October 25, 2012

ஆர்.சண்முகசுந்தரம் -நாகம்மாள்

ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் நாகம்மாள் நாவல் பற்றி சில விமர்சனங்கள்.

நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் நம் மனதில் எழும் முதல் கேள்வி, 'நாவலாசிரியர் ஏன் இடையிடையே பேசுகிறார்?' என்பதுதான். அவர் பேசுவது ஒரு குறையே. நாவல் எளிமையான நடையில் செல்கிறது. கிராமத்து வாழ்க்கை நம் கண்முன் சிறப்பாகவே விரிகிறது.  நாகம்மாள், சின்னப்பன், ராமாயி, கெட்டியப்பன் ஆகிய பாத்திரங்கள் தத்தம் குணங்களோடு சித்தரிக்கபட்டிருக்கிரார்கள். எல்லாருக்குமே அவரவர்களக்கு என்று தனிதனி ஆசைகள் உள்ளன. சுயநலம் என்று கூட சொல்லலாம். அதுவே நாவலின் கருவாகவும் உள்ளது. கணவனை இழந்த நாகம்மாள், தன் கணவனின் தம்பி கெட்டியப்பனுடன் சேர்ந்து வாழ்கிறாள். கெட்டியப்பன் மனைவி ராமாயிக்கும் நாகம்மாவை பிடிப்பதில்லை. நாகம்மாவின் அதிகாரம், ராமாயின் சுய கௌரவத்தை பாதிக்கிறது. மணியகாரருக்கு நாகம்மாவின் கணவன் மேல் கோபம் இருக்கிறது. கெட்டியப்பனுக்கும் அதே கோபம் இருக்கிறது. ராமாயின் அம்மா காளியம்மாவுக்கு, தன் மகள் மருமகனை தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுய நலத்திற்காக, நாகம்மாவுக்கும் சின்னப்பனுக்கும் இடையேயான பிரச்சினையை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

அதன் விளைவாக என்ன ஆகிறது என்பதுதான் கதை. ஆசிரியர் சரளமாக கதையை நகர்த்திசெல்கிறார். ஆனால்   கதை அதன் கடைசி முடிவை நோக்கி நகரும் ஒற்றைப்படை தன்மை கொண்டதாக உள்ளது. இது சிறுகதைக்கான ஒரு அம்சம். கடைசியில் கதையும் சடாரென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. கடைசியில் நடந்துவிட்ட விபரீதம், நாகம்மாள் சம்மதத்துடன் நடந்ததா என்பதை ஆசிரியர் நம் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார். ஆசிரியர் பாஷையில் சொல்வதென்றால், 'நாகம்மாளும் அதைத்தான் விரும்பினாளா என்பது நமக்கு தெரியவில்லை'.

ஒவ்வோர் சமயம் கோபம், மற்றோர் சமயம் கனிவு என்பதாகவே நாகம்மாள் மற்றும் சின்னப்பனின் மனவோட்டங்கள் சொல்லபடுகிறது. என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே என்று ஆசிரியர் காட்டுகிறார். கதை முடிவிலும் அதையே நாம் எடுத்துகொள்ளலாம்.

இந்த நாவலின் விவாத தளம் எது என்று பார்க்கும்போது, பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதை இந்நாவல் சொல்லவருகிறது. ஆனால் அது முழுமையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தும் வாசகன் மனதில் அது பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றும் கூட அது பற்றி சமூகத்தில் இரண்டு விதமான பார்வை இருப்பதை நாம் பார்க்கிறோம்.

நாகம்மாள் எளிமையான ஒரு குறுநாவல். நாவலுக்குண்டான அம்சங்கள் அதில் குறைவு. அலங்காரமான வார்த்தைகளோ, ஆர்பாட்டமான உத்திகளோ எதுவும் இல்லாத ஒரு குறுநாவல். படித்து முடித்ததும், பசுமையான சோலையில், கிராமத்தில், சில்லென்ற காற்றின் இதத்தில், மோருடன் சேர்ந்து பழைய சோறு சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது. கூடவே கடித்துக்கொள்ள மிளகாயும் உண்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...