October 8, 2016

அறிவியல் பூர்வமான கிராபிக்ஸ் கதைகளை பதிப்பிக்க வேண்டும் -ஜெயமோகன்


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பௌலோ கொய்லோவின் ரஸவாதி, கிராபிக்ஸ் நாவலாக வெளிவந்துள்ளதைப் பற்றி பதிவொன்று எழுதினேன். அதை ஜெயமோகனுடன் பகிர்ந்துகொண்ட நான், அவரது பனிமனிதன் நாவலை கிராபிக்ஸ் நாவலாக யாராவது வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். இதை ஏன் சொல்கிறேனென்றால், கோவை ஆர்.எஸ்.புரம் சப்னா புத்தக மையத்தில் வாசகர் கலந்துரையாடலில் ஜெயமோகன் அறிவியல் பூர்வமான கிராபிக்ஸ் கதைககளை வெளியிட பதிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அந்த செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நம் பதிப்பாளர்கள் எப்போதும் ஏதாவது தூண்டுதல் இல்லாமல் எதையும் புதியதாகச் செய்ய மாட்டார்கள். ஜெயமோகன் செய்தி பதிப்பாளர்கள் செவிகளை எட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.

இன்றைய தமிழ் தி ஹிந்துவில் வெளியான, ஜெயமோகன் கருத்து பற்றிய செய்தி பின்வருமாறு:

அறிவியல் பூர்வமான கிராபிக்ஸ் கதைகளை பதிப்பிக்க, பதிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் சப்னா புத்தக மையத்தில் வாசகர் எழுத்தாளர்கள், வாசகர்கள் சந்திக்கவும், கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்த எழுத்தாளர் ஜெயமோகனை கவிஞர் புவியரசு, சப்னா புக்ஸ் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர்.

வெளிநாட்டுக்கார்கள் குறித்த நூல் ஒன்றை எடுத்து, அதில் குறிப் பிட்ட சில கார்களை சுட்டிக்காட்டி பேசினார். சிங்கப்பூரில் சமீபத்தில் தான் கண்ட கார் அனுபவங்கள் குறித்தும் விவரித்தார். ஒரு பேட்டரி கார் அரை மணி நேரம் சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் இயங்குவது குறித்தும், அது 200 கிமீ வேகத்தில் செல்வது பற்றியும் விவரித்தவர், நடிகர் ரஜினியிடம் அந்த காரை வாங்குமாறு தான் சொன்னதையும், அதற்கு அவர், ‘அம்பாஸிடர் கார் தான் எனக்கு எப்பவுமே’ என்று கூறியதையும் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

‘காந்தியும், அம்பேத்கரும் இரு நிலைகளில் நின்று ஒவ்வொருவரும் மற்றவரை மாற்றினர். அது ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற எனது நூலில் உள்ளீடாக வருகிறது. அம்பேத்கர் புத்த மதத் தில் ஆரம்பம் முதல் நாட்டம் கொண்டிருந்தார். 1918-ம் ஆண் டில் வர்ணாசிரம தர்மத்தை முழுமை யாக ஏற்றுக் கொண்டிருந்தார்.

1940-களில் ஜாதி மறுப்புத் திருமணம் என்பது தலித்- ஜாதி இந்து திருமணம் மட்டுமே, அதற்கு மட்டுமே என் ஆசீர்வாதம் உண்டு என தீர்க்கமாய் நின்றார். வர்ணாசிரம காந்தியை இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது அம்பேத்கரின் தத்துவார்த்தம். அதேபோல், பின்னாளில் அம்பேத்கர், தன் மக்களிடையே தண்ணீர் எடுக்கும் போராட்டம் ஒன்றை நடத்துகிறார். அந்த அஹிம்சை வழியிலான போராட்டத்துக்கு அம்பேத்கரை கொண்டு வந்து சேர்த்தது காந்திய தத்துவம். மைய அதிகாரமே சரி என்றார் அம்பேத்கர். மைய அதிகாரமே கூடாது, கலைத்து விடவேண்டும் என்றார் காந்தி. இருவரும் இறுதியில் ஒரே புள்ளியில் இணைகிறார்கள்.

ஆக, அம்பேத்கரை காந்தியின் தத்துவங் களும், காந்தியை அம்பேத்கரின் தத்துவங்களும் மாற்றின. அதனால்தான் இந்த காலகட்டத்தில் உருவான நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த இரண்டு தத்துவங்களும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன. உலகத்திலேயே ‘ஸ்பிரிச்சுவல்’ தன்மையுள்ள அரசியல் அமைப்புச் சட்டம் பிரெஞ்ச், அமெரிக்கா, இந்தியாவில் மட்டுமே உள்ளது. இங்கே மட்டும்தான் ஒரு அவதூறு வழக்கு நீதிமன்றங்களில் நிற்ப தில்லை. தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அந்த அளவுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அமைந் திருப்பதற்கு இந்த ‘ஸ்பிரிச்சுவல்’ தன்மையே காரணம்.

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது பெரியவர்கள், சிறியவர்கள் அதிகமாக வாங்கிப்படிக்கும் அளவுக்கு கிராபிக்ஸ் கதை நூல்கள் வந்துவிட்டன. அதில் அறிவியல் பூர்வக்கதைகள் நிறைய உள்ளன. இந்தியாவில் கதைக்கு சுத்தமாகப் பொருந்தாத படங்கள் போட்டும், ராமாயண, மகாபாரத கதைகளை கிராபிக்ஸ்ஸில் கொண்டு வருகிறார்கள். அதைத் தாண்டி புதுவிஷயங்களை இதில் உட்புகுத்த பதிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்றார் ஜெயமோகன்.

Read more ...

September 4, 2016

Habibi: சித்திரங்களினூடே ஓர் அற்புதப் பயணம்!

தற்போது நான் வாசித்து முடித்த ஒரு புத்கதம் Craig Thompson-ன் கைவண்ணத்தில் வெளியான Habibi என்ற கிராஃபிக் நாவல். அரேபிய நாட்டுப் பின்னனியில், குரான் கதைகளோடு இணைத்து பின்னப்பட்ட 670 பக்கங்கள் கொண்ட நாவல் இது. புத்தகம் முழுக்க இடம்பெற்றிருக்கும் கருப்பு-வெள்ளை ஒவியங்கள் அபாரமானவை. எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் அவரவர்க்கே உரிய உருவங்களோடும், குணங்களோடும் புத்தகத்தின் பரவலான பக்கங்களில் வலம் வருகிறார்கள்! அவர்கள் அனைவரையும் நிஜம் போலவே நம் கண் முன்னே நடமாடவிட்டிருக்கும் Craig Thompson-ன் அபாரமான கற்பனைத் திறனுக்கும் ஒவியத்திறனுக்கும் ஒரு சபாஷ் போடலாம்.

வாசிக்கவாசிக்க மிகப்பெரிய கற்பனை உலகம் நம்முன்னே விரிகிறது. நகரத்தின் பிரம்மாண்டமான சித்தரிப்புகள் அந்த நகரத்தில் நாமே வாழ்ந்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது. காட்சிகளுக்கேற்ப ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகபாவங்கள் வெளிப்படும் பாங்கு வாசிப்பின் இன்பத்தைப் பன்மடங்காக பெருக்குகிறது. வெறும் கோடுகளில் இந்த மாயத்தை Craig Thompson நிகழ்த்துகிறார். இந்தப் புத்தகத்தை வாசிப்பது ஒர் அற்புதமான அனுபவம் என்றாலும் இந்த நூல் சிறுவர்களுக்கானது அல்ல, முழுக்க முழுக்க பெரியவர்களுக்கானது.சில புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கியதும் அலுப்பும் ஆயாசமும் தோன்ற எப்போது முடியும் என்று சலிப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் இந்தப் புத்தகம் வாசிப்பு முடிந்தும், இன்னும் தொடராதா என்ற ஏக்கத்தையே ஏற்படுத்துகிறது. எப்போதும் ஒரே மாதிரியான புத்தகங்களை வாசித்து வாசித்து அயர்ச்சி ஏற்படுவதற்கு மாற்றாக இத்தகைய புத்தகங்களை ஒருமுறை வாசித்துத்தான் பாருங்களேன்.

Read more ...

வெய்யோன் கிடைத்தது!

வாசிப்பதற்கு இன்னும் காண்டீபம் காத்திருக்கும் நிலையில் நேற்று வெய்யோன் கிடைத்தது! 850 பக்கங்களில் ஆங்காங்கே சில படங்களுடன் கிழக்கு இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. புத்தகங்களை வெளியிடுவதன் அனுபவங்கள் கூடக்கூட புத்தகத்தின் கட்டமைப்பு நேர்த்தியாக வருகிறது என்றாலும் முதல் அத்தியாயத்தின் முதல் வாக்கியம் முற்றுப்பெறாமல் அந்தரத்தில் தொங்குவது அதிர்ச்சியளித்தது. வெறெங்கோ இடம்பெற வேண்டிய அந்த வரி அங்கே வந்த மாயம் என்னவென்று புரியவில்லை. முதல் வரியே கோணலென்றால் இன்னும் எத்தனை பிழைகள் உள்ளே மலிந்திருக்குமோ என்ற அச்சம் மேலிடுகிறது.

மேலும் பக்கங்கள் கச்சிதமாக நடுவில் அமையாமல் சற்றே விலகி அமைந்து விடுவது புத்தகத்தின் அழகைக் குலைத்து விடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கிழக்கு இவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சண்முகவேலின் ஓவியங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்று சொல்லமுடியாது. படங்களின் வர்ணங்கள் சரியாகப் பொருந்தாமல் விலகியிருப்பதான தோற்றம் ஓவியங்களில் காணப்படுகிறது. அது அச்சின் தவறா அல்லது ஓவியத்தின் உத்தியா என்பது தெரியவில்லை.

தற்போது அர்ஜுனனை வாசிப்பதா அல்லது கர்ணனை வாசிப்பதா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகபாரதத்தின் இரு பெரும் கதாபாத்திரங்கள் அர்ஜுனனும் கர்ணனும் என்பது யாவரும் அறிந்ததே. சிலருக்கு அர்ஜுனன் உகந்தவனாகவும் வேறுசிலருக்கு கர்ணன் உவப்பானவனாகவும் இருக்கலாம். எனக்குப் பிடித்தது யார் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். (அர்ஜுனனை டால்ஸ்டாய் என்று கொண்டால் கர்ணனை தஸ்தாயேவ்ஸ்கி எனலாம்!). இருவரில் யார் எனக்கு உவப்பானவன்? என்னதான் இருந்தாலும் அர்ஜுனனை விட ஒருபடி மேலே கர்ணனே உயர்ந்து நிற்கிறான். அதற்கான தேடலை மேற்கொள்ளும் முகமாக ஜெயமோகனின் இந்த இரு நூல்கள் உதவும் என்று நினைக்கிறேன். பயணத்தின் முடிவில் நான் கொண்டிருக்கும் அனுமானங்கள் மாறிவிடலாம். அப்படி மாறிவிடக்கூடாது என்ற விருப்பத்துடனே இந்நூல்களில் என் பயணத்தை தொடங்கப்போகிறேன்.

பல ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் YouTube தளத்தில் வீடியோக்களாக காண்கையில் தமிழ் புத்தகங்கள் பலவற்றையும் அப்படி அறிமுகம் செய்ய ஆவல் எழுகிறது. அதன் ஒரு முயற்சியாக வெய்யோன் புத்தகம் பற்றிய ஒரு வீடியோவை YouTube-ல் பதிவேற்றியிருக்கிறேன்.Read more ...

August 24, 2016

MAUS (GRAPHIC NOVEL): சித்திரம் பேசுதடி!


தற்போது படித்து முடித்த ஒர் அதிசயமான அற்புதம் மவுஸ் என்கிற படக்கதை புத்தகம். என்னவொரு படைப்பு! சித்திரத்தின் கைவண்ணத்தில் ஹிட்லர் காலத்து யூதர்களின் வாழ்க்கையை மிக அற்புதமாக சித்தரிக்கிறது இந்தப் புத்தகம். கருப்பு-வெள்ளையில் சுமார் 300 பக்கங்கள் உள்ள புத்தகத்தை நான் அசிரத்தையுடனே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கப் படிக்க கதையும், அதன் கதாபாத்திரங்களும் உள்ளிழுத்துக்கொள்ள வாசிப்பில் இதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். என்ன வெறும் படக்கதைதானே எனும் எளிமைப் படுத்துதலையும், உதாசீனத்தையும் முற்றாக களைந்து தூர வீசியது இந்தப் புத்தகம். உண்மையில் ஒரு நல்ல புத்தகம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது நல்ல புத்தகமே என்ற புரிதலை இந்தப் புத்தகம் ஏற்படுத்தியது.

இந்தப் புத்தகத்தை வாங்கும்போது எனக்குள்ளிருந்த முதல் தயக்கம் எலிகள் பேசும் ஒரு புத்தகம் என்பதுதான். வாசித்தபோதே எலிகள் என்பது ஒரு போர்வைதான் என்பது விளங்க, ஆசிரியர் மனிதர்களை எலிகளாக சித்தரிக்க வேண்டிய அவசியத்தையும் அறிய முடிந்தது. உயிர் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் ஒன்றுதான். அதில் மேலானது என்றோ கீழானது என்றோ ஏதுமில்லைதான். ஆனால் மனிதர்களாகி நாம் நம்மைவிட மற்ற உயிர்களை கீழாகவே மதிக்கும் மனோபாவம் கொண்டிருக்கிறோம். மனிதர்களை எலிகளைப்போல நடத்தியதோடு அவர்களை கொன்று குவித்தான் ஹிட்லர் என்பதை வெளிப்படுத்தவே ஆசிரியர் யூதர்களை எலிகளாக, ஜெர்மானியர்களை பூனைகளாக சித்தரித்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.


Art Spiegelman கதையை கட்டமைத்திருக்கும் விதம் அலாதியானது. தந்தையின் நினைவுகளை தனயன் படக்கதையாக எழுதுகிறான் என்பதனூடே கடந்த காலமும் நிகழ்காலமும் கதையில் ஊடாடி வருகிறது. ஒரு நாவலுக்குண்டான அம்சத்தை படக்கதையில் மிக அற்புதமாக வெளிப்படுத்தியதன் வாயிலாக ஒர் சிறந்த ஓவியராக மட்டுமின்றி சிறந்ததொரு கதைசொல்லியாகவும் தன்னை நிறுவிக் கொண்டுள்ளார் Art Spiegelman. அவரது கைவண்ணத்தில் படங்களோடு கதையும் இணைந்து ஓர் ஒப்பற்ற அனுபவத்தை மவுஸ் தருகிறது. அந்த அனுபவத்தின் அலாதியான உணர்வை நினைந்து நினைந்து வியக்காதிருக்க முடியவில்லை. IT IS JUST A FANTASTIC EXPERIENCE!

“சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி” என்ற அழகான திரை இசைப்பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த பாடலின் குழைவு நெகிழ்வினூடே அளவற்ற சோகம் நிறைந்திருப்பது போலே இந்தப் புத்தகத்தின் சித்திரங்களின் ஊடே ஓர் இனத்தின் அளவற்ற சோகம் நிறைந்திருக்கிறது. கல்லிலே சிற்பங்களை செதுக்குவது போன்று காகிதத்திலே சித்திரங்களை செதுக்கியிருக்கிறார் ஆசிரியர். நான் இதுவரை எத்தனையோ புத்தகங்களை வாசித்திருக்கிறேன் பின்னர் மறந்துமிருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகத்தை என்றென்றும் மறக்க முடியாதவாறு செய்துவிட்ட Art Spiegelman அவரது படைப்பாற்றலின் முன் நான் தலைவணங்கி நிற்கிறேன். வாசிப்பில் தவறவிடக்கூடாத புத்தகம் இது என்று உறுதியாகச் சொல்லலாம்.

Read more ...

Life is Beautiful (1997): போர்க்களத்தில் ஒரு கீதை!


நான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்குகையில் பார்த்த முதல் வரிசைத் திரைப்படங்களில் ஒன்று Life is Beautiful. இரண்டாவது உலகப்போர் பின்னனியில் எண்ணற்ற திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இத்திரைப்படம் முற்றும் மாறான ஒரு தொனியில் போரின் அவலத்தை, ஹிட்லரின் அராஜகத்தை சித்தரிக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்வதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று உடன்பாட்டு முறை எனில் மற்றது எதிர்மறை முறை. எதனுடனும் எதிர்த்துப் போராடுவது ஒரு வழி என்றால் எல்லாவற்றுடனும் இயைந்து பயணிப்பது மற்றொரு வழி. தன் வாழ்கையின் இணக்கமான சூழ்நிலையோடு மட்டுமின்றி, இணக்கமற்ற சூழ்நிலையிலும் எவ்வாறு நாயகன் இயைந்து வாழ்கிறான் என்பதை மிக அற்புதமாகப் பேசுகிறது Life is Beautiful.

போர் ஒரு அசாதாரணமான சூழ்நிலை. அங்கே வாழ்க்கையை வாழ்வதைவிட உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே ஒரு பெரும் போராட்டம். அந்த சூழலில் வாழ்க்கை ஒருபோதும் அழகானதாக இருக்க முடியாது மாறாக பயங்கரமானதாகவே இருக்கும். ஆனால் தன்னுடைய இயல்பான குணத்தால் அந்த வாழ்க்கையை அழகானதாகச் செய்துகொள்வதோடு, தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் அவ்வாறே எதிர்கொள்ள பயிற்றுவிக்கிறான் நாயகன். திரைப்படம் பார்க்கும்போதும், பார்த்து முடித்த பிறகும் அவனது அந்த மனோபாவம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற துணிச்சல் வந்துவிடுகிறது. அதுவே இத்திரைப்படம் நமக்குத் தரும் அற்புதமான அனுபவம். போர்க்களத்தின் மத்தியில் கிருஷ்ணன் நிகழ்த்தும் கீதா உபதேசத்திற்கு நிகரானது இது! கீதையை முழுமையாக உள்வாங்க இத்திரைப்படத்தைவிடச் சிறந்து வழி வேறெதுவுமில்லை!


திரைப்படம் ஆரம்பிக்கும் விதமே அலாதியானது. நாயகன் பயணிக்கும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்கிறது. அங்கே அவன் தான் சந்திக்கும் பெண்ணிடத்தில் தன்னை ஓர் இளவரசன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதோடு அவளை இளவரசி என்றும் அழைக்கிறான். அவன் ஏதோ விளையாடுகிறான் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அவன் அந்த விளையாட்டுத் தனத்துடனே எதிர்கொள்கிறான். இறுதியில் அவன் சாவையும் அவ்வாறே சந்திக்கிறான் என்பதை அறியும்போது நம் மனம் நெகிழ்ந்து விடுகிறது. அந்த கடைசி தருணத்தை அத்தனை இயப்பாக சித்தரித்த இயக்குனரின் மேதமைக்கு ஒரு சபாஷ் போடலாம். வாழ்வது மட்டுமல்ல சாவதும் இயல்புதான் என்பதை உணர்த்தும் கீதையின் சாரமாகவே அதை நான் காண்கிறேன்.

கடைகளில் “யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை” என்ற வாசகத்தை தன் பையனுக்கு விளக்கும்போதும், குதிரையின் மீது “யூதக் குதிரை” என்று எழுதியுள்ளதைக் காட்டி தன் மாமா வருத்தப்படும்போது, அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, “யூத சர்வர்“ என்று தன் மீது எழுதவில்லையே என்று நாயகன் சொல்வதும் இத்திரைப்படத்தின் ஆதார இயல்பான Life is Beautiful என்பதற்கு வலு சேர்க்கிறது. திரைப்படம் முழுதுமே இத்தகைய நுட்பமான காட்சிகளின் தொகுப்பு என்றே சொல்லவேண்டும். நாயகி யூதப் பெண்ணாக இல்லாவிடினும் ஜெர்மானிய வீரர்கள் அவள் கணவனையும், குழந்தையையும் கூட்டிச்செல்ல, அவளும் அவர்களோடு, எல்லாத் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ள இணைகிறாள். இருவரும் சந்திக்க முடியாத அந்த சூழலில் அவளுக்குப் பிடித்தமான பாடல் ஒன்றை இசைத்தட்டில் நாயகன் இசைக்க, அதைச் செவிமடுப்பதன் வாயிலாகவே அவள் அவனோடு நெருங்குகிறாள் என்பதை இயக்குனர் உணர்த்துவது கவிதை என்று சொல்லத்தக்க ஒரு காட்சி!


அந்த சூழ்நிலையில் இருக்கப் பிடிக்காமல் பையன் வீட்டுக்குப் போகலாம் எனும்போது, அங்கே நடப்பவை அனைத்தும் ஒரு விளையாட்டு என்றும், வென்றவர்களுக்கு பீரங்கி பரிசு என்றும் சொல்லி, நாயகன் அந்தச் சூழ்நிலையை முற்றாக ஒரு விளையாட்டாக சித்தரித்துவிடுவது கதையின் முக்கியமான பகுதி. வாழ்க்கையை விளையாட்டாக வாழச்சொல்லி, அப்படி வாழும் போதே வாழ்க்கை அழகானதாக இருக்கும் என்றும் சொல்லும் இத்திரைப்படம் ஒர் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. உலகப்போர் நடந்ததும் அதில் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதும் யதார்த்தமான உண்மை. ஆனால் அந்த யதார்த்தத்தை யதார்த்தமாக மட்டுமே காட்டுவது ஒரு வகையான படைப்பாற்றல் எனில் அந்த யதார்த்தத்திலிருந்து முற்றும் மாறான ஒன்றை வெளிப்படுவத்தவது அபரிமிதமான படைப்பாற்றல். அதை Roberto Benigni ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறார்.

Read more ...

August 15, 2016

பக்கத்து இருக்கை!


பேருந்துப் பயணத்தின் மகிமைகள் பற்றி சில எழுதலாம் என்று தோன்றியது. உண்மையில் நம்முடைய சகபயணிகளிடையே நாம் பேருந்தில் பயணிப்பது ஒரு பேரனுபவம். சகிப்புத் தன்மையின் உச்ச பட்ச அனுபவத்தைப் பேருந்துப் பயணத்தில் அன்றி நாம் வேறெங்கும் கற்க முடியாது. நம்முடன் பயணிப்பவர்கள் சக பயணிகள் அல்ல மாறாக அவர்கள் சக எதிரிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, நம் மனதில் குரூரத்தையும் கொலை வெறியையும் உண்டுபண்ணுவது பேருந்துப் பயணத்தின் அலாதியான சிறப்பு! பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் மனிதர்களில் பலர் இன்னும் பரிமாண வளர்ச்சி அடையாமல் விலங்குகளாகவே இருப்பதைக் காணும் பாக்கியம் பேருந்துப் பயணத்திலேயே நமக்குக் கிடைக்கிறது.

பேருந்தில் இருக்கை பிடிக்க நம் உடன் பிறவா சகோதர, சகோதரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை வியப்பில் வாயடைக்கச் செய்பவை. அதில் அவர்கள் காட்டும் வீரமும், ஆவேசமும் வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கூட நாம் காணமுடியாதது. என்ன ஆவேசம்! என்ன ஒரு போராட்டம்! அடுத்தவனை உதைத்து மிதித்து, அவன் மீது சாடி விழுந்து, அவன் முகவாயில் முழங்கையால் ஓங்கி இடித்து, கால்களை நச்சென மிதித்து, இருக்கையில் வெற்றிக் களிப்புடன் உட்காரும் அவர்கள் ஒவ்வொருவரும் நவீனப் பாண்டவர்கள்! கௌரவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களைத் துவம்சம் செய்து இருக்கையைக் கைப்பற்றும் வித்தையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். எதிர்த்துப் போராட முடியாமல் சிலர் ஒதுங்கி, இயாலாதவர்களாக நிற்பது பரிதாபமான காட்சி. இந்த அப்பாவிகளையும் பூமி மாதா இந்த நிலத்தின் மீது தாங்கிப் பிடித்திருக்கிறாளே என்ற எண்ணம் நம் நெஞ்சத்தைப் பெருமிதத்தால் விம்மச் செய்யும்.

இத்தோடு பிரச்சினை முடிந்ததா என்றால் இல்லை. உட்கார்ந்திருந்தாலும் நின்றிருந்தாலும் நம்மை இம்சிப்பதில் நம் சக உதிரங்களுக்கு இருக்கும் உற்சாகம் சொல்லி மாளது! உங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தால் முனியப்பனுக்குக் கிடா வெட்டி பொங்கல் வைப்பதாக பிரார்த்தித்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு இடங்களில் அமர்ந்திருக்கும் போது இடத்திற்குத் தகுந்தாற் போல் வெவ்வேறு அனுபவம் கிட்டும்! இடது கைப்பக்கமுள்ள இரண்டு சீட்டில் வலப்புறமாக அமர்ந்திருப்பது ஒரு பெரிய கலை. ஏனென்றால் பக்கத்துச் சீட் ஆசாமி தன் அருகே ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான் என்ற பிரக்ஞையின்றி மோனத்தில் அமர்ந்திருப்பார். எனவே குறிப்பறிந்து நகர்ந்து இடம் கொடுக்கும் ஒரு ரத்தத்தின் ரத்தத்தையாவது இதுவரை நான் பேருந்தில் கண்டதில்லை. எனவே நமது உடலின் வலது பக்கப் பகுதி இருக்கைக்கு வெளியே இருக்கும்படிதான் அமர முடியும். பக்கதில் இருப்பவர்தான் அவரது இருக்கையை விலைகொடுத்து வாங்கியிருக்கிறாரே! நாம் சற்றே நெளிந்து வளைந்து பார்த்தாலும் ஆசாமி அசைந்து கொடுக்கமாட்டார். 

சுந்தர ராமசாமியின் வரிகள் ஒவ்வொரு பேருந்துப் பயணத்திலும் கண்டிப்பாக என் நினைவில் வரும். “பக்கத்து இருக்கையில் இருந்துகொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவது. இரண்டு இருக்கையில் அமர்ந்து தொலைக்கும் உடம்பும் இந்த ஜன்மத்தில் லபிக்கவில்லை.” (சரியான வரி நினைவில்லை). போதாதற்கு பக்கத்து ஆசாமி தூக்கத்தில் நம் மேலே விழுந்து பிரண்டாதவராக இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்வது நல்லது. கடவுள் செவி சாய்த்தால் நமது அதிர்ஷ்டம்! இல்லையேல் நாம் முன் ஜன்மத்தில் செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டணையாகக் கருதிப் பிரயாணத்தைத் தொடரவேண்டியதுதான்!

சில சமயம் ஜன்னலோர ஆசாமி நம்மைப் போன்றவராக இருந்துவிட்டால் அப்போது ஆபத்து நமக்கு வலதுபுறமாக நிற்கும் ஆசாமிகளிடமிருந்து வரும்! நமது தோள்பட்டையை அது ஒரு மனிதனின் தோள் என்று கருதாது, அதுவும் இருக்கைதான் என்று நன்றாக சாய்ந்து எருமையைப் போல உரசி இடித்துக்கொண்டு பயணிக்கும் ஆசாமிகள் அநேகம். கடவுள் அவர்களின் இடுப்பை வலிமையாக வைக்கமால் நம் தோளின் வலிமையைச் சோதிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. நாம் தலையை உயர்த்தி அவரை நிமிர்ந்து பார்த்து முறைத்தாலும் அவர்கள் அதைப்பற்றி ஏதும் அறியாதவராக, அப்படி ஒரு செய்கையில் தங்கள் உடல் ஈடுபட்டிருக்கிறது என்பது பற்றிய உணர்வே லவேசமும் இல்லாதவர்களாக இருக்கும் அவர்களின் மனிதாபிமானம் போற்றுதற்குரியது. அவ்வப்போது நடத்துனர் என்ற ஆசாமி இடையிடையே அந்தக் கூட்டத்தில் நீந்தித் தத்தளித்து நம் முகவாயில் அவரது பையால் இடித்துச் செல்வது நமக்குக் கிட்டும் போனஸ் அல்லது இலவசம்! அதுவும் அவர் பெருத்த சரீரமாக இருந்துவிட்டால் அவர் கடந்து போகும் ஒவ்வொரு தடவையும் கதவிடுக்கில் சிக்கிய விரலாக நம் எலும்புகள் நொருங்கிவிடும்.

வலது புறத்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில் இடது ஓரமாக அமர்ந்தால் ஏறக்குறைய மேற்சொன்ன அனுபவம்தான். என்ன ஆங்காங்கே குறுக்குக் கம்பிகள் இருப்பதால் சக உதிரங்கள் நம் மீது உராயும் உராய்வின் விசை குறைவாக இருக்கும். ஆனால் நடு இருக்கையில் இடம் பிடித்தால் அவ்வளவுதான். பாற்கடலைக் கடைந்த தேவர்கள் அசுரர்கள் சகிதமாக இருபுறமும் நம்மைக் கடைந்து எடுத்துவிடுவார்கள். நாம் கைகளைத் தொங்கவிடமுடியாமல் இருக்கையின் கம்பிகளையே நீட்டிப் பிடித்தபடி பயணிக்க வேண்டும். இரண்டு புறமும் இருப்பவர்கள் தாங்களும் ஏதாவது ஒரு கையைப் அப்படிப் பிடித்தால் கொஞ்சம் லகுவாக வரலாமே என்ற எண்ணம் சற்றேனும் மூளைக்கு எட்டாதவர்களாக நம்மைக் கசக்கிப் பிழிவார்கள். அதுவும் பெருத்த உடல்களுக்கிடையே மாட்டிக் கொண்டால் சாலை போடும் இயந்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டது போல மூச்சுத் திணற வேண்டியதிருக்கும்.

கூட்ட நெரிசலில் நின்று கொண்டு பயணிப்பது வேறு ஒரு மாதிரியான அனுபவம். கால் வைத்து நேராக நிற்கமுடியாமல் கால்களை எக்ஸ் ஒய் போல் இடம் கிடைத்த இடத்தில் வைத்து பயணிக்க வேண்டும். சில சமயம் நம் கால்கள் எங்கே இருக்கின்றன என்பதே நமக்குத் தெரியாது. சக பயணிகள் இறங்கும் போதும் ஏறும் போதும் நம் கால்களை ஏதோ செத்த எலிகளை மிதிப்பது போல மிதித்துச் செல்வார்கள். பலர் கம்பிகளைப் பிடிக்கும் விதமே அலாதிதான். அது நம் காதுகளை உரசியபடி நாம் தலையை நேராக வைக்க முடியாதபடி தடுக்கும். எனவே அவஸ்தையுடன் தலையைச் சற்றே சாய்த்து வைக்கவேண்டியதிருக்கும். அப்போது எதிராளியின் எண்ணெய்த் தலை நம் கன்னத்தில் உரசி அருவருப்பை உண்டாக்கும். சில சமயம் கைகளைத் தூக்கிப் பிடித்தமையால் சட்டையின் அக்குள் பகுதியிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் நம்மை மூச்சுத் திணறவைக்கும்! இன்று ஒரு நாளோடு சரி, இனிமேல் ஜன்மத்திற்கும் கூட்டமாக இருக்கும் பேருந்தில் ஏறக்கூடாது என்று சங்கல்பம் செய்துகொள்வோம். ஆனால் ஏறிய பிறகு இத்தகைய சோதனைகளை நம் பின்னால் அனுப்பிவைக்கும் கடவுளுக்கு இரக்கமே இல்லையே என்ன செய்ய? ஒவ்வொரு பயணம் முடிந்து திரும்புவதும் ஒரு சாகசம்தான்! இறங்கி நிலத்தில் கால்வைத்து வெளிக்காற்றைச் சுவாதித்த நொடி சுதந்திரம் என்பதன் அர்த்தம் நமக்குத் தெளிவாகப் புரியும்.

ஒரு பேருந்தில் எத்தனை பேரை ஏற்ற முடியும் என்ற கணக்கு நடத்துனருக்குத் தெரிவதில்லை என்பதைவிடத் தெரிந்துகொள்ள விருப்பப்படவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு நினைவெல்லாம் மாலையில் எவ்வளவு சேரும் என்ற கணக்கின் மீதுதான். ஏற்கனவே இத்தனை பேர் பயணிக்கும் பேருந்தில் இன்னும் எத்தனை பேர் போக முடியும் என்ற விவேகம் பயணிகளுக்கும் இருப்பதில்லை. எனவே இதுதான் கடைசிப் பேருந்து என்பதாகவே ஒவ்வொரு பேருந்தும் நிரம்பி வழிந்து செல்கிறது. பேருந்து என்றில்லை எல்லாவற்றிலும் முந்துவதும், முதலில் செல்வதும் இன்று மனிதனின் மிகப் பெரிய சமூக நோயாக ஆகியிருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால் வாழ்க்கையில் விபத்துகள் நேர்வதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் சொல்ல ஏராளமாக இருக்கிறதுதான். ஆனால் சொல்வதாலும் கேட்பதாலும் மட்டுமே மனிதர்கள் மாறிவிடுவார்கள் என்று நினைப்பது அறிவீனம். அப்படி மாறுவது என்பது உண்மையானால் எத்தனை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் மாறியிருக்க வேண்டும்!

பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு எவ்வளவோ சொல்கிறார். ஆனால் அவன் செவிசாய்க்கவில்லையே. திரும்பத் திரும்பத் தன் சந்தேகங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறான். பகவானும் விடாமல் ஸாங்கிய யோகத்திலிருந்து ஆரம்பித்து நீண்ட உபதேசம் செய்கிறார். அவர் சொல்வது ஒன்றுதான். அவரிடம் இருக்கும் மாவையே தோசை, இட்லி, பனியாரம், ஊத்தப்பம் என்று சுட்டு தருகிறார். ஏதாவது ஒன்று அவனுக்குப் பிடித்துவிடாதா என்ற நப்பாசையில். ஆக, மனிதர்கள் எதையும் கேட்பதில்லை! கேட்பதாக நடிக்கிறார்கள். கேட்பதால், படிப்பதால் மாறியவர்கள் சொற்பமானவர்களே. அவர்களே இன்றய சமூகத்தில் எதற்கும் லாயக்கற்றவர்களாக, முந்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். பேருந்தில் இருக்கை பிடிப்பதாக இருந்தாலும் வாழ்க்கையில் இடம் பிடிப்பதாக இருந்தாலும் தோற்றுப் போகிறவர்கள் இத்தகைய துரதிருஷ்டசாலிகளே!

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் செப்டம்பர் 5, 2014)

Read more ...

August 10, 2016

THE ALCHEMIST :A GRAPHIC NOVEL


சிறுவயதில் நான் மிகவும் விரும்பி படித்த புத்தகங்கள் எனில் அவைகள் படக்கதைள் தான். இரும்புக்கை மாயாவியும், டெக்ஸ் வில்லரும், மூகமூடி மனிதனும் இன்னும் பலரும் அந்தப் பருவத்தை இனியதாகச் செய்தார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. திரும்பக் கிடைக்காத அந்த காலங்களை இன்றும் நினைத்துப் பார்க்கையில் மனதில் அந்த இனிப்பின் சுவையை அறிய முடிகிறது! எவ்வளவு அற்புதமான காலங்கள்! ஒரு மனிதன் வாழ்க்கையில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதில் படக்கதை புத்தகங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. அவற்றுக்கு தன்னை முற்றாக பறிகொடுத்தவன் பிறகு ஒருபோதும் வாசிப்பை நிறுத்தவியலாது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதுவே அவனை கடைசிவரை வாசிப்புடன் கட்டிப்போடுகிறது.

சமீபத்தில் நான் படித்த ஒரு படக்கதை புத்தகம்தான் ரஸவாதி. பௌலோ கொய்லோவின் உலகப் பிரசித்திபெற்ற இந்தப் புத்தகத்தை ஹாப்பர் காலின்ஸ் பதிப்பகம் படக்கதை வடிவத்தில் மிக அற்புதமாகக் கொண்டு வந்துள்ளது. தற்போது காமிக்ஸ் உலகம் எப்படியிருக்கிறது என்று நான் அறியேன். ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் அதை அறிய நேர்ந்தபோது வியந்துபோனேன். தற்போதைய காலகட்டம் சிறுவர்களின் வாசிப்புக்கு எத்தகைய பெரும்பங்கை ஆற்றுகிறது என்பதை நினைக்கும்போது அதைச் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. சிறுவர்களின் முன்னே வாசிப்பிற்கு அற்புதமான உலகம் விரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதை எத்தனை தூரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் கேள்வி. ஒருபுறம் வாசிப்பு அவர்களை ஈர்க்க மறுபுறம் பிற விஷயங்களும் அவர்களை இழுக்கின்றன. இந்த இழுபறியில் அவர்கள் எந்தப் பக்கம் சாய்கிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் அவர்களின் எதிர்காலம் மட்டுமின்றி காலத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.


சுவை, மணம், திடம் குன்றாமல் ரஸவாதி நாவலை சாறு பிழிந்து கொடுத்திருப்பது போற்றுதற்குரியது. அதற்காக அதன் ஆசிரியரும் ஓவியரும் எத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கையில் அவர்களின் பணி எத்தனை கடினமானது என்பதை உணர முடிகிறது. நாவலை வாசித்துச் செல்கையில் திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தை வாசிப்பு தருகிறது என்பது முக்கியமானது. முக்கியமான இத்தகைய எத்தனை எத்தனை புத்தகங்கள் இப்படி காமிக்ஸ் வடிவத்தில் சிறுவர்களிடம் சென்றடைய வேண்டியிருக்கிறது என்பதை ஒரு பெரும் பட்டியலே போடலாம். அத்தனையும் அவர்களுக்குக் கிடைத்துவிடும் போது இந்தக் காலமும் இனிவரும் காலமும் பொற்காலமாக மாறிவிடும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். நான் எழுதும் இந்தப் பதிவு ரஸவாதியின் படக்கதையை வாசிக்க யாரேனும் ஒரு சிறுவனுக்கான வாய்ப்பாக அமையுமானால் அதுவே இந்தப் பதிவின் பலன் என்று கருதுகிறேன்.

படங்கள் சேய்மை அண்மைக் காட்சிகள் நிரம்பியதாய் கண் கவரும் வண்ணங்களுடன் அமைந்திருப்பது வாசிப்பிற்கு இன்பம் ஊட்டுவதாக இருக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இப்புத்தகத்தை ரசித்து, அனுபவித்துப் படிக்க முடியும். புத்தகத்தின் தொடக்கம் முதல் அதன் இறுதிவரை நமதேயான கற்பனை உலகத்தில் உற்சாகத்துடன் உலவ முடியும். கதாபாத்திரங்கள் அனைவரும் நிஜம் போலவே நமது கண் முன்னே உரையாடுகிறார்கள். இருநூறு பக்கங்கள் உள்ள இந்த நாவலை அவ்வளவு எளிதாக வாசித்துவிட முடியாது என்பதே இந்தப் புத்தகத்தின் செறிவையும் அடர்த்தியையும் புலப்படுத்துகிறது.

இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது பௌலோ கொய்லோ, “ரஸவாதியை படக்கதையாக கொண்டுவருவது என்னுடைய கனவுகளில் ஒன்று. இந்நாவல் எனது எதிர்பார்ப்பிற்கு மேலாகவே வந்துள்ளது. நான் இந்நாவலை எழுதும்போது எதைக் கற்பனை செய்தேனோ அதை இந்நாவல் பகிங்கிரப்படுத்தியுள்ளது” என்கிறார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவரும் உணர்வார்கள். இந்நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஒவ்வொருவரும் இதன் நாயகன் சந்தியாகுவுடன் பயணித்து, அவனது இன்ப துன்பங்களில் பங்கு கொள்வதோடு, அவர்கள் தங்களுக்கான புதையலை தாங்களே கண்டடைந்து கொள்வார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம்.

Read more ...