ஜீவா-சு.ரா.நினைவோடை

சு.ரா.நினைவோடை வரிசையில் ஜீவா பற்றிய நினைவுகளை சு.ரா. அழகாக சொல்கிறார். ஜீவாவை தெரியாதவர்கள் கூட, இதன் மூலம் தங்கள் மனங்களில் ஜீவா பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கி கொள்ள முடியும். ஜீவாவை அக்கட்சி எப்படி பயன்படுத்தி கொண்டது என்பதை அறியும் போது நம் மனதில் ஜீவாவின் மேல் ஆழ்ந்த அனுதாபம் ஏற்படுகிறது. தன் பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியன பற்றி துளியும் கவலைபடாத பெரும் மனிதராக ஜீவா நம் கண் முன் விரிகிறார்.

சு.ரா. முதன்முதலில் ஜீவாவை சந்திக்கும்போது, ஜீவா ஒரு யானையாகவும் சு.ரா. எறும்பாகவும் நம் மனக்கண்ணில் காட்சி தருகிறார்கள் ஆனால் போகப்போக சு.ராவும் உயர்ந்து விடுகிறார். முன்பின் தெரியாத நபரிடம் யாருமே எடுத்தவுடன் பேசுவது அரிது. ஆனால் ஜீவா யாரிடமும் தயக்கமில்லாமல் பேசுபவர் என்பதை விவரிக்க வரும் சு.ரா. இவ்வாறு கூறுகிறார்:

".....அந்த அம்மாவுக்கு இவருடன் பேசுவதில் தயக்கம் இருந்தது. இவர் நிக்கர் போட்டுகொண்டு மீசையுடன் இருந்தார். அவர் அப்படியே வாழையை சுற்றி பார்வையை ஓட விடுவது போல் பாவனை செய்வார். அவரது நோக்கம் அந்த அம்மாவுடன் ஓர் உரையாடலை தொடங்க வேண்டும் என்பதுதான். அதுக்கு சம்பந்தமே இல்லாததுபோல் முகத்தை வைத்துகொண்டு அந்த அம்மா வடக்கே பார்த்து கொண்டிருந்தால், இவர் தெற்கே பார்த்து முகத்தை வைத்து கொண்டிருப்பார். அப்புறம் அந்த அம்மாவின் உலகத்திற்கு ஒத்துவரகூடிய கேள்வி ஒன்றை கேட்பார். ஈய பாத்திரம் தேய்ப்பது சுலபமா பித்தளை பாத்திரம் தேய்ப்பது சுலபமா என்பது போல் இருக்கும் அந்த கேள்வி. உடனே அந்த அம்மா ஈய பாத்திரம் தேய்ப்பதுதான் சுலபம் என்றோ பித்தளை பாத்திரம் தேய்ப்பதுதான் சுலபம் என்றோ சொல்லகூடும். அப்படி ஆரம்பித்து பத்து நிமிடத்துக்குள் அவள் மனதில் நெருக்கமான இடத்தை பிடித்துகொண்டு விடுவார்."

ஜீவாவின் எளிமை, யாரிடமும் சகஜமாக பேசும் அவரது குணம், தன் கட்சிக்கு ஆட்கள் சேர்க்கவேண்டும் என்பது தவிர வேறு எதிலும் ஆசை கொள்ளாத அவரின் பற்றுஅற்ற தன்மை, பல்வேறு சமயங்களில் கட்சியை மீறி தான் ஒன்றும் செய்ய இயலாத நிலை, ஆகியனவும் இன்ன பிற குணங்களும் சு.ரா.வால் எளிமையான மொழியில் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

ஜீவாவை அறியாதவர்கள் இதன் மூலம் ஜீவாவை ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.
Related Posts Plugin for WordPress, Blogger...