கவிதை: நானும் நீயும்

ஒன்று:

உன்னைக் கரம்பிடித்த நாளாய்
உனக்காகவே
எல்லாம் செய்கிறேன்
இருந்தும்
எனக்காக என்ன செய்துவிட்டாய்
என்று கேட்கிறாய்
எனக்காக செலவழிக்கும்
கொஞ்சநேரத்தையும்
உனக்கே தரவேண்டும் என்கிறாய்
பிறகு
நான் நானாக
இருப்பதில் என்ன
அர்த்தம் இருக்கிறது.
என்னை இழந்து
உன்னை அடைவதைவிடவும்
உன்னை இழந்து
நான் நானாக
இருக்கவே ஆசைப்படுகிறேன்.

இரண்டு:

நான் மறைத்துவிட்ட
தவறுகள் உனக்குத்
தெரியவரும்போது
நீ என்னை
புழுப்போல் பார்ப்பாய்
என்பதை நான்
உணர்ந்தே இருக்கிறேன்
தவறுகள் செய்வது
மனித இயல்புதானே என்று
நான் வாதிட்டாலும் கூட
நம்பிக்கை துரோகம் மோசமானது என்பாய்
சௌகரியமாய் நீ செய்த
துரோகத்தை மறந்துவிட்டு.

மூன்று:

உன் பொய்யை
தினம் தினம் கேட்டு
அலுத்துவிட்டது எனக்கு
நம்ப வேண்டும் என்கிறாய்
நம்பிக்கைதானே வாழ்க்கை என்கிறாய்
நம்பி நம்பி ஏமாறுவதைவிட
நம்பாமல் இருப்பது
இருவருக்குமே நல்லது.

நான்கு:

வாழ்க்கை
ஒரு வட்டம் என்பது
உண்மைதான்
எல்லாமே திரும்பத் திரும்ப
நிகழும் நிகழ்வுகள்தான்
ஒரு சமயத்தில் நேசித்ததை
மறுசமயம்
வெறுக்கவே நேர்கிறது
நானும் நீயும்
அதே வட்டத்தில்
திரும்பத் திரும்ப விழுகிறோம்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறந்ததாய்.

ஐந்து:

ஏன்
என்னை வெறுக்கிறாய்
என்ற கேள்வி
பல முறை உன்னிடமிருந்து
வருகிறது
ஆயினும் ஒரு முறையேனும்
என்னை ஏன் நேசித்தாய்
என்று கேட்டதுண்டா
நான் வெறுக்கவில்லை
உன்னிடம் இருக்கும்
வெறுப்பே
என்னுடைய வெறுப்பாய்
உனக்குத் தெரிகிறது.

ஆறு:

என் மீதான
உன் புகார்கள்
நாளும் வளர்ந்தபடி
இருக்கிறது
புகார் பத்திரத்தை
பிறரிடம் வாசிக்கவும் செய்கிறாய்
உன் மீது எனக்கும்
புகார்கள் உண்டு என்பதை
ஏனோ மறந்துவிடுகிறய்

நான் உன்னைவிட்டும்
நீ என்னைவிட்டும்
விலகுவதான ஒரு கற்பனை
இருவரிடத்தும்
எப்போதும் இருக்கிறது

நீ என்னை நகங்களால்
பிராண்டுவதும்
நான் அதற்கு
எதிர்த் தாக்குதல்
தொடுப்பதும் நமக்குள்
வாடிக்கையாகிவிட்டது

உன் சொற்களின் ஏளனம்
என்னைக் குத்திக் கிழிக்கிறது
நான் மறு தாக்குதல்
தொடுத்தால்
அழுது அரற்றுகிறாய்
எனக்கு மட்டும் என்ன
இதயம் இரும்பாலா செய்திருக்கிறது

நீண்ட இடைவெளிக்குப் பின்
சமாதானம் ஆயினும்
நாம் பரிமாறிக்கொண்ட
சொற்கள் இப்போது
ஏளனமாய் நம்மைப் பார்த்து
சிரிக்கிறது
அவற்றின் ஏளனம்
தாங்காமல் நாம் மீண்டும்
ஒரு தாக்குதலுக்கு
தயாராகக் கூடும்
அப்போது
உனக்கும் எனக்கும்
வேறு காரணங்கள்
கிடைக்காமலா போய்விடும்.

Copyright © 2012 Kesavamani.
Related Posts Plugin for WordPress, Blogger...