வேறு பதிப்பில் அது கிடைக்கும் சாத்தியக்கூறு இல்லாத பட்சத்தில் அதை வாங்குவது தவிர்க்கமுடியாததாகிவிடும். நமது துரதிருஷ்டமாக, அப்படி வாங்கியபின் நல்ல தரமான பதிப்பாக அது கண்ணில் தென்படும்போது நம் மனதில் எழும் சோகம் வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாதது.


  எல்லா கடைகளிலும் எல்லா பதிப்பாளர்களின் புத்தகங்களுக்கும் கிடைப்பதற்குப் பதில், ஒவ்வொரு பதிப்பகத்தார் புத்தகமும் ஒரு இடத்தில் மட்டும் கிடைக்குமாறு செய்தால் நாம் அலையவேண்டிய தேவையில்லை.

  ஏற்கனவே வாங்கி படிக்காமல் இருக்கும் புத்தகங்ளைப் பட்டியலிட்டால் அதுவே பெரிய பட்டியலாக நீளும். இருந்தும், மனம் வாங்குவதற்கு ஆசைப்படுகிறது. வாங்காமல் இருக்கலாம் என்றாலோ பல நாள் இரவில் தூங்கமுடியாது. பல நாள் சமாளித்தாலும் பிறகு ஒரு நாள்,  தள்ளுபடியில்லாமல், அவற்றையே வேறு கடைகளில் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும்.

  இந்திய அளவில் முக்கியமான நாவலான தகழியின் கயிறு பல வருடங்களாகவே வாங்கப்படாமல் தவறிக்கொண்டிருக்கிறது. இந்த வருடமாவது அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.

  எப்படியோ புத்தகங்களை வாங்கிவிட்டாலும் அதை மனைவியின் கண்களில் படாமல் புத்தக அலமாரியில் சேர்ப்பதுதான் சிரமமான காரியம். சேர்த்துவிட்டால், “அது முன்னரே வாங்கியது” என்று சமாளித்துவிடலாம்.

  சமீபத்தில் வெளியான முக்கியப் புத்தகங்களை யாரேனும் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
  Related Posts Plugin for WordPress, Blogger...