January 10, 2013

வைக்கம் முகம்மது பஷீர்-எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

வைக்கம் முகம்மது பஷீரின் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது, பழம்பெருமைகள் பேசி சோம்பி திரிவதையும், மதம் என்பதாக நாம் கொண்டிருக்கும் பல்வேறு நம்பிக்கைகளையும் சாடும் நாவல்.  பெண்களை மதம் என்ற பெயரில் மூடத்தனத்தின் மொத்த உருவமாக சமைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது இந்நாவல். வாழ்க்கையை இவற்றுக்குள் புதைத்துவிடாமல் மேலேறி வரவேண்டும் என்பதைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்கிறார் அவர்.  மதம் என்பது நாம் வளரத்தானே ஒழிய, கீழ்மையில் உழன்று நம்மை நாம் சுருக்கிக்கொள்ள அல்ல மாறாக நம்மை நாம் விரிவு செய்துகொள்வதற்காகத்தான். மதத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் பல நம் பார்வையின் கோளாறால் நமக்கு நாமே கற்பித்துக்கொண்ட கற்பிதங்களன்றி வேறில்லை. நம் பிடிவாதங்களையும் கற்பனைகளையும் மதத்தின் மேல் ஏற்றுவது சரியல்ல. மனித வாழ்க்கையை முடக்க எழுந்தது அல்ல மதம் மாறாக நாம் எழுச்சியுடனும் வீறுகொண்டும் எழுவதற்கான மார்க்கம் அது. வாழக்கைக்கு முன்நோக்கிய பார்வைதான் தேவை பின் நோக்கிய பார்வை நம் கண்களை குருடாக்கிவிடுகிறது. மதம் வேறு மூடநம்பிக்கை வேறு என்பது நம் சிற்றறிவிற்கு எட்டாமலிருக்கும் விந்தையை என்னென்பது? சில அடிப்படை கேள்விகளின் ஞானம் கூட மனிதனுக்கு ஏன் இன்னும் பிறக்கவே இல்லை?. என்று கேட்கும் பஷீர் பார்வையாளனாக எட்ட இருந்து நாவலை நடத்திச்செல்கிறார். கிண்டலும் கேலியும் செய்யும்போது அதைக் கேள்வியாக்கி வாசகனை நோக்கி வீசிவிட்டு தம் பாட்டுக்கு செல்கிறார் அவர்.

காலத்தின் அடுக்குகளும், பாத்திரங்களும் மிகக் குறைவாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல் இது. ஆங்காங்கே வாசக இடைவெளிகள் இருந்தாலும் அவைகள் பொருட்படுத்தத் தக்கனவாக இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்கான அமசத்தைக் கொண்டிருக்கிறது. ஒரே நேர்கோட்டில் செல்லும்விதமாக நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாகவே, அக்காலத்திய நாவல்கள் எல்லாமே அத்தகைய போக்கையே கொண்டிருந்தன என்றுதான் சொல்லவேண்டும்.

குஞ்நுபாத்துமா என்ற பெண் பாத்திரத்தின் மூலம் கதை சொல்லப்படுகிறது. செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர்களின் குடும்பம் வழக்கு ஒன்றின் தீர்ப்பால் திசை திரும்பிவிடுகிறது. சொத்திழந்து, வீடிழந்து ஒரு சிறு வீட்டில் வாழும் அவலம் ஏற்படுகிறது. செல்வச் செழிப்பும் மத நம்பிக்கைகளும் அவர்களை முடமாக்கிவிட்டிருப்பதை பாத்துமா உணர்கிறாள். பக்கத்தில் குடியேறும் ஒரு குடும்பம் காலத்துக்கேற்ற மாற்றங்களை தன்னகத்தே கொண்ட குடும்பமாக இருக்கிறது. அந்த வீட்டு நிஸார் அகமதுவுடன் பாத்துமாவிற்கு காதல் பிறக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதாக கதை முடிகிறது.

மதத்தை மூடநம்பிக்கை எனும் புதைகுழியாக்கி அதில் புதைந்துபோக இருக்கிறோமா இல்லை அதை ஏணியாக்கி விண்னைத் தொடப்போகிறோமா என்பது இந்நாவல் நம்முன் வைக்கும் கேள்வி.

மலையாள இலக்கிய உலகில் போற்றத்தக்க ஒரு படைப்பாளியாகத் திகழ்ந்தவர் பஷீர். பஷீரின்  புகழ் பெற்ற நாவலாக இந்நாவல் கொண்டாடப்படுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...