2013 புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள்

25.01.2013 காலை 11.30 மணிக்கு அரங்கத்திற்குள் நுழைந்தேன். சிலபேர் அப்போதுதான் புத்தகங்களை எடுத்துவைக்க ஆரம்பித்தார்கள். பல கடைகளில் ஆட்களே இல்லை. நான் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஒழுங்குபடுத்திவிட்டு அடுத்த நாளை திருவிழா ஆரம்பிக்கும் நாளாக அறிவித்திருக்கலாமே? அடுத்தவர்களின் நேரத்தைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதைக்கூட புரிந்து கொள்ளவியலாத தடித் தோலர்களை என்ன சொல்ல? கிழக்கு பதிப்பகம் மட்டும் ஓரளவிற்று எடுத்து வைத்திருந்தார்கள். வண்ணநிலவனின் ரெயினீஸ் அய்யர் தெரு இருக்கிறதா என்று கேட்க ஒருவர் “பெப்பெப்பே“ என்றார். மேற்கொண்டு நான் ஏதும் கேட்கத் துணியவில்லை. புத்தகங்களை விற்பவர்கள் விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்க வேண்டமா? அதைவிடுத்து ஏதோ சந்தைக்குக் காய் கறி விற்பவர்களைப் போல வந்து நிற்கிறார்கள்.

அன்று மாலையும் சென்றேன். அப்போதும் நிலைமையில் பெரும் முன்னேற்றம் இல்லை. உயிர்மை பதிப்பகத்தில் யாரோ ஒருவர் அம்போ என உட்கார்ந்திருந்தார். கடை வெறிச்சோடிக் கிடந்தது. அடுத்த நாள் மதியம் வரை அப்படியேதான் இருந்தது.  அவர்களின் பொறுப்புணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. யாரோ படிக்காத தற்குறிகள் என்றால் கூட பரவாயில்லை, இவர்களே அடுத்தவன் நேரத்தை வீணடிக்கிறோம் என்ற கிலேசம் கிஞ்சித்தும் இல்லாதவர்களாக இருந்தது கோபமூட்டியது. காலச்சுவடில் புத்தகங்களை எடுத்துவிட்டு பணம் கொடுத்தால் சில்லறை இல்லை என்றான் ஒரு பையன். ஒருவர் ஜீவனாம்சம் எடுத்துவிட்டு, “வாடிவாசல் எங்கிருக்கு?“ என்று கேட்டார். ”அங்கதான் எங்கியாச்சும் இருக்கும்” என்று அசட்டையாக பதில்.

நமக்கு வேண்டிய புத்தகங்கள் இருந்தால், கண்ணில் பட்டால் வாங்கிக்கொண்டு போகலாம். அவ்வளவே நாம் செய்யக்கூடியது. சுவற்றிடம் கேட்பதும் அங்கே இருப்பவர்களிடம் கேட்பதும் ஒன்றுதான். எல்லாமே ”பெப்பெப்பே“ கூட்டங்கள்தாம். அவர்களுக்கு புத்தகங்களும் ஒரு பண்டம். அவ்வளவே. கோயிலில் இருக்கும் கடவுள் நமக்கு வேண்டுமென்றால் பெரிதாக இருக்கலாம். ஆனால் பூசாரிக்கும் அப்படி இருக்குமா என்ன?

ஒரு புத்தகத்தை நாம் வாங்கத் தீர்மானிக்கும் கணம் மிகவும் சூட்சுமமானது. ஏன் இந்த புத்தகத்தை தேர்த்தெடுத்தோம்? என்ற கேள்விக்கான பதிலை யோசித்துப் பார்த்தால், நமக்கே பதில் தெரியாது. சில சமயம் வாங்கலாம் என்று முன்னரே தீர்மானித்திருந்த பல புத்தகங்கள், கையில் எடுத்துப் பார்த்துப் புரட்டியதும் மனம் மாறிவிடுகிறது. அதே சமயம் இது வரை அறிந்தே இராத ஒரு புத்தகத்தை வாங்கவும் செய்கிறோம். இது எதனால் நிகழ்கிறது? புத்தகத்தின் உள்ளே நம் கண்ணில் படும் சில வரிகள், அச்சு, அமைப்பு, விலை, எழுத்தாளர், பதிப்பகம் ஆகிய பல காரணிகள் புத்தகத்தைத் தேர்வதில் பங்காற்றுகின்றன. ஆனால் அதை வாங்கத் தீர்மானித்த கணத்தில் எது பெரிதும் பங்காற்றுகின்றது என்பது புரியாத புதிர். ஏனெற்றால் சில சமயம் விலையையும் மீறி பல புத்தகங்களை வாங்க முடிவு செய்வதிலிருந்து அதை அறியலாம். யாரோ எப்போதோ சொன்னது அல்லது எங்கேயோ படித்தது இவையும் கூட உள்உணர்வாக ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுப்பதில் பங்கு வகிக்கின்றன.

உயிர்மையில் சுப்பர பாரதி மணியன் இருந்தார். ஞானி, ஜிப்பா ஜோல்னா பை சகிதம் வழக்கம் போல் காட்சியளித்தார். பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் கூட்டங்கள் இருந்தன. ஆனால் அவர்களுக்கு துணையாக வழிகாட்டிகள் யாரும் கூட இருப்பதாகத் தெரியவில்லை. எந்த புத்தகத்தை எப்படி வாங்குவார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஒரு வேலை அவர்களுக்கான புத்தகங்ளைப் பற்றி விளக்கி கூட்டிவந்திருந்தால்? அப்படி கற்பனை செய்ய ஏதும் வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

பல பதிப்பகங்கள் அவசரகதியில் புத்தகங்களை பிரிண்ட் செய்து கொண்டுவந்திருந்ததைக் காண முடிந்தது. ஆழி சூழ் உலகு, கடலிலிருந்து அப்போதுதான் எடுத்து வந்தது போல் அவ்வளவு ஈரமாக இருந்தது. நான் வீட்டில் வைத்துதான் காய வைத்தேன். ஏனோ தமிழினி பதிப்பகத்தின் அச்சும் அமைப்பும் ஆரம்ப காலத்தில் இருந்தது போல் இல்லை. அப்பதிப்பகத்தின் பல புத்தகங்களை வாங்க அதுவே தடையாக இருந்தது. காலச்சுவடும் ஜானகிராமனின் மோகமுள்ளை அவசர கதியில் கொண்டுவந்திருப்பதை அறிய முடிகிறது. ஒரு புத்தகத்திற்கு தையல் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லி அவர்களுக்கு கடிதம் கூட எழுதியிருந்தேன். ஆனால் அவர்கள் இன்னும் தையல் இல்லாமல்தான் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் பார்த்த வரையில் எதிர்வெளியீட்டின் புத்தகங்கள் சிறப்பாக இருந்தன. அச்சும் சரி கட்டமைப்பும் சரி நேர்த்தியாக இருந்தது. நற்றிணையும் நன்றாக இருந்தது. ஆனால் அதற்கான தனி கடை இல்லாமையால் அவற்றை கண்டடைவது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.

ஒரு புத்தகத்தின் முதல் பக்கம் அச்சிட்டவுடன், அதை வாசித்துப் பார்க்கவேண்டும். எழுத்து வடிவம் படிக்க ஏதுவாக இருக்கிறதா என்பதைப் பரிசீலித்துச் சரி செய்யவேண்டும். ஆனால் பெரும்பான்மையோர் அதைச் செய்வதில்லை என்றே தெரிகிறது. பாரதி புக் ஹவுஸ் தன் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொடர்ந்து கிரவுன் சைசில் வெளியிட்டு வெறுப்பேற்றி வருகிறது. நம் கண்கள் இடமிருந்து வலமாகச் சென்று, திரும்பும் தூரம் குறைவாக இருக்கவேண்டும். அப்போதுதான் கண்கள் சோர்வடையாமல் இருக்கும். ஆனால் பாரதி புக் ஹவுஸ் அதைப்பற்றி கவலையில்லாமல் இருக்கிறது. இதனால் புத்தகங்கள் வாசகனைச் சென்றடையாது என்ற எளிய உண்மை கூட அவர்களுக்கு விளங்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

பல நாட்கள் படையெடுப்பில் வாங்கிய புத்தகங்கள்:
 1. கலங்கிய நதி-பி.ஏ.கிருஷ்ணன்-காலச்சுவடு
 2. பயணக்கதை-யுவன் சந்திரசேகர்-காலச்சுவடு
 3. கிருஷ்ணா கிருஷ்ணா-இந்திரா பார்த்தசாரதி-கிழக்கு
 4. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி-சுந்தர ராமசாமி-காலச்சுவடு
 5. யாமம்-எஸ்.ராமகிருஷ்ணன்-உயிர்மை
 6. என் பெயர் சிவப்பு-ஓரான் பாமுக்-ஜி.குப்புசாமி-காலச்சுவடு
 7. கு.அழகிரிசாமி சிறுகதைகள்-முழுத்தொகுப்பு-காலச்சுவடு
 8. அவஸ்தை-யு.அனந்தமுர்த்தி-நஞ்சுண்டன்-காலச்சுவடு
 9. ஆழி சூழ் உலகு-ஜோ.டி.குரூஸ்-தமிழினி
 10. ஆனி ஃபிராங் டைரிக் குறிப்புகள்-உஷாதரன்-எதிர் வெளியீடு
 11. தாகம்-கு.சின்னப்ப பாரதி-பாரதி புத்தகாலயம்
 12. அக்னி நதி-குர் அதுல்ஐன் ஹைதர்-சௌரி-நேஷனல் புக் டிரஸ்ட்
 13. கண்ணீரைப் பின்தொடர்தல்-ஜெயமோகன்-உயிர்மை
 14. குமாயுன் புலிகள்-ஜிம் கார்பெட்-தி.ஜ.ர.-காலச்சுவடு
 15. க-ராபர்ட்டோ கலாஸ்ஸோ-ஆனந்த், ரவி-காலச்சுவடு
 16. மீஸான் கற்கள்-புனத்தில் குஞ்ஞப்துல்லா-குளச்சல் மு.யூசுப்-காலச்சுவடு
 17. பாபர் நாமா-ஆர்.பி.சாரதி-மதி நிலையம்
 18. தமிழின் நவீனத்துவம்-பிரமிள்-நற்றிணை
 19. சூரியன் தகித்த நிறம்-பிரமிள்-நற்றிணை

  இன்னும் நான்கு நாட்கள் மீதமுள்ள நிலையில் மேலும் புத்தகங்கள் கூடலாம் அல்லது கூடாமலும் போகலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...