படிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்

நான் உணவகத்தில் இருந்த அந்த சிற்பத்தை பார்த்தேன். கல்லிலே செதுக்கப்பட்ட அந்த சிற்பம் அற்புதமாக இருந்தது. அடர்த்தியான பாக்கு வர்ணம் பூசபட்டிருந்தது. கால்சராய் அணிந்த சிறுவன் கிணற்றிலிருந்து வாளியில் நீர் எடுக்கிறான். கால்சராயின் மடிப்புகள் துல்லியமாக இருக்கின்றன. காற்றில் படபடக்கும் என்று தோன்றுகிறது. அவ்வளவு தத்ரூபம். கால்சராய் கெண்டை காலுக்கு மேலே மடித்து விட்டிருக்கிறது. நனைந்துவிடுமாம். என்ன கரிசனம். கிணற்றின் வெளிப்புறத்தில் கருங்கல் பதித்து இருக்கிறது. வாளி அந்தரத்தில் தொங்குகிறது. வாளியில் தண்ணீர் இல்லாமலிருக்கிறது. அப்படியானால் இனிதான் வாளியை கிணற்றில் முக்க வேண்டுமோ? ஒருவேளை கிணற்றிலிருந்து வாளியை மேலே இழுத்து இருக்ககூடும். சிற்பியால் தண்ணீரை வடிக்க முடியவில்லையோ. தண்ணீர் அந்தரத்தில் துளித்துளியாய் தெறிக்கவேண்டும். சிற்பியின் கைகளுக்கு சிக்காமல் தண்ணீர் நழுவி விட்டது போலும். என்ன அற்புத சிற்பம் அது. செய்த சிற்பியின் கைகளுக்கு பொன் காப்புதான் அணிவிக்க வேண்டும். கல்லிலே கலைவண்ணம் என்பது இதுதான் போலும்.

சாப்பிட தோன்றாமல் சிற்பம் மனதை மயக்குகிறது. பக்கத்திலிருப்பவர் ஏதோ சாப்பிடுகிறார். ஆனால் அதன் பெயர் தெரியவில்லை. கேட்கவும் கூச்சம். சாப்பிடவோ ஆசை. இருந்தும் வழக்கமாக சாப்பிடுவதையே சாப்பிட்டு திரும்புகிறேன்.படிப்பதும் அபபடித்தான். பெயர்கள் தெரியாததினாலேயே, தெரியும் பெயர்களையே படிக்கிறோம். அப்படியான நல்ல நல்ல பெயர்களை தன் வாழ்நாள் முழுதும் அறிமுகம் செய்து வந்தவர் க.நா.சு. அவர்கள்.

1987 லில் புதுயுகம் பிறக்கிறது என்ற பத்திரிகை வந்தது. வந்த வேகத்திலேயே நான்கைந்து இதழ்களோடு நின்றுவிட்டது. முதல் இதழில் சி.மோகன் அவர்கள், ஒரு கட்டுரையில் நல்ல நாவல்களை பட்டியல் இட்டிருந்தார். அந்த பட்டியலை இங்கே தருகிறேன்.


மிகச் சிறந்த நாவல்கள்:
இல்லை

சிறந்த நாவல்கள்:
1. மோகமுள்-தி.ஜானகிராமன்
2. ஜே.ஜே.சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி
3. புயலிலே ஒரு தோணி-ப.சிங்காரம்

நல்ல நாவல்கள்:
1. பொய்த்தேவு-க.நா.சு
2. இடைவெளி-எஸ்.சம்பத்
3. ஒரு புளியமரத்தின் கதை-சுந்தர ராமசாமி
4. அம்மா வந்தாள்-தி.ஜானகிராமன்
5. நாகம்மாள்-ஆர்.சண்முகசுந்தரம்
6. கிருஷ்ணப் பருந்து-ஆ.மாதவன்
7. நினைவுப் பாதை-நகுலன்
8. தண்ணீர்-அசோகமித்திரன்
9. பள்ளிகொண்டபுரம்-நீல.பத்மநாபன்
10. கடல்புரத்தில்-வண்ணநிலவன்

குறிப்பிடத்தக்க நாவல்கள்:
1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-ஜெயகாந்தன்
2. இதயநாதம்-ந.சிதம்பர சுப்ரமணியம்
3. தலைமுறைகள்-நீல பத்மநாபன்
4. செம்பருத்தி-தி.ஜானகிராமன்
5. புதியதோர் உலகம்-கோவிந்தன் (ஈழம்)
6. வேள்வித் தீ-எம்.வி.வெங்கட்ராம்
7. நித்ய கன்னி- எம்.வி.வெங்கட்ராம்
8. அசடு-காசியபன்
9. புத்தம் வீடு-ஹெப்சிபா ஜேசுதாசன்
10. ஒரு நாள்-க.நா.சு
11. சட்டி சுட்டது-ஆர்.சண்முக சுந்தரம்
12. நாளை மற்றுமொரு நாளே-ஜி.நாகராஜன்
13. அபிதா-லா.ச.ராமாமிருதம்
14. கரைந்த நிழல்கள்-அசோகமித்திரன்
15. வாடி வாசல்-சி.சு.செல்லப்பா
16. சாயாவனம்-சா.கந்தசாமி
17. கம்பா நதி-வண்ணநிலவன்
18. பிறகு-பூமணி
19. நிழல்கள்-நகுலன்
20. தலைகீழ் விகிதங்கள்-நாஞ்சில் நாடன்
21. பசித்த மானுடம்-கரிச்சான் குஞ்சு
22. ஜீவனாம்சம்-சி.சு.செல்லப்பா
23. புனலும் மணலும்-ஆ.மாதவன்
24. சடங்கு-எஸ்.பொன்னுதுரை (ஈழம்)
25. கடலுக்கு அப்பால்-ப.சிங்காரம்
26. தாகம்-கு.சின்னப்ப பாரதி

நான் பலவற்றை படித்திருக்கிறேன். சில இன்னும் கிடைக்கவே இல்லை. மீண்டும் எல்லாவற்றையும் மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். பல்வேறு வகையான வாசிப்பு அனுபவங்களை தருபவை இந்நாவல்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...