January 12, 2013

பஷீரின் பாத்துமாவின் ஆடு- பொருளின் இன்றியமையாமை

மனித வாழ்வின் ஆதாரத் தேவை பொருள். பொருளின்றி இவ்வுலகில் ஏதுமில்லை. உறவுகளில்  அன்பை வளர்ப்பதற்கு மட்டுமல்ல, துவேஷத்தையும் பகையையும் ஏற்படுத்துவதும் பொருளாலேயே நிகழ்கிறது.  தனி மனிதனை மட்டுமல்ல உலகின் இயக்கமே பொருளை அடிப்படையாக் கொண்டுதான் இயங்குகிறது. அறம் பொருள் இன்பத்தில் பொருளே பிரதானமாகிறது. பொருள் இல்லையெனில் முன்னதும் இல்லை, பின்னதும் இல்லை. நம் வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொருள் சார்ந்தே இருக்கிறது. மனிதன் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட பின்னரே, அவன் சமூகத்திற்காக ஏதும் பங்காற்ற முடியும். பொருளின் தேவை வாழ்வின் தேவை.

மனித வாழ்க்கை சுகமானதுதான். மனிதர்களும் நல்லவர்கள்தான். உறவுகள் இனிமையானவைதான். இந்த வாழ்க்கை நமக்கு வாழத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் சரிதான், பொருள் இருக்கும்வரை. பொருள் இல்லையென்றால் இவையனைத்தும் நேர் எதிரானதாகிவிடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

இத்தகைய பொருளின் இன்றியமையாமையை, அலாதியான நடையில் நகைச்சுவை மிளிர பஷீர் இந்நாவலில் சொல்கிறார். காலத்தின் சாரத்தைத் தன்னுள் கிரகித்துக்கொண்ட படைப்பாளி, அதை அப்படியே தன் படைப்புகளில் பிரதிபலிக்கலாம் அல்லது அப்படியே நேர் எதிராகத் திருப்பிப்போட்டுவிடலாம். பஷீர் செய்தது அதைத்தான். நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை நகைச்சுவையோடு நாவல் பின்னப்பட்டிருந்தாலும் அதன் பின்புலத்தில் சோகம் எங்குமாக வியாபித்திருப்பதை நாம் உணர முடிகிறது. அடுத்தூர்வது அஃதொப்பதில் எனும் மனோபாவம் கொண்டவர்களாலேயே அது சாத்தியமாக முடியும். பஷீருக்கு அத்தகைய மனோபாவம் இருந்ததினாலேயே நமக்கு இத்தகைய ஒரு படைப்புக் கிடைப்பது சாத்தியமாயிற்று.

அவரே சொன்னதுபோல், "இது ஒரு தமாஷ் கதை. இருந்தாலும், எழுதும்போது நான் மனதிற்குள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை." அது மட்டுமல்ல, அவர் மனநோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக இருந்த இடத்தில் எழுதப்பட்ட நாவல் இது. இந்நாவல் வெளியான பிறகு அவர் மீது மற்ற எழுத்தார்கள் பொறாமைப் பட்டதையும் இப்படிக் குறிப்பிடுகிறார், "பஷீருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. நமக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று சில இலக்கிய கர்த்தாக்கள் வருத்தப்பட்டுக் கொண்டதாகத் தெரிகிறது."

பஷீர் தானே இதில் கதாபாத்திரமாக வருகிறார். இது உண்மைக் கதை என்றும் சொல்கிறார். அவரது குடும்பம் பெரிய குடும்பம். அதில் போதாக்குறைக்கு அவரது தங்கை பாத்துமாவின் ஆடும் சேர்ந்துகொள்கிறது. அவ்வப்போது ஊர் வரும் பஷீர், ஒரு முறை வரும்போது நடக்கும் நிகழ்ச்சிகளைத் தனக்கேயான நையாண்டியுடன் விவரிக்கிறார். சிறுவயது நிகழ்ச்சிகளை, சிறுவர்களின் மனோபாவங்களைச் சிறப்பாகச் சித்தரித்து நம்மை நம் கடந்து காலத்துக்குள் சஞ்சரிக்கவைக்கிறார். பறவைகள், விலங்குகள் அனைத்தும் நாவலுக்குள் வலம் வருகின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல அவற்றுக்கும் ஆதாரமாக தேவைப்படுவது பொருள்தான் என்று சொல்கிறாறோ என்று தோன்றுகிறது.

நாவலைப் படிக்கும்போதும் படித்தபிறகும் நாம் மனம்விட்டுச் சிரிக்கலாம். அந்த சிரிப்பு நம் மனதை லகுவாக்குகிறது. ஆனால் அடுத்த சில கணங்களில் வாழ்க்கையின் துக்கம் நம் மீது கனமாகக் கவிகிறது. மனம் மீண்டும் பஷீரின் படைப்பைத்தேடி ஓடுகிறது. அதுவே பஷீரின் படைப்புகளை அர்த்தமுள்ளதாக  ஆக்குகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...