November 20, 2012

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் -பின்தொடரும் நிழல்

அசோகமித்திரன், தன் கரைந்த நிழல்கள் நாவலில் சினிமாவின் பின்னின்று தொழில்படும் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலங்களை நன்றாக சொல்லியிருக்கிறார். சினிமா என்பது நாம் திரையில் பார்ப்பது மட்டுமல்ல, அதற்கும் பின்னால் எத்தனைபேரின் உழைப்பு உள்ளது, உழைப்போடு வாழ்க்கைக்காக அவர்கள் போராடும் மனதின் வலிகள் என்ன என்ன என்பதை அசோகமித்திரன் தனக்கே உரிய பாணியில் அற்புதமாக சித்தரித்துள்ளார். சினிமா பற்றிய நாவல் என்பதாலோ என்னவோ, நாவலின் கதையோட்டம் தொய்வில்லாமல் செல்கிறது. மொழி, வார்த்தைகள், வாக்கியங்கள், நடை அத்தனையும் கன கச்சிதம். எந்த ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தையும் தேவையில்லை என்று நீக்க முடியாதபடி நாவலை எழுதி இருப்பது அசோகமித்திரனின் மேதமைக்கு சான்று. சினிமா உலகத்தை அவர் எவ்வளவு நுட்பமாக அவதானித்துள்ளார் என்பது நன்றாக புரிகிறது.

நாவலின் கதை யாரோ ஒருவரை மட்டும் பின் தொடர்ந்து செல்லாமல், சினிமா உருவாக உழைக்கும் அனைவரையும் பின் தொடர்ந்து செல்லுமாறு அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. மேலோட்டமான வாசிப்பை பழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு இது பெரும் இடைஞ்சலாக இருக்கும். அப்படி இருப்பதே, இந்நாவலை இலக்கியமாக ஆக்கி உள்ளது.

இந்நாவலை படித்ததும் சினிமா பற்றிய நமது பார்வை மாறிவிடுகிறது. அடுத்த முறை சினிமா பார்க்கும்போது, திரையில் தெரியும் நிழல்கள் மட்டுமல்ல, திரைக்கு பின்னால், தங்களை முழுமையாக கரைத்துகொண்ட நிழல்களின் நினைவும் நமக்கு வருகிறது. படம் எடுப்பவர்களும், அத்தனை பேரையும் நினைவில் கொண்டு, அவர்களின் உழைப்பை வீணடித்துவிடக்கூடாது என்பதில் அக்கறை வைக்க வேண்டும் என்பதை அசோகமித்திரன் நமக்கு சொல்லாமல் சொல்கிறார். கவிதையில் சொல்லவருவது, கவிதையின் வரிகளில் இல்லை, வரிகளுக்கு இடையே உள்ளது. அதுபோல், நாவலை வாசிப்பது மட்டுமே போதுமானது இல்லை. நாவலில் சொல்லாமல், அசோகமித்திரன் மறைத்து வைத்திருக்கும் பலவற்றையும் நாம்தான் கண்டறியவேண்டும்.

மனித வாழ்க்கையே வீழ்ச்சியும் எழுச்சியும் கொண்டதுதான் என்றாலும், சினிமாவில் அதன் தாக்கம் மிகவும் அதிகம் என்பதை வீச்சுடன் சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன். வாழ்க்கையின் எல்லா துறைகளிலும், கிடைக்கும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள, மனிதன் பெரும் பிரயத்தனம் செய்யவேண்டி உள்ளது என்பதை தெளிவுபட, எதார்த்தம் குன்றாமல், வெற்றிகரமாக சொல்லி இருக்கிறார்.

நாற்பது வருடங்கள் கழிந்த பின்னரும், இந்நாவலை இன்று வாசிக்கும்போது, புத்தம் புதிய நாவலை வாசிக்கும் உணர்வையே தருவது, இந்நாவலின் உச்சபட்ச சிறப்பாக சொல்லலாம். வாசிப்பை நேசிப்பாக கொண்டவர்கள் இருக்கும்வரை, அவர்களின் நிழலாக, கரைந்த நிழல்கள் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பலரும் அசோகமித்ரனின், தண்ணீரை உயர்வாக பேசுகிறார்கள். தண்ணீரில், அவருக்கு சில தயக்கங்களும், தடுமாற்றங்களும் இருந்ததாக நான் உணர்கிறேன். ஆனால், கரைந்த நிழல்களில் அவருக்கு அவைகள் இல்லை. இதுதான், இப்படித்தான் என்று அறைந்து சொல்லி இருக்கிறார்.

கரைந்த நிழல்கள் எப்போதும் நம்மை பின்தொடரும் நிழல்.
Related Posts Plugin for WordPress, Blogger...