December 21, 2012

புலிநகக் கொன்றை-வாழ்க்கையின் முழுமையான பார்வை

பி.ஏ.கிருஷ்ணின் புலிநகக் கொன்றை, நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல்.  இந்நாவல் பி.ஏ. கிருஷ்ணனி்ன் முதல் நாவல். அவரது நடை அலாதியானது. வாசகர்களுக்கு சிரமம் தராத நடை. சொற் சிக்கனம் அவரது வாக்கியங்களின் பிரதான அம்சம். இரண்டு மூன்று வார்த்தைகளில் வாக்கியங்களை அவர் அமைக்கும் அழகு நம் நெஞ்சை அள்ளுகிறது. எள்ளல், கிண்டல், நகைச்சுவை அவரது முக்கிய பலம். படிக்கும்போது நாம் வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது. துன்பமான சம்பவங்களை விவரிக்கும்போதும் நகைச்சுவை இலையோடுகிறது.

கதை என்ன என்று தனியாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. கதை கட்டற்ற வெள்ளம்போல் நாவல் முழுதும் படர்ந்து விரிகிறது. மரணத்தருவாயில் இருக்கும் பொன்னா பாட்டியின் நினைவிலிருந்து கிளர்ந்து எழுகிறது நாவல். ஆரம்ப பக்கங்களில் மரணம் எவ்வளவு கோரமானது என்று நமக்குப் புரிந்தாலும் போகப்போக வாழ்க்கை நம்மை வசீகரித்துச் செல்கிறது. பிறகு வாழ்க்கை, பிறப்பும் இறப்பும் கொண்டது தவிர வேறு இல்லை என்பதை நம் கண்முன் விரியச்செய்கிறது நாவல். தொடக்கத்தில் படிக்கும்போது உறவுகளின் குழப்பமும் பெயர்க் குழப்பமும் நம்மைச் சற்றே தடுமாற செய்கிறது. இருந்தும் தொடர்ந்த வாசிப்பில் அவை பழகிப்போகின்றன. காலத்தை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி கட்டமைத்து நாவலை சிறப்பானதொரு புனைவாக ஆக்கியுள்ளார் பி.ஏ.கிருஷ்ணன். 1970-ல் ஆரம்பிக்கும் கதை, 1865-லிருந்து நிகழ்வுகளைச் சொல்லிச் செல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி, கட்டபொம்மன் தூக்கு, சுதந்திரப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டது, பெரியாரின் பிராமண எதிர்ப்புப் போராட்டம் என காலத்தின் பிரக்ஞையை ஆங்காங்கே நாவல் வெளிப்படுத்துகிறது. காலம் என்ற மகாநதியின் முன் மனிதன் சிறு துரும்பு என்பதை நாவலின் வாசிப்பினூடான அனுபவத்தில் உணர்கிறோம். காலத்தோடு, அந்தந்த பிராயத்து மனித வாழ்வின் ஆசைகளையும், அபிலாஷைகளையும், உணர்வுகளையும் நுட்பமாகவும் திறம்படவும் சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர்.

நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதுவும் தலைமுறைகளின் வாழ்க்கை பற்றிய நாவல்தான். இருந்தாலும் நீல.பத்மநாபன் அதில் ஒரு பிரச்சினையை மையப்படுத்தி அதைப்பற்றிய ஒரு விவாதத்தை நம்முன் வைக்கிறார். நாவல் முழுக்க அப்பிரச்சினையை நோக்கியே நகர்கிறது. ஆனால் புலிநகக் கொன்றை அத்தகைய பிரச்சினை எதையும் நம்முன் வைத்து விவாதிப்பதில்லை. மாறாக பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற மனித வாழ்க்கையின் மொத்தத்தையும், தோ்ந்த புகைப்படக் கலைஞனின் லாவகத்துடன், நம்முன் வைக்கிறது. இறப்பு இருப்பதற்காகப் பிறப்பு நிகழாமல் போவதில்லை, பிறந்துவிட்டதால் யாரும் இறக்காமல் இருப்பதில்லை. வாழ்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை கிருஷ்ணன் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆகச் சிறந்த மனித வாழ்க்கை எல்லோருக்கும் இப்படித்தான் என்பதை உணர்த்துகிறார். அதில் நடக்கும் மற்றனைத்தும் சில்லைறை விவகாரங்கள் என்பதை அறிவுருத்துகிறார். அவரது பார்வை பருந்துப் பார்வை. மேலே இருந்து எல்லாம் தெரிகிறது அவருக்கு. இதில் சாதனையும் இல்லை. வேதனையும் இல்லை. அட வாழ்க்கை அவ்வளவுதான் என்கிறார்.

ஆனாலும் கூட மெல்லிய சரடாக, குடும்பத்தின் ஆண்கள் குறைந்த வயதிலேயே மரணமடைந்து விடுகிறார்கள் என்ற சாபம் ஒன்று இருப்பதான அபிப்ராயம், குடும்பத்தின் பெண்களுக்கு இருக்கிறது என்பது ஒரு பிரச்சினையாக சுட்டப்படுகிறது. இருந்தும் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கிருஷ்ணன் விவரித்துச் சொல்லவில்லை. சொல்லப்போனால் எல்லோருடைய குடும்பத்திலும் மரணம் இருக்கவே செய்கிறது. அவரது நோக்கம், முன்னரே சொன்னதுபோல் வானத்திலிருந்து வாழ்க்கைப் பார்ப்பதுதானே அன்றி ஒரு குறிப்பிட்ட சிக்கலை அணுகி ஆராய்வது இல்லை. மொத்த வாழ்க்கையில் எல்லாமே அடக்கம் என்பது அவர் கருத்து.

உன்னதங்களும் உடைசல்களும் கொண்டதுதான் வாழ்க்கை. அவற்றை துண்டு துண்டுகளாக, பகுதி பகுதியாக, பார்த்தே பழக்கப்பட்டவர்கள் நாம். புலிநகக் கொன்றை, வாழ்க்கையின் மீது முழுமையான பார்வையைச் செலுத்தக் கற்றுத்தருகிறது. வாழ்க்கை தனக்கேயான ஆழ்ந்த ரகசியங்களையும் சூட்சுமங்களையும் தன்னகத்தே பொதிந்துவைத்துள்ளது. அது இப்படித்தான் அல்லது அப்படித்தான் என்று யாரும் வரையறுத்துவிட முடியாது. வாழ்க்கையை தீர்மானிப்பதில் நம்மைவிடவும், நம்மையும் மீறி, வெளிச்சூழல்கள் அதிகமும் பங்காற்றுகின்றன. நம்மை வழிநடத்திச் செல்லும் பாதை எது என்று நமக்குத் தெரிவதில்லை. ஒன்றை நம்பி பயணிக்கிறோம். ஆனால் அது எவ்வளவுதூரம் சாஸ்வதம்? அதுவும் ஒரு நாள் பொய்த்துப் போகிறது. பின் மீண்டும் திரும்பிப் பயணிக்க நம் கையில் வாழ்க்கை எஞ்சியிருப்பதில்லை. போன்ற எண்ணற்ற தரிசனங்ளை புலிநகக் கொன்றை நமக்குத் தருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மன நிறைவு தந்த நாவல். வாசித்து முடித்ததும் மனம் கனத்துவிடுகிறது. கால வெளியில் நீண்ட நெடும்தூரம் பயணம் மேற்கொண்ட உணர்வு.

பின்குறிப்பு:
பி.ஏ.கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள், The Tiger Claw Tree, The Muddy River ஆகியன. முன்னதின் தமிழ் வடிவமே புலிநகக் கொன்றை. பின்னது கலங்கிய நதி என்று எழுதப்பட்டது. இரண்டின் தமிழ் வடிவமும் அவர் எழுதியவையே. அது தவிர, திரும்பிச் சென்ற தருணம் மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் ஆகிய கட்டுரை நூல்கள் வந்துள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...