November 1, 2012

எஸ்.சம்பத்தின் இடைவெளி-அறிவின் தேடல்

எஸ்.சம்பத்தின் இடைவெளி, அறிவின் தளத்தில் வெளியான முதல் நாவல். அதற்குப்பின் வந்ததே ஜே.ஜே.சில குறிப்புகள். சம்பத்தின் நாவல் மனிதனின் மரணத்தை பற்றிய தேடலாக, தினகரன் என்ற பாத்திரத்தின் வாயிலாக, சொல்லப்படும் ஒரு கதை. இந்நாவல் வெளிவரும் முன்னரே சம்பத் இறந்துவிட்டார். சாவை பற்றி எழுதிய அவரை சாவு எடுத்துகொண்டது நமது துரதிருஷ்டம். ஆனால் அதுதான் சாவு. அதை பற்றிய தேடலாக அந்நாவல் இருப்பது, அந்நாவலுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளது.

நமக்கு வாழ்க்கையை தெரியும். மரணத்திற்கு பின் என்ன என்பது பற்றி பல அனுமானங்கள் உள்ளன. ஆனால் மரணம் என்றால் என்ன? அது நிகழும் அந்த தருணம் எத்தகையது?மரணத்தை சந்திக்கும் அந்த வேளையில் என்ன நடக்கிறது? ஏன் மரணம் சம்பவிக்கிறது? என்பதுபற்றி நமக்கு தெரியாது. அதை பற்றிய தேடலே இந்நாவல்.

எளிமையான நடையில், சுவாரஸ்யமாகவே நாவல் செல்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம்? அதுதான் கனமானது. தினகரன் எப்படி, இதுதான் இதுதான் என்று தேடும்போது, அது இல்லை அது, என்பதாக சாவு எப்படி அவருக்கு புலப்படவில்லையோ, அதே போல்தான் நமக்கும், சம்பத் இதைத்தான் சொல்லவருகிறார் என்று புரிந்து கொண்டோம் என்று நினைத்த அடுத்த கணம், அது இல்லை அது என்பதாக ஒரு குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.

நாவலின் உள்ளடக்கம் நம்மை குழப்பினாலும், நாவலில், அதன் நடையில் ஒரு வசீகரம் இருக்கிறது. சம்பத்திடம் இருக்கும் அறிவின் தேடலே, தினகரனின் தேடலாக நாவல் முழுதும் வெளிப்படுகிறது. நாவல் மனிதனின் மரணத்திற்கு பின் என்ன என்பதாக, நாம் தவறாக நினைத்துவிடக்கூடாது. நாவல் மரணத்தை பற்றியது என்பதை நினைவு வைத்துக்கொள்வது நல்லது. இப்பிரபஞ்சத்தில் அலைந்து கொண்டிருக்கும் ஆன்மா உடலுக்குள் நுழைந்து உருவம் எடுக்கும்போது வாழ்வு எனும் அனுசரணையான இடைவெளி, மீண்டும் அது வெளியேறும்போது அது சாவு எனும் முரண்பாடுடைய இடைவெளி என்கிறார். யோசிக்கும்போது பிடிபடும் இது வார்த்தையில் எழுதும்போது குழப்பமே வருகிறது. ஆக, மனித ஆன்மாவின் வாழ்கை ஒரு தொடர்ச்சியான பயணம். வாழ்வும் சாவும் இடையிடையே ஏற்படும் இடைவெளிகள் என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம்.

நாவலை பற்றிய வடிவ பிரக்ஞ்சை அவருக்கு அப்போதே இருந்திருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. நாவலின் இறுதி பகுதியில் தினகரனின் தேடலாக, கனவு யுக்தியை சிறப்பான புனைவாக புனைந்திருக்கிறார்.

'சாவு என்பது இடைவெளி என்று சொன்னதற்காக நோபல் பரிசு தரவேண்டும். வேற யார் சொன்னா இப்படி' என்று சம்பத் மேஜையை தட்டி, இந்நூலின் 'ப்ரூப் ரீடிங்' நடந்து கொண்டிருந்தபோது சொன்னதாக சி.மோகன் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் இந்நூல் வெளியாகும் முன்னரே அவர் மறைந்துவிட்டது பெரும்சோகம்.

சம்பத்தின் இடைவெளியை, இடைவெளி இல்லாமல் மறுபதிப்பு செய்வதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...